ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகை!அரசாணையை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசே செயல்படுக! தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகை!

அரசாணையை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசே செயல்படுக!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

 

“தமிழகத்தில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என்று பாவேந்தர் பாரதிதாசன் மனம் நொந்து கூறியதுபோல்தான் தமிழ்நாட்டு கடைத் தெருக்கள் இருக்கின்றன. வணிக நிறுவனங்கள், தொழிலகங்கள், உணவகங்கள், ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கிலப் பெயர்ப்பலகைகளே இருக்கின்றன. இது வணிகத்தில் வளர்ச்சியடைந்த எந்த நாட்டிலும் - இன்னும் சொல்லப்போனால், எந்த மாநிலத்திலும் இல்லாத இழிநிலை ஆகும்.

 

தமிழ்நாட்டு வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் முதன்மையாகவும், பெரிய எழுத்திலும் தமிழ்ப் பெயர்ப்பலகை இருக்க வேண்டும் என்றும், அடுத்த நிலையில் அதைவிடச் சிறிய எழுத்தில்தான் ஆங்கிலம் இடம் பெறலாம் என்றும், இன்னொரு மூன்றாவது மொழி தேவைப்பட்டால் அது அதையும்விடச் சிறிதாக மூன்றாம் இடத்தில் இடம் பெறலாம் எனவும் தமிழ்நாடு அரசின் அரசாணைகள் கூறுகின்றன. (அரசாணை எண்.3312 நாள் 29.12.1983 மற்றும் அரசாணை எண் 400 நாள் 29.12.1984.) இதனை மீறுபவர்களுக்கு ரூ. 2000 தண்டத்தொகை (அபராதம்) விதிக்கப்படும் என்றும், தொடர் மீறல் நடைபெற்றால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் இந்த அரசாணைகள் கூறுகின்றன.

 

Zerox (ஜெராக்ஸ்)  – நகலகம், Jewellery (ஜூவல்லரி) - நகை வணிகம், Restaurant (ரெஸ்ட்டாரண்ட்) - உணவகம் என்பன போன்று, ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ப்பெயர்கள் பட்டியலையும் அப்போதே தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 

 

ஆயினும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையோ, தமிழ் வளர்ச்சித்துறையோ, இந்த ஆணைகளைச் செயல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறான அரசாணை இருப்பது கூட, பெரும்பாலான வணிகர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

 

மிகநீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 11.6.2025 அன்று, வணிக நிறுவனங்களுக்குச் சுற்ற்றிக்கை அனுப்பி, (சுற்றறிக்கை எண். 4122/K2/2025) இந்த அரசாணைகளை வணிக நிறுவனங்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆயினும், இந்தச் சுற்றறிக்கையும்கூட பரவலாகத் தெரியப்படுத்தப்படவில்லை.

 

சில வணிகர் அமைப்புகள் இச்சுற்றறிக்கை மீது தொடுத்த வழக்கில், அரசு – வணிக அமைப்புகள் ஆகிய இருதரப்பும் ஏற்றுக் கொண்டதற்கு இசைந்து, வரும் நவம்பர் 1 2026க்குள், அரசாணைப்படி வணிக நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 24.7.2026 அன்று ஆணையிட்டது. இந்த நீதிமன்ற ஆணையும்கூட, பரவலாகத் தெரிவிக்கப்படவில்லை.

 

எனவே தமிழ்நாடு அரசு, மேற்சொன்ன அரசாணையை உறுதியாகச் நடைமுறைப்படுத்தி, வணிக நிறுவனங்கள், தொழிலகங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் முதன்மையாக தமிழ்ப் பெயர்ப்பலகை அமைவதை உறுதி செய்யவேண்டும். நிறுவனங்களுக்கான தமிழ்ப்பெயர்ப் பட்டியலையும் பரவலாக வணிக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

 

தொழிலாளர் துறை மட்டுமின்றி, வருவாய்த் துறை, வணிகவரித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இந்த அரசாணை உறுதியாக நிறைவேறும். தமிழ்த்தெருவில், தமிழ்நாட்டுக் கடைகளில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் விளங்கும்.

 

மேற்சொன்ன துறை அதிகாரிகள் மாநகர, நகர, ஒன்றிய அளவில் வணிகர் அமைப்புகளையும், தொழில் முனைவோர் அமைப்புகளையும், கூட்டி இதனை வலியுறுத்தி செயல்படுத்த முனைய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Uploaded Image

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.