தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும்!
தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும்!
=====================================
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
=====================================
திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும்போது, கருவறைப்பூசை – வேள்விச்சாலை – கலசத்தில் புனித நீருட்டல் அனைத்திலும் தமிழ் மந்திரம் ஓதி வழிபாடு செய்வதை முறைப்படுத்தவும், முழுமைப்படுத்தவும் ஏற்கெனவே தமிழ்வழியில் பூசை செய்து கொண்டிருப்போரிடம் கருத்துகள் கேட்டு, தமிழ் வழிபாட்டை மேலும் செழுமைப்படுத்திட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி ஆகியோர், கடந்த 03.12.2020 அன்று தீர்ப்பளித்திருந்தார்கள் (மனு எண் - WP(MD)/0017750/2020), அத்தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசு தமிழ் வழிபாட்டுச் செயல்முறைகள் திரட்டும் குழு அமைத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில், ஏற்கெனவே தமிழ் அர்ச்சனை செய்வோரிடம் கருத்துக் கேட்க ஏற்பாடு செய்தது.
அத்தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசு தமிழ் வழிபாட்டுச் செயல்முறைகள் திரட்டும் குழு அமைத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஏற்கெனவே தமிழ் அர்ச்சனை செய்வோரிடம் கருத்துக் கேட்க ஏற்பாடு செய்தது.
இக்குழுவின் முதல் கூட்டம், இன்று (07.03.2023) – திருநெல்வேலி – பாளையங்கோட்டையில் ஒரு மண்டபத்தில் நடத்தியது. குன்றக்குடி ஆதினத் தலைவர் உயர்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கினார். பேரூர் ஆதினத் தலைவர் உயர்திரு. மருதாச்சல அடிகளார், ஐயா சுகி. சிவம் போன்ற ஆன்மிகச் சான்றோர்கள் மற்றும் ஆதின கர்த்தர்கள், அக்கருத்துக் கேட்புக் குழு சார்பில் பங்கேற்றனர்.
எமது தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், செயற்குழு உறுப்பினர்கள் சித்தர் மூங்கிலடியார் (அரசயோகி கருவூறார் பதிணென் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (இராசயோக சித்தர் பீடம்), முனைவர் ஆசீவகம் சுடரொளியார் (ஆசீவகம் சமய நடுவம்), சத்தியபாமா அறக்கட்டளையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக் கேட்பு தொடங்கும் முன்பாக அங்கு, ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. – இந்து முன்னணி, இந்து மகாசபை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழக்கங்களைப் போட்டுக் கொண்டு சற்றொப்ப ஐம்பது பேர் திடுதிடுவெனப் புகுந்தனர். அவர்கள், தொடர்ந்து “பாரத் மாத்தா கீ ஜே” முழக்கமிட்டுள்ளனர். ஆகமப்படிதான் அர்ச்சனை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும், தமிழில் நடத்தக் கூடாது, அது ஆகமத்திற்கு ஆகாது என்று கூச்சல் போட்டுள்ளனர்.
இக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சாமி படங்களை ஏன் வைக்கவில்லை என்று கேட்டு திட்டியுள்ளனர். கருத்துகளை எழுதித் தருமாறு கருத்துக் கேட்புக் குழுவினர் கொடுத்த படிவத் தாள்களை மண்டபத்தில் கிழித்து எறிந்துள்ளனர். கருத்துகளைக் கேட்கவிடாமல் கூச்சல் போட்டுள்ளனர். சற்றொப்ப 300 பேர் அமர்திருந்த மண்டபத்தில் – சற்றொப்ப ஐம்பது பேர் இவ்வாறு தகராறு செய்துள்ளனர். இத்தனைக்கும் அங்கு நூறு பேர் அளவிற்குக் காவல்துறையினர் இருந்துள்ளனர். காவல்துறையினர் வேண்டுகோளை ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினர் ஏற்கவில்லை!
அவர்கள் சார்பில் ஒருவரைக் கருத்துக் கூற அழைத்துள்ளார் தலைவர். அந்த நபர் தொடர்ந்து விடாமல் பேசிக் கொண்டே இருந்துள்ளார். மற்ற யாரும் பேச முடியாதபடி அவரே தமிழ் வழிபாட்டிற்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கூட்டத் தலைவரான குன்றக்குடி அடிகளார் கூட்டத்தை முடித்து - கருத்துகளைப் படிவங்களில் கொடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினர் கலையவில்லை. காவல்துறையினர் வற்புறுத்தி வெளியேற்றியுள்ளனர். ஆனால், தமிழில் வழிபாடு நடத்தி வரும் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அங்கு பேச வாய்ப்பு கேட்டும். அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை,
உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட இக்கருத்துக் கேட்புக் குழு – தமிழில் குடமுழுக்கு செய்வதா சமற்கிருதத்தில் செய்வதா என்ற கருத்தறிய அமைக்கப்பட்டதல்ல. தமிழில் எவ்வாறு – அனைத்துப் பிரிவு வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவது என்பது பற்றிக் கருத்தறிய நடத்தப்பட்டதே! இதில், தமிழ் வழிபாடே கூடாது என்று திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரத்தினர் கலாட்டா செய்து கருத்துக் கேட்கவிடாமல் கலைத்துள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்புச் செயலும் ஆகும். அந்த நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.
அடுத்து நடைபெற உள்ள கருத்துக் கேட்புக் கூட்டங்களில், ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. அராஜகவாதிகள் உள்ளே வராமல் தடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசும், இந்தக் கருத்துக் கேட்புக் குழுவைக் கலைத்துவிட்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் உறுதியான குழுவை அமைக்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================
Leave a Comment