ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின்“தமிழர் நாடு” இதழ் தொகுப்பு வெளியீட்டு விழா!

 "முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின்“தமிழர் நாடு” இதழ் தொகுப்பு வெளியீட்டு விழா!


“முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள “தமிழர் நாடு” நூலின் வெளியீட்டு விழா, அவர்கள் நடத்திய “தமிழர் நாடு” மாத இதழின் தொகுப்பு வெளியீட்டு விழா, 2015 நவம்பர் 7 அன்று சென்னையில் சிறப்புற நடைபெற்றது.

17.08.1949 முதல் 17.07.1951 வரை “தமிழர் நாடு” மாத இதழ் வந்தது. அந்த 24 மாதங்களின் தொகுப்பு - 1308 பக்கங்களில் ஒரே நூலாக - முத்தமிழ்க்காவலர் பெயரன் முனைவர் கோ. வீரமணி அவர்களால் தொகுக்கப் பட்டது. காவ்யா பதிப்பகம் இந்நூலை வெளியிட் டுள்ளது.

காவ்யா பதிப்பகமும், தமிழ்க் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து, சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நடத்திய நடத்திய இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு, தமிழகத் தமிழாசிரியர் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் தலைமை யேற்றார்.

காவ்யா பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் வரவேற்றார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர், நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், நூலை வெளியிட, புலவர் இரத்தின வேலவர், உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், அண்ணல் தங்கோவின் பெயரன் திரு. செ. அருட்செல்வன், மறைமலையடிகளாரின் பெயரன் மறை. தி. தாயுமானவன், புலவர் இரத்தினவேலவர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மொழிப்போர் ஈகி விருகம்பாக்கம் அரங்கநாதன் அவர்களின் மகன் அமுதவாணன் அவர்களுக்கு தலைவர் பெ.மணியரசன், துண்டணிவித்து சிறப்பு செய்தார்.

வாழ்த்துரை வழங்கிய பாவலர் காசி ஆனந்தன், சமற்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்கக் போராடியது போல், ஆங்கில மொழிக் கலப்புக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்த நாம் அணியமாக வேண்டும் என்றார்.

பின்னர், பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரை நிகழ்த்தினார். நிறைவில், இந்நூலைத் தொகுத்துள்ள, அய்யா கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் பெயரணும், திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் கோ. வீரமணி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில், எழுகதிர் ஆசிரியர் அருகோ, செந்தமிழ்வேள்ளிச் சதுரர் திரு. மு.பெ. சத்தியவேல் முருகனார், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ் நேயன், உலகத் தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அன்புவாணன், பேராசிரியர் யோகீசுவரன், சாகித்திய அகாதமியின் மேனாள் சென்னை பொறுப்பாளர் திரு. இளங்கோ, செம்மொழி ஆய்வு நிறுவன முதுநிலை முனைவர் பட்ட ஆய்வாளர் பேரா. அய்யப்பன், படைப்பிலக்கியர் கிருஷ்ண பிரகாசுஉள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டனர்.

அரங்கு நிறையும் அளவிற்கு பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பக்கம்: 1308 | விலை: ரூ. 1300
கிடைக்குமிடம் : காவ்யா பதிப்பகம்
16, இரண்டாம் குறுக்குத் தெரு,
ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024.
பேச: 044-23726882, 98404 80232, 98416 04017

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.