ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகத்திற்கு தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு அனுப்பி அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

கர்நாடகத்திற்கு தமிழ்நாடு அரசு

வல்லுநர் குழு அனுப்பி அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

கடந்த 22.07.2026 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறை ஆணையும் (Cauvery Water Management Authority - CWMA) கூட்டத்தில், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு வழக்கம் போல மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைகளையும் ஒருபோதும் மதிக்காமல், காவிரி ஒழுங்குமுறைக்குழுக் கூட்டத்திலேயே தண்ணீர் தர முடியாது எனத் திமிராக அறிவித்த கர்நாடக அரசின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதத்திற்கு 9.19 ஆ.மி.க. (டி.எம்.சி) மற்றும் சூலை மாதத்திற்கு 31.24 ஆ.மி.க. என மொத்தம் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40.43 ஆ.மி.க.  தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் கர்நாடகம் எப்போதும் மதித்ததில்லை! குறுவை சாகுபடி பொய்த்துப் போகும் அபாயத்தில் இருக்கும் நிலையில், சட்டப்பூர்வமாகத் தரவேண்டிய தண்ணீரைத் தராமல் பிடிவாதம் பிடிப்பது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் வாழ்வாதாரப் போராகும்.

 

தற்போது கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில், 17.21 ஆ.மி.க.வும், ஏமாவதி அணையில், 21.15 ஆ.மி.க.வும், கபினி அணையில், 10.35 ஆ.மி.க.வும், ஏரங்கி அணையில் 4.51 ஆ.மி.க.வும் என மொத்தமாக 53 ஆ.மி.க. தண்ணீர் உள்ளது. அதாவது 52% அளவுக்கு அங்கு அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், இதில் பாதியையாவது கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

 

கர்நாடக அணைகளின் உண்மை நிலவரத்தையும், அங்குள்ள நீர் இருப்பையும் நேரில் சென்று துல்லியமாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு வல்லுநர் குழுவை (Expert Committee) கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டும். அக்குழு நேரில் ஆய்வு செய்து, தரவுகளின் அடிப்படையில் நமக்குச் சேர வேண்டிய நீரின் அளவை ஆதாரப்பூர்வமாகப் புள்ளிவிவரங்களுடன் முன்வைத்து, இந்திய அரசுக்கும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவுக்கும் அழுத்தம் கொடுத்துத் தண்ணீரைப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================




Uploaded Image

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.