“மூன்றாவது மொழி” - முகமூடி அணிந்து இந்தி! விழித்தெழுவீர்! விரட்டுவீர்! சென்னையில் ஆர்ப்பாட்டம்!
“மூன்றாவது மொழி” -
முகமூடி அணிந்து இந்தி!
விழித்தெழுவீர்! விரட்டுவீர்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
இந்திய அரசே!
1. இந்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு மொத்தமாக விலக்குக் கொடு! தமிழ்நாட்டிற்கு உரிய கல்வித் தொகை அனைத்தையும் முழுமையாக - உடனடியாக வழங்கு!
2. இந்தித் திணிப்பை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிடு! தமிழர்கள் இந்தியைத் தவிர்த்துவிட்டு, தென்னாட்டு மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கல்வியில் ஏற்க வேண்டும் என்று நயவஞ்சகமாகக் கூறி, இந்தித் திணிப்பிற்கு இன்னொரு வாசலைத் திறக்காதே!
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை, சர்வாதிகாரி இந்திராகாந்தி 1976-இல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப்பட்டிய(Concurrent List)லுக்கு மாற்றினார். அதை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுவா!
4. உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, மாநில அரசுக்கு மிஞ்சியுள்ள கல்வி அதிகாரத்தையும் பறிக்கின்ற பல்கலைக் கழக மானியக் குழுவை (UGCயை) நிரந்தரமாகக் கலைத்திடு!
பல்கலைக் கல்விக்கென அனைத்து மாநிலக் கல்விப் பேராளர்களைக் கொண்ட பரிந்துரைக்குழு அமைத்திடுக!
5. இந்திய அரசின் ஒரே ஆட்சி மொழி இந்தி மொழியே எனக் கட்டளை இடும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343-ஐயும் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து முற்றிலுமாக நீக்கு. உலகின் மற்ற கூட்டாட்சி நாடுகளில் இருப்பதுபோல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள - தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கு!
6. தமிழ்நாடு அரசே, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை அறிவித்திடு!
மேற்கண்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 25.02.2025 - செவ்வாய் காலை 10.30 மணிக்கு சென்னையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன் தலைமை தாங்குகிறார். பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழர் விடுதலைக் கட்சித் தலைவர் திரு. மு. மேகநாதன், த.தே.பே. புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, தமிழர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், செட்டியூல்டு வகுப்பினர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளர் திருமதி. ஜெ. ரேவதி நாகராசன், திசம்பர் 3 - சென்னை குழு பொறுப்பாளர் திரு. சி.ஆர். டேவிட் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர்,
இதேபோல், பெண்ணாடம், திருச்சி, குடந்தை, ஓசூர், மதுரை, செங்கிப்பட்டி ஆகிய இடங்களிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Leave a Comment