ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மக்கள் – மக்களுக்காகக் கொடுத்த அதிகாரத்தை தன் ஆணவத்திற்குத் தாரை வார்க்கக் கூடாது! நாம் தமிழர் கட்சி கார்த்திகா உள்ளிட்டோரைஉடனே விடுதலைசெய்க!தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

மக்கள் – மக்களுக்காகக் கொடுத்த அதிகாரத்தை

தன் ஆணவத்திற்குத் தாரை வார்க்கக் கூடாது!

நாம் தமிழர் கட்சி கார்த்திகா உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைகளின்போது நா.த.க. வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 10 பேர் மீது பதியப்பட்ட வழக்கில், நேற்று (20.10.2026) விடியற்காலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது முழுக்க முழுக்க விஜய் அரசின் தனிநபர் சர்வாதிகார நடவடிக்கைகள் ஆகும்.

 

எந்த வழக்கானாலும் அதை நேரடியாக சந்தித்து வரும் அரசியல் பிரமுகரான திருமதி. கார்த்திகாவை, பயங்கரவாதியைப் பிடிப்பது போல அதிகாலையில் எழுப்பி, அவரது ஆடையைக் கூட மாற்ற விடாமல் தடுத்து, அவரை தரதரவென இழுத்து வந்து காவல்துறை கைது செய்திருப்பது, த.வெ.க. அரசின் பழிவாங்கும் உணர்ச்சியையே வெளிப்படுத்தியிருக்கிறது.

 

தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில், தனக்குப் பரப்புரை அனுமதி வழங்காமல் முதலமைச்சர் விஜயின் சாலை நாடகம் (Road Show) நடக்க அனுமதித்ததை எதிர்த்து, சனநாயக வழியில் அப்போது கார்த்திகா உள்ளிட்டோர் போராடினர். அப்போதே கார்த்திகா உள்ளிட்டோரைக் காவல்துறை கைது செய்தது. இடைத்தேர்தல் முடிந்த நிலையில், இப்போது அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிகழ்வு, நல்லாட்சி நடத்த மக்கள் கொடுத்த அதிகாரத்தைத் தனிநபர் ஆணவ ஆட்சி நடத்த விஜய் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை  வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.

 

நாகப்பட்டினத்தில் 132 கோடி ரூபாய் மதிப்பு போதைப் பொருட்களுடன் அண்மையில் கைதானவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாவார். இப்படி வகைவகையான குற்றச்சாட்டுகள் த.வெ.க. நிர்வாகிகள் மீது புகார்களாகக் கொடுக்கப்படுகின்றன. மேற்படி நபரின் நச்சுப் போதைக் கள்ள வாணிகத்தைத் தமிழ்நாடு காவல்துறை கண்டு கொள்ளவில்லை. இந்திய அரசு காவல்துறைதான் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மக்கள் – மக்கள் நலனுக்காக வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் என்ற அதிகாரத்தை த.வெ.க. தலைவர். தனது ஆணவங்களுக்குத் தீனிபோட பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், தமது எதேச்சாதிகார நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்து திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், நா.த.க. பொறுப்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கைக் கைவிட்டு, அவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Uploaded Image

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.