ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை!

உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை!

==================================

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை! 

==================================

 

உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு இன்று (07.11.2022) பட்டியல் வகுப்பார், பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்கு சமூகநீதி அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை சம்மட்டி கொண்டு தாக்கும் வகையில் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு பெரும்பான்மை அடிப்படையில் வழங்கிய தீர்ப்பு இது! 


நீதிபதிகள் தினேஷ், மகேசுவரி, பேலா எம். திரிவேதி, ஜே.பி. பர்திவாலா ஆகிய மூவரும், முன்னேறிய வகுப்பாரில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 103ஆவது திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தார்கள். ஆனால், தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி எஸ். இரவீந்திரபட் இருவரும் தனியே அளித்த சிறுபான்மைத் தீர்ப்பில் சட்டத் திருத்தம் 103 செல்லாது என்று கூறியிருந்தார்கள். இது செயலுக்கு வராது! 


முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆதரித்துத் தீர்ப்பெழுதிய மூன்று நீதிபதிகளும் – இந்த சட்டத் திருத்தம் சமூகநீதியின் பாற்பட்டது தான் என்றும், இவர்களுக்கு வழங்கியுள்ள இந்த இடஒதுக்கீடு ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுள்ள பட்டியல் வகுப்பார் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் – இப்போது அனுபவித்து வரும் இடஒதுக்கீடுகளைப் பாதிக்காது என்றும் கூறியுள்ளனர். 


நீதிபதி பேலா எம். திரிவேதி ஒருபடி கூடுதலாகச் சென்று, “சமமற்றவர்களைச் சமமாகக் கருதக்கூடாது. இடஒதுக்கீடே இல்லாத முன்னேறிய வகுப்பார் இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்குச் சமமாக உள்ளார்கள் என்று கருதக் கூடாது” என்று கூறியுள்ளார். இது எவ்வளவு பெரிய அபாண்டம்! 


கல்வி வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் காலம் காலமாகப் பறித்துக் கொண்டு, ஏகபோகமாக அனுபவித்து, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை, பின்னுக்குத் தள்ளி, கல்வியற்றவர்களாக, கண்ணியமான அரசு வேலைகள் அற்றவர்களாக ஆக்கியவர்கள் முன்னேறிய வகுப்பார்! 


இந்த சமூக அநீதியை ஓரளவாவது நீக்கி, சமூகநீதி வழங்கவே இடஒதுக்கீட்டுக் கொள்கை வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே வந்தது. இப்பெரும்பான்மைத் தீர்ப்பு, முன்னேறிய வகுப்பார் தாம் சமூகநீதி இழந்தவர்கள் என்று கூறுகிறது. 


அடுத்து, ஓர் அபாண்டச் செய்தியை உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகளும் கூறுகிறார்கள். முன்னேறிய வகுப்பார்க்கு அளிக்கப்பட்ட 10 விழுக்காடு இடஒதுக்கீடு, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் வாய்ப்புகளைப் பறிக்கவில்லை என்கிறார்கள். இப்படி உண்மைக்குப் புறம்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேசலாமா? 


தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. மீதமுள்ள 31 விழுக்காட்டிலும் மேற்படி பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் மற்றும் முன்னேறிய வகுப்பார் அனைவரும் மதிப்பெண் உள்ளிட்ட தகுதிகள் அடிப்படையில் இதுவரை தேர்வு பெற்றார்கள். இதில் 10 விழுக்காட்டை முன்னேறிய வகுப்பார்க்கு ஒதுக்கிய பின், எஞ்சியுள்ள 21 விழுக்காட்டில் முன்னேறிய வகுப்பார், பட்டியல் வகுப்பார், பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என மூன்று தரப்பினரும் இடம்பிடிப்பார்கள். முன்னேறிய வகுப்பார் தன் ஒதுக்கீடும் பெற்றுக் கொண்டு, மதிப்பெண் அடிப்படையில் கூடுதல் இடங்களையும் பெறுவார்கள். இதனால், பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் இதுவரை பெற்று வந்த இடங்கள் மிகவும் குறைந்து விடும். 


முன்னேறிய வகுப்பில் ஏழைகள் என்பதற்கு, இந்திய அரசு சட்டம் வைத்துள்ள வரம்பு - ஆண்டு வருமானம் ரூபாய் எட்டு இலட்சத்தைத் தாண்டக் கூடாது என்பதாகும். ஆண்டு வருமானம் 8 இலட்ச ரூபாய் பெறும் குடும்பம் ஏழைக் குடும்பமா? 


அடுத்து, தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பார் என்பவர்கள் மிகமிகக் குறைவு. பிராமண வகுப்பார் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2½ விழுக்காடு. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இடம் பெறாத பிராமணரல்லாதோர் மொத்த மக்கள் தொகையில் மிகமிகக் குறைவு. பிராமணரல்லாதோரில் முன்னேறிய வகுப்பார் பலரும் பல்வேறு உட்சாதிகள் வழியாக இடஒதுக்கீடு பெறுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டில் வராத மக்கள் தொகை சற்றொப்ப ஐந்து விழுக்காட்டிற்குள்தான் இருக்கும். 


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2½ விழுக்காடு பிராமணர்களுக்கு 7½ விழுக்காடு, அதாவது மூன்று மடங்குக் கூடுதலாக வழங்கியுள்ளது இந்திய அரசு என்பதே நடைமுறை உண்மை! 


இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 16இல் 4 – வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நிபந்தனை போடுகிறது. தங்கள் வகுப்பில், சாதியில் இதுவரை தங்கள் மக்கள் தொகைக்கேற்ற விகிதத்தில் இடங்களைப் பெறாதவர்கள் சமவாய்ப்புப் பெறவே இந்த இடஒதுக்கீடு என்கிறது. 


பிராமணர்கள் போன்ற முன்னேறிய வகுப்பார் – மற்ற பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாருடன் ஒப்பிடும்போது, இந்தப் பிரிவினரைப் போல் அவர்களும் போதிய அலுவல் இடங்கள் பெறாதவர்களா? நீதிபதிகள் யு.யு. லலித்தும், எஸ். இரவீந்திரபட்டும் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஏழைகளையும் - “பொருளாதாரத்தில் ஏழைகள்” என்ற பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறியதைக் கூட மேற்படி மூன்று நீதிபதிகளும் ஏற்கவில்லை. இது நீதிபதிகள் கூட சமூகங்களிடையே பாகுபாடு காட்டக்கூடிய அநீதியாகும்.


இந்த மூன்று நீதிபதிகள் தீர்ப்பு எல்லாவகையிலும் அநீதியானது மட்டுமல்ல. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. வர்ணாசிரமவாதத் தன்மை உள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில் பட்டியல் வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் இருந்து ஒரு நீதிபதி கூட அமர்த்தப்படவில்லை என்பதே பெரும் குறைபாடு அல்லவா! எட்டு இலட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்கள் முன்னேறிய வகுப்பில் “ஏழைகள்” என்று மோடி அரசு வரையறுத்தது வர்ணாசிரம அநீதி தானே! 


எல்லா முடிவுகளையும் வடநாட்டு வர்ணாசிரமவாத அடிப்படையில் மோடி அரசு எடுக்கிறது. நீதிபதிகள் பணி அமர்த்தத்திலும் அதையே கடைபிடிக்கிறது. 


மேற்படி பத்து விழுக்காட்டு “ஏழை”களுக்கான இடஒதுக்கீட்டுப் பட்டியலில் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழைகளையும் சேர்த்து புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர மோடி அரசை வலியுறுத்தி, வெகுமக்கள் போராட்டம் நடத்துவோம்! 


புதிய சட்டத் திருத்தத்தில், அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை மற்றும் சமூகநிலைகளுக்கேற்ப இட ஒதுக்கீட்டு விகிதத்தை இந்திய அரசுப் பணிகளுக்கும் மாநில அரசே முடிவு செய்யும் என்பதைச் சேர்க்க வேண்டும். 


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.