ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழீழ விடுதலைப் போராளி சிவாஜிலிங்கம் அவர்கட்கு வீரவணக்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

தமிழீழ விடுதலைப் போராளி

சிவாஜிலிங்கம் அவர்கட்கு வீரவணக்கம்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

 

தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும், தமிழீழத்தின் வல்வெட்டித்துறையில் பிறந்தவருமான ஐயா ம.க. சிவாஜிலிங்கம் அவர்கள், 14.11.2026 அன்று காலமானார் என்று நெஞ்சை அழுத்தும் துயரச் யெ்தி என் மனதைத் தாக்கியது. நான் நோய்வாய்ப்பட்டு கிருட்டிணகிரி நல்லார் சித்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் மேலும் துயருற்றேன். உடனடியாக இரங்கல் அறிக்கை வெளியிட முடியவில்லை. சிவாஜிலிங்கம் ஐயா மறைவு பெருந்துயரம்! ஐயா சிவாஜிலிங்கம் அவர்கட்கு வீரவணக்கம்!

 

இலங்கை ஆட்சியாளர்களுடன் இணக்கம் கண்ட அமைப்பு என்ற ஒரு பெயர் சிவாஜிலிங்கம் அவர்களின் டெலோ அமைப்பிற்கு இருந்தாலும், சிவாஜிலிங்கம் நடைமுறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவே செயல்பட்டு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலைக்கும் எந்த இரண்டகமும் செய்யாதவர் சிவாஜிலிங்கம்!

 

அதே சமயம், 2009இல் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுடன் இணங்கிப் போகாத வீரர் சிவாஜிலிங்கம்! 2009 காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தங்கியிருந்த ஐயா சிவாஜிலிங்கம் அவர்களோடு நிறைய நிகழ்வுகளில் நானும் கலந்துரையாடினேன். 2009 மார்ச் 6 அன்று, சேலத்தில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் நடைபெற்ற இன எழுச்சி மாநாட்டில், அவரைப் பங்கேற்றுப் பேசச் செய்தோம். தமிழீழத்தில் நடக்கும் இனஅழிப்பு குறித்து அவர் உரையாற்றியது நினைவுக்கு வருகிறது.

 

ஈழப் பேரழிவுக்குப் பின்னும், ஈழத்தமிழர்களுக்கான துயர் துடைப்புப் பணிகளிலும் சிங்களக் கொலைகாரர்கள் நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு தண்டனை கேட்டு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளை அணுகுவதிலும் சோர்வின்றிச் செயல்பட்டார்.

 

நோய்வாய்ப்பட்டுத் துன்பப்பட்ட கடைசி நாட்களில் அவருக்குத் துணையாகச் செயல்பட முடியவில்லையே – பொருளாதார உதவிகளும் செய்ய முடியவில்லையே என்ற உள் மன வருத்தம் எனக்கு உண்டு!

 

தண்ணீருக்குள் கிடந்தாலும் பாஸ்பரஸ் நெருப்பாகவே இருக்கும் என்பதுபோல், சந்தர்ப்பவாத சகதிக்குள் முன்னாள் போராளி அமைப்புகள் சில சிக்கினாலும், தமிழீழ மக்கள் பக்கம் நின்று செயல்பட்ட தமிழீழத் தேசிய வீரர் சிவாஜிலிங்கம் அவர்கட்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன். 


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Uploaded Image

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.