ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆறு தமிழர்கள் விடுதலை! தமிழின நீதிக்கான போராட்டம் வெற்றி!

 ஆறு தமிழர்கள் விடுதலை! தமிழின நீதிக்கான போராட்டம் வெற்றி!

==================================

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

கி. வெங்கட்ராமன் அறிக்கை!

==================================



மகிழ்ச்சி! தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி! மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இராசீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட நாள் சிறையில் வாடிய ஆறு தமிழர்களுக்கும் விடுதலை என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. 


ஏற்கெனவே, 2022 மே 18 அன்று, இவ்வழக்கில் அநீதியான முறையில் தண்டிக்கப்பட்ட அ.ஞா. பேரறிவாளன் விடுதலையானார். 


எந்த சட்ட ஞாயமுமின்றி, தமிழ்நாடு அமைச்சரவை பரந்துரையின் மீது ஆளுநர் செயல்பட மறுத்ததாலும், உள்நோக்கத்தோடு இவர்களது கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாலும், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் படியான சட்ட வாய்ப்புகள் அடைக்கப்பட்ட நிலையில், சிறையிலிருந்த காலங்களில் நன்னடத்தையோடு இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 வழங்குகிற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இன்று (11.11.2022) நளினி, முருகன், இரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயஸ், செயக்குமார் ஆகிய ஆறு தமிழர்களையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. 


நீதிபதிகள் சி.ஆர். கவாய், பி.வி. நாகரத்தினா ஆகியோர் கொண்ட அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே, அ.ஞா. பேரறிவாளனுக்கு முன் விடுதலை அளித்து, 18.05.2022 அன்று அளித்த தீர்ப்பைப் பின்பற்றி இத்தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 


கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் நாள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது எனத் தீர்மானித்து, அதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கோப்புகளாக 2018 செப்டம்பர் 11 அன்று, ஆளுநருக்கு அனுப்பியது. 


எப்போதும் தமிழினப் பகையோடு நடந்து கொள்ளும் இந்திய அரசின் முகவர்களான ஆளுநர்கள் பன்வாரிலால் புரோகித் மற்றும் ஆர்.என். இரவி ஆகியோர் இக்கோப்பில் கையெழுத்திட மறுத்துக் காலம் கடத்தினார்கள். அரசமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறினார்கள். 


இந்நிலையில், இந்தச் சட்ட மீறலையும் அநீதியையும் தெளிவாக விளக்கி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்த வழக்கில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதில் தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்தது. 


நீதிமன்றத்தில் பல்வேறு அழுத்தங்கள் வந்ததற்குப் பிறகும், இந்த விடுதலைக் கோப்பில் கையெழுத்திட மறுத்த ஆளுநர் ஆர்.என். இரவி, சட்டங்களை அப்பட்டமாக மீறி இவர்களது கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். 


இந்த அநீதிகளை உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞர்கள் எடுத்துரைத்ததற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் தனக்குரிய அரசமைப்புச் சட்ட உறுப்பு 142இன் படியான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்தது. இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையின் மீது செயல்படாமல், சட்ட அழுத்தங்களுக்குப் பிறகு வேண்டுமென்றே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநரின் பெயரை கடுமையாகத் திறனாய்வு செய்தது. அப்போதே, இவ்வழக்கில் மீதியுள்ள சிறையாளிகள் நீதிமன்றத்தை அணுகினால், இதே வாய்ப்பே உண்டு என்றும் தெளிவுபடுத்தியது. 


இந்த நிலையில், நளினி, இரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக தொடுத்த முறையீட்டு வழக்கில், இன்று (11.11.2022) அந்த இருவருக்கும் மட்டுமின்றி, மொத்தமுள்ள ஆறு பேருக்கும் முன் விடுதலை வழங்கி நீதிபதிகள் சி.ஆர். கவாய், பி.வி. நாகரத்தினா அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  


முப்பதாண்டுகள் ஒட்டுமொத்தத் தமிழினமும் நடத்திய நீதிக்கான போராட்டம், தாமதமாகவாவது வெற்றியடைந்திருக்கிறது! இவ்வழக்கில் தொடர்ந்து போராடிய வழக்குரைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்! 


விடுதலை வழங்கப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களான முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விரும்பினால் தமிழ்நாட்டில் கவுரமான முறையில் தங்கியிருப்பதற்கும், அல்லது வேறு எந்த நாட்டிற்காவது செல்ல விரும்பினால், அதற்கும் உரிய ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.