த.வெ.க. ஆட்சி அமைக்கத் தடைபோடுகிறது பா.ச.க.வின் பாசிசம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!
த.வெ.க. ஆட்சி அமைக்கத்
தடைபோடுகிறது பா.ச.க.வின் பாசிசம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று – தனிப்பெரும் கட்சியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சி – தனது ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு எழுத்து வடிவில் கொடுத்துள்ளது.
இந்நிலையில், தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு த.வெ.க. தலைவர் திரு. விஜய், நேற்று (06.05.2026) ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களில் 118 பேர் ஆதரவுக் கடிதத்தை விஜய் கொடுத்தால்தான், அவரை ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து விஜயின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க மறுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் தற்காலிகப் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராசேந்திர விசுவநாத் அர்லேக்கர் அவர்கள், விஜயை ஆட்சி அமைக்க மறுத்த செயல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட முழு அரசமைப்பு ஆயம் வழங்கிய எஸ்.ஆர். பொம்மை வழக்குத் தீர்ப்பிற்கும் ( S.R. Bommai vs Union Of India on 11 March, 1994 -1994 AIR 1918 ) முழுக்க முழுக்க எதிரான சட்ட விரோதச் செயலாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக த.வெ.க. உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த உடனேயே, விஜயின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தமிழ்நாட்டின் உயர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஏவியவர் இதே ஆளுநர் அர்லேக்கர்தான்! விஜய்க்கு சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவிவை அனுப்பியவரும் இதே ஆளுநர்தான்!
விஜய் முதலமைச்சராவதற்குக் காங்கிரசுக் கட்சி ஆதரவளித்து, அந்த அமைச்சரவையில் சேர்கிறது என்று நிலைமை உருவாகியவுடன், ஆளுநர் அர்லேக்கர் தன் நிலைபாட்டை அடியோடு மாற்றிக் கொண்டு, நேரு விளையாட்டரங்கை அழகுபடுத்திய அதிகாரிகளைத் திருப்பி அழைத்து விட்டார். விஜய்க்கு அனுப்பிய சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவை திரும்ப அழைத்துக் கொண்டார். விஜய்க்குப் பதவி ஏற்பு விழா நடத்த முடியாது என்று கூறிவிட்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? பாரதிய சனதாக் கட்சி இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்திய ஆட்சியை நடத்தவில்லை. தனது கட்சியின் இலாபக் கணக்கு அடிப்படையில் தான் ஆட்சி நடத்துகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டுள்ளது.
காங்கிரசுக் கட்சி ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், 107 உறுப்பினர் ஆதரவுள்ள விஜய் கட்சியை ஆட்சி அமைக்க மேளதாளத்துடன் வரவேற்றிருப்பார் ஆளுநர் அர்லேக்கர்!
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் இதில் – கட்சிப் பாகுபாடின்றி – “தமிழ்நாடு” என்ற தமிழர் தாயகத்தை இந்திய பா.ச.க. ஆட்சி எப்படி தனது அடிமையாக நடத்துகிறது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம், இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்ததுடன் வாக்குக் கேட்டது. எங்கள் கட்சி எப்போதும் காங்கிரசை ஆதரிக்காது. ஆனால், இந்திய பா.ச.க. ஆட்சி – தில்லி அதிகாரத்தைக் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான நிலையில், தமிழ்நாட்டை அடிமையாக நடத்துவதை அனுமதிக்கக் கூடாது! பா.ச.க.வின் இச்செயலை கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் கண்டிக்க வேண்டும்.
எஸ்.ஆர். பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்ற முழு அரசமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி, இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே த.வெ.க.வை அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். த.வெ.க. தனது பெரும்பான்மையைச் சட்டப்பேரவையில் மெய்ப்பிக்க கால வரம்பு விதிக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================
Leave a Comment