ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

விலை உயர்வு : தாராளமயத்தின் பரிசு - கி.வெங்கட்ராமன்

விலை உயர்வு : தாராளமயத்தின் பரிசு
கி. வெங்கட்ராமன்

தாராளமயப் பொருளியல் கொள்கையின் கொடும் விளைவாய் விலைவாசி விண்ணை முட்டுகிறது. அனைத்துச் சிக்கல்களுக்கும் சந்தை நாயகமே தீர்வு என்று மந்திரம்போல் உச்சரித்து வந்த பிரதமர் மன்மோகன்சிங் ""விலைவாசிச் சிக்கலை தீர்ப்பதற்கு என்னிடம் ஒன்றும் மந்திரக்கோல் இல்லை. இது உலகுதழுவிய ஒரு பிரச்சினை'' என்று கைவிரிக்கிறார்.""உலக நாடுகள் ஒன்றுபட்டு முயன்று ஏதாவது செய்யுங்கள் அப்போதுதான் உணவுக் கலவரம் உலகமயமாக மாறாமல் தடுக்கமுடியும்'' என்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் யாருக்கோ வேண்டுகோள் விடுக்கிறார். ""கையில் காசு இருந்தால் விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினையே அல்ல'' என்று தத்துவம் தருகிறார் முதலமைச்சர் கருணாநிதி.

டிசம்பர் 2007 வøர ஆண்டு விலைவாசி உயர்வு 4 விழுக்காடு என்று இருந்தது, 2008 மார்ச் இறுதியில் 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்திய சேமவங்கி கூறுகிற அபாய அளவான 5 விழுக்காட்டையும் தாண்டி மிக அபாய அளவை நோக்கி விலை உயர்வு விøரந்து செல்கிறது. இந்தக் கணக்குக்கூட மொத்த விலைவாசிக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு கூறப்படுவதாகும். உண்மையில் மக்கள் சந்திக்கிற சில்லøர விலை உயர்வு இதைவிடப் பன்மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக, 2008 மார்ச்சுடன் முடிந்த கடந்த 12 மாதங்களில் வனஸ்பதியின் (டால்டா) விலை மொத்த வணிகத்தில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சில்லøர வணிகத்தில் 22 விழுக்காடு உயர்ந்துள்ளது. அரிசி விலை மொத்த சந்தையில் 8 விழுக்காடு உயர்ந்துள்ளது. சில்லரைச் சந்தையில் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் மொத்த வணிகத்தில் 9 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சில்லரைச் சந்தையில் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. கோதுமை மாவு 0.5 விழுக்காடு மொத்த வணிகத்தில் விலை உயர்ந்துள்ள போது சில்லரைச் சந்தையில் 5  விழுக்காடு உயர்ந்துள்ளது. இரும்புக்கம்பிகளின் விலை 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை ஒவ்வொரு நாளும் கணிக்க முடியாத வகையில் உயர்ந்தும் மாறியும் வருகிறது. உயிர்காக்கும் மருந்துகள் சில்லரைச் சந்தையில் 300 விழுக்காடு உயர்ந்துள்ளன.

கிட்டத்தட்ட 1960களின் இறுதியில் சந்தித்த விலைவாசி உயர்வை இன்று இந்தியா சந்தித்து வருகிறது. அன்றைக்கு ஏற்பட்ட உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தார்கள். ஆனால் இன்று அந்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த உணவுப் பஞ்சம் உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. செனிகல், கேமரூண், கென்யா, வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலவரம் நடந்துவருகிறது. காசு கொடுத்தாலும் உணவு கிடைக்காதவர்களும், உயர்ந்துள்ள உணவுப் பொருள் விலையை எதிர்கொள்ள முடியாதவர்களும் இந்நாடுகளில் மோதிக் கொள்கிறார்கள். உணவு உற்பத்தியும், கொள்முதலும் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படும் தமிழ்நாட்டில் கூட நெருக்கடி கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 1கோடியே 97 இலட்சம் உணவு வழங்கல் அட்டைகள் (÷ரஷன் கார்டு) வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் அரிசி உள்ளிட்டு அனைத்துப்  பொருள்களும் வாங்குகிற வறுமைக் கோட்டு மக்களின் பச்சை அட்டை சுமார் 1கோடியே 86 இலட்சம் ஆகும். அரிசி தவிர பிற இன்றியமையாப் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வெள்ளை அட்டைக்காரர்கள் சுமார் 10 இலட்சம் பேர். மண்ணெண்ணெய் மட்டுமே வாங்கிக் கொள்ளும் பழுப்பு அட்டைக்காரர்கள் 42 ஆயிரம் பேர். மீதமுள்ளவர்கள் ÷ரசன் கடைகளில் ஒரு பொருளும் வாங்காத உயர்வருமானப் பிரிவினர். பச்சை அட்டைக்காரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 2 வீதம் மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்குவதாக ஏற்பாடு. ஆனால் இது நடைமுறையில் 10 கிலோவாகக் குறைக்கப்பட்டு விட்டது என்ற கூக்குரல் பரவலாக எழுந்து வருகிறது. இதற்குக் காரணம் இந்திய அரசு மத்தியத் தொகுப்பிலிருந்து வழங்கும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருவதேயாகும். ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இந்திய அரசு உணவு மானியத்தை வெகுவாக வெட்டி வருவதை பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

மத்தியத் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசிக்கு கிலோவுக்கு 2ரூபாய் 70 காசு மானியமாக இந்திய அரசால் வழங்கப்படுகிறது. ரூபாய் 11 விலையுள்ள 1கிலோ மத்திய தொகுப்பு அரிசியை ரூ.8.30 கொடுத்து தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. அதனை ரூ.2க்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட ரூ.6.30 தமிழக அரசு அளிக்கிற மானியம். தமிழ்நாட்டு நியாயவிலைக் கடைகள், அரசு மருத்துவ மனைகள், சிறைச்சாலைகள், முதியோர் உதவித்திட்டங்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் அரிசியில் 40 விழுக்காடுதான் தமிழ் நாட்டில் கொள்முதல் செய்யப் படுகிறது. தமிழ்நாட்டில் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்வது ஆண்டுக் காண்டு குறைந்தும் வருகிறது. எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டு 15.38 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 10.38 இலட்சமாக அது குறைந்துள்ளது. தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருப்பிலுள்ள அரிசி மற்றும் நெல் இவற்றின் மொத்த அளவே 6.83 இலட்சம் டன்தான். இது செப்டம்பர் மாதம் வøரயிலும் தான் வழங்கலுக்கு போதுமானது. அதன் பிறகு உள்ள தேவைகளுக்கு என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்திய அரசு அண்மையில் டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் பெட்÷ரால் விலையை 2 ரூபாயும் உயர்த்தியது. இந்த விலைஉயர்வு அனைத்துப் பொருள்களின் விலையையும் ஏற்றிவிட்டது. பெட்÷ரால்,  டீசல் மீது அரசு வரிவிதிப்பைச் சற்றே  குறைத்திருந்தால் கூட அரசின் வரி வருமானத்தைப் பாதிக்காமலேயே இந்த விலையுயர்வைத் தவிர்த்திருக்க முடியும். அவ்வாறான மக்கள் நலப் பார்வை இந்திய அரசுக்கு இல்லை. இது விலை உயர்வை தீவிரப் படுத்துவதில் போய் முடிந்தது. சிமெண்ட் முதலாளிகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயற்கையாக விலையை உயர்த்துவது ஊரறிந்த ரகசியமாகும்.

அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறு எதையும் இந்திய அரசு செய்வதில்லை. அதேபோல் இரும்பு ஏற்றுமதியாளர்கள் தங்கள் கொள்ளை இலாபத்திற்காக உள்நாட்டுச்  சந்தையிலும் இரும்பு விலையை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள்.

ஏனெனில் சீனச் சந்தை மிகப்பெரும் வாய்ப்பை இரும்பு ஏற்றுமதி யாளர்களுக்கு திறந்துவிட்டுள்ளது. அதேபோல் அய்÷ராப்பிய நாடுகளிலும் இரும்புச் சந்தை விரிவடைந்து வருகிறது. அங்கு நிலவும் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தியாவிலுள்ள இரும்பு ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரும் இலாப விலை கிடைக்கிறது. இந்த உலகச் சந்தை நிலவரத்திற்கேற்ப உள்நாட்டிலும் இரும்பு உற்பத்தியாளர்கள் செயற்கையாக விலையை உயர்த்துகிறார்கள்.  இது சிறுபட்டறை உற்பத்தியில் பெரும்பங்காற்றி வரும் தமிழ்நாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. இரும்பு விலையும், நிலக்கரி விலையும் சேர்ந்து கடந்த ஓராண்டில் மட்டும் 300 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவையைச் சுற்றியுள்ள இரும்புப் பட்டறை உற்பத்தியாளர்கள் ஏறத்தாழ 5000 பேர் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

விலைவுயர்வுப் பிரச்சினைக்கு இந்திய அரசிடம் எந்த உருப்படியான தீர்வும் கிடையாது. ஆனால் இந்த சிக்கலையும் உழவர்களுக்கும் உழைப்பாளர் களுக்கும் எதிராகத் திருப்பிவிடுவதில் ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு வேளாண் விலை நிர்ணயக் குழு பரிந்துøரத்தபடி குவிண்டால் நெல்லுக்கு ரூ.1000 வழங்க முடியாது என்று தில்லி உணவு அமைச்சர் சரத்பவார் கைவிரித்துவிட்டார். அரிசி விலை உயர்வை இதற்குக் காரணம் காட்டுகிறார்.

சந்தையில் அரிசி விலை உயர்வது நெல் உழவர்களுக்கு இலாபகரமான விலை வழங்கியதால் அல்ல. அதேபோல் எள், நிலக்கடலை, தேங்காய் போன்ற எண்ணெய் வித்துக்களின் கொள்முதல் விலை உயராத போதும் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சோப்பு, வனஸ்பதி போன்ற பொருள்களின் விலை மட்டும் கடுமையாக உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.இதற்கு முதன்மையான காரணம் உழவர்கள் அல்லர். சில்லøர வணிகர்களும் அல்லர். இணைய தள (ஆன் லைன்) வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மிகப்பெரும் வணிக நிறுவனங்களும் சில்லøர வணிகத்தை கைப்பற்றி வரும் பன்னாட்டு வடநாட்டு பெருமுதலாளிகளுமே ஆவர். இந்தப் பெருவர்த்தக நிறுவனங்கள் ஒப்பந்த வேளாண்மையின் மூலமாகவும், தமது முகவர்களின் வழியாகவும் குறைந்த விலைக்கு உழவர்களிடமிருந்து வேளாண் விலை பொருள்களை கொள்முதல் செய் கிறார்கள். இவற்றை இந்திய அரசுக்குச் சொந்தமான கிட்டங்கிக் கழகம், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், சிறு நகரங்களிலுள்ள கோயில்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற பொது இடங்கள் ஆகிய வற்றில் சேமித்து வைக்கிறார்கள். உண்மையில் இது சேமிப்பு அல்ல. பதுக்கலே ஆகும். இவ்வாறு இந்தியாவின் வெவ்வேறு மூலைகளில் வைக்கப் பட்டுள்ள பொருள்களுக்கு இணைய தளத்தின் மூலம் விலை கூறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒரு பெரு வணிகர் தன்னிடம் 1 இலட்சம் மூட்டை எள் இருப்பதாக அறிவித்து அதற்கு ஒரு குறிப்பிட்ட விலையை இணைய தளத்தில் அறிவிக்கிறார். இதைப் பார்க்கிற இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற இன்னொரு வணிகர் இதில் 10ஆயிரம் மூட்டையை "வாங்குவதற்கு' முன்வருவதாக அறிவிக் கிறார். இப்படி "வாங்குகிறவர்' உடனடியாக முழுப் பணத்தையும் செலுத்தி விடுவதில்லை. 10 விழுக்காடு தொகையை பெருவணிகரின் கணக்கில் செலுத்திவிட்டால் போதும். அந்தப் 10ஆயிரம் மூட்டை இவருக்கு உரியதாகக் குறிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை அவர் எப்போது செலுத்துகிறா÷ரா அப்போது தனது சரக்கை கிட்டங்கியி லிருந்து எடுத்துச் சென்று விடலாம். ஆனால் இவர் உடனடியாக மீதத் தொகையைச் செலுத்தி சரக்கை எடுக்கமாட்டார். அதற்கு பதிலாக இந்த 10ஆயிரம் மூட்டையை தனக்குத் தேவையான இலாபத்தையும் சேர்த்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனது இணையதள முகவரியில் அறிவிப்பார். அதைப் பார்க்கிற சிறுவணிகர் அந்தத் தொகையைக் கொடுத்தால் இவரிடமிருந்து சரக்கை எடுத்துச் செல்லலாம். இவ்வாறுதான் ஆன் லைன் வர்த்தகம் நடைபெறுகிறது.

உண்மையில் சரக்கு கைமாறாமலேயே கைமாறியதுபோல் கணக்கிடப்பட்டு விலை செயற்கையாக உயர்த்தப்படுகிறது. தங்கள் கண்களால் பார்த்திராத, தாங்கள் கையாளாத சரக்குகளை வெறும் ஊக வணிகத்தில் கைமாற்றிவிட்டு கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறார்கள் பெரும் வணிகர்கள். இவர்களுடைய ஊக இலாபமெல்லாம் கடைசியில் நுகர்வோர் தலையில் சில்லøர விலையாக உயர்த்தி வைக்கப்படுகிறது.உற்பத்தி செய்த உழவர்களுக்கு இந்தச் சந்தை விலையேற்றத்தால் பயன் ஏதும் இல்லை. நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இப்போது வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் ரிலையன்ஸ், பிர்லா, ரகேஜா போன்ற வடநாட்டு நிறுவனங்களும் சில்லøர வணிகத்தில் கோலோச்சத் தொடங்கிவிட்டன. இந்நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் பல்லாயிரக் கணக்கான டன் இன்றியமையாப் பொருள்களை பதுக்கி வைத்துக் கொண்டு செயற்கையாக விலை உயர்வை ஏற்படுத்திக் கொள்ளையடிக்கின்றனர். இப்பெருநிறுவனங்களிடமிருந்து பதுக்கலை எடுத்து விலையைக் குறைக்க இந்திய அரசு முன்வருமா என்ற கேள்வி நேருக்கு நேர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது ""இது மத்திய அரசின் பணி அல்ல மாநில அரசாங்கங்களின் வேலை'' என்று கூறி ப.சிதம்பரம் நழுவினார்.

ஒரு பக்கம் விலை உயர்வுக்குக் உலக நாடுகள் காரணம் என்று சொல்லியும். மறுபுறம் பதுக்கலை எடுப்பது மாநில அரசாங்கங்களின் கடமை என்று சொல்லியும் தமது கடமையை தட்டிக் கழிப்பதில் ப.சிதம்பரம் குறியாய் இருக்கிறார். இந்திய அரசு கடைப்பிடித்து வரும் தாராளமயகொள்கைதான் இச்சிக்கலுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.

தாராளமயப் பொருளியல் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கத் தொடங்கிய 1990களுக்குப் பிறகு வேளாண்மை குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுவøரஉணவு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டுக்கு 1.7 விழுக்காடு என்று இருந்தது. 2000ஆம் ஆண்டில் 0.5 விழுக்காடாக வீழ்ந்தது. 2006இல் முழுவதும் தேக்கநிலையை அடைந்தது. இதன் காரணமாக ""1991இல் உணவுதானிய உற்பத்தி தலா 510 கிராம் என்று இருந்தது, 2005இல் தலா 422 கிராம் என்று குறைந்து 2006இல் 412 கிராம் என்று மேலும் வீழ்ந்தது'' என்று பொருளியல் அறிஞர் உட்சா பட்நாயக் அம்மையார் குறிப்பிடுவது கவனிக்க வேண்டிய எச்சரிக்கையாகும். (Frontline  ஏப்ரல்,25,2008) மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தனிநபர் உணவு வழங்கல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் உற்பத்திக்கும் தேவைக்கும் இடைவெளி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது வெளிப்படை. வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்து இதனை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்பதே அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. உணவு உற்பத்தியை விட பணப் பயிர் வேளாண் மையில் இறங்கினால் தான் உழவர்கள் வாழ்வு செழிக்கும் என்பதையே மன்மோகன் சிங் மீண்டும் மீண்டும் அறிவித்தார். அயல்செலாவணிக் கையிருப்பு ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை வாய்ப்பாகப் பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்வது திட்டமிட்ட வகையில் செயல் படுத்தப்பட்டது. இதுதான் புத்திசாலித்தனமான பொருளியல் கொள்கை என மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கூட்டணி அறிவித்தது.

அயல்செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பதை தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் வெற்றி என்று இந்தக் கூட்டணி பறைசாற்றியது. 1980களின் இறுதியில் சந்திரசேகர் பிரதமராக இருந்தபொழுது அயல்செலாவணி கையிருப்பு கரைந்துபோய் கையிலிருந்த தங்கத்தை அடகு வைத்து காலத்தைக் கடத்த வேண்டிய நிலமையிலிருந்து இன்று 30,000 கோடி டாலர் அயல் செலாவணி கையிருப்பு இருப்பதை தங்கள் கொள்கையின் வெற்றி என்று இந்தக் கூட்டணி அறிவித்தது. ஆனால் இது இரண்டு முனையில் சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒன்று, உணவுதானிய வேளாண்மையானது குறைக் கப்பட்டு பணப் பயிரை நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதற்கு உழவர்களை விரட்டுவதற்கு ஏற்ப உணவுதானியக் கொள்முதல் விலை திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது. இதனால் உணவுப் பயிரிட்டு வந்த உழவர்கள் பணப்பயிøர நோக்கி விரட்டப்பட்டார்கள். இதே மாதிரிக் கொள்கை இந்தியா போன்ற உலகின் பிற பின்தங்கிய நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. பருத்தி, மூலிகை போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப் பட்டது. இவை ஏற்றுமதிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன.

உலகச் சந்தையில் இந்திய பணப்பயிர்கள் மட்டுமின்றி பல பின்தங்கிய நாடுகளின் பணப் பயிர்களும் போட்டியிட்டன. எனவே ஏற்றுமதிக்கு மானியம் அளித்து செயற்கையாக விலையைக் குறைத்து உலகச் சந்தையில் விற்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்த மானியமும் ஏற்றுமதியில் ஈடுபட்ட வணிகர்களுக்கே கிட்டியது. உழவர்களுக்கு கொள்முதல் விலை குறைக்கப்பட்டது.

எனவே பருத்தி உள்ளிட்ட பணப்பயிர் சாகுபடி செய்த உழவர்கள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு கடனை இறக்குமதி செய்து கொண்டார்கள். ஆந்திரா, விதர்ப்பா உள்ளிட்ட பருத்தி சாகுபடிப் பகுதிகளில் உழவர்கள் தற்கொலை அதிகரித்ததின் பின்னணி இதுதான்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் எரிஎண்ணெய் தேவைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆனால் எரி எண்ணெய் விலையோ கடந்த இரண்டாண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துவிட்டது. பெட்÷ராலியப் பொருள்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டால் புவிவெப்பமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் அபாய அளவை எட்டின. இந்நிலையில் பெருகிவரும் எண்ணெய்த் தேவையை ஈடுசெய்யவும், சுற்றுச்சூழல் சீர்கேடு தீவிரமடையாமல் தடுக்கவும் எத்தனால் (ஞுtடச்ணணிடூ) போன்ற உயிரி எரிபொருள்களைப் பயன்படுத்துவதை வளர்ச்சி யடைந்த நாடுகள் அதிகரித்தன. இச்சிக்கலை உலக மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று முதன் முதலில் எச்சரிக்கை விடுத்தவர் பிடல்காஸ்ட்÷ரா தான். (விரிவிற்கு காண்க@ தமிழர் கண்ணோட்டம், மே 2007)
வடஅமெரிக்கா, அய்÷ராப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவற்றில் சோளம், கோதுமை, கரும்பு முதலியவை இந்த உயிரி எரிபொருள் தேவைக்காக திருப்பி விடப்பட்டன. இதனால் இந்நாடுகளிலிருந்து ஏற்றுமதிக்கு கிடைக்கும் உணவுதானியங்கள் குறையத் தொடங்கின. மறுபுறம் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வளர்ந்துவரும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் உணவில் இறைச்சியையும் கால்நடை சார்ந்த பொருள் களையும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர். இது சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை தீவனத் தேவைக்கு எடுத்துச் செல்லும் போக்கை அதிகரித்தன. இவையெல்லாம் சேர்ந்து உலகச் சந்தையில் உணவுதானிய வழங்கலை வெகுவாகக் குறைத்தன. இந்திய அரசு உணவுதானிய வேளாண்மையைப் புறக்கணித்து வெளிநாடுகளிலிருந்து உணவு தானியத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற அணுகுமுறையும் தோல்வியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாவதாக, அதிகரித்து வரும் அயல் நாணயக் கையிருப்பு பெரும்பாலும் டாலர் நாணயத்திலேயே இருப்பதால் இன்னொரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க டாலரின் வரத்து கடந்தாண்டில் மட்டும் 10ஆயிரம் கோடி ஆகும். அதேநேரம் டாலரின் மதிப்புவீழ்ந்துவருகிறது. இதன் காரணமாக ரூபாய் நாணயப் புழக்கம் அதிகரித்து எதிர்பாராத அளவில் பணவீக்கத்தை அதிகரித்தது. இந்த டாலøர வாங்கி சேமித்து வைப்பதன் மூலமாக இந்திய சேமவங்கி பணப்புழக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு படாதபாடுபட்டு வருகிறது. இதுவும் அதன் உயர் வரம்பை எட்டிவிட்டது. இதற்கு மேல் டாலøர வாங்குவதன் மூலம் பணம் வீக்கத்தை கட்டுப் படுத்துவது முடியாத காரியம். வளர்ச்சியடைந்த நாடுகள் உணவுதானியங்களை எத்தனால் உற்பத்தியை நோக்கி திருப்பி விட்டிருப்பதால் உணவுதானிய விலை உலகச் சந்தையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. எனவே 1960களில் செய்தது போல இறக்குமதியின் மூலம் உணவுப் பொருள் தட்டுப்பாட்டை ஈடுகட்டவும் முடியாது. தாங்கள் இதுகாறும் கடைபிடித்து வந்த தாராளமயக் கொள்கையின் தோல்விதான் இப்போது ஏற்பட்டுள்ள விலையேற்றம் என்பதை ஏற்றுக் கொண்டு அதனைச் சரிசெய்ய வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக இதையும் உழவர் களுக்கு எதிராகத் திருப்பி விடுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். உணவு எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப் படுத்துவது என்ற பெயரில் 10 இலட்சம் டன் உணவு எண்ணெய்யை இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது தற்காலிகமாக சந்தையில் உணவு எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தக் கூடும். ஆனால் எண்ணெய் வித்து உழவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த இறக்குமதியால் உள்நாட்டு உழவர்களின் எண்ணெய் வித்துச் சந்தை பறிக்கப்படுகிறது. இன்றைக்கு உள்ள அயல்நாணயக் கையிருப்பை காரணங்காட்டி இதைத் தவிர வேறுவாய்ப்பில்லை என்று அரசு வாதிடுகிறது. ஆனால் உண்மையில் இறக்குமதிச் சந்தையில் கோலோச்சுகிற பன்னாட்டு நிறுவனங்களையும் வடநாட்டு நிறுவனங்களையும் பாதுகாத்து உள்நாட்டு உழவர்களை சந்தையை விட்டுத் துரத்துவதில்தான் இது முடியும். தமிழகத்திற்கு இதில் முன்அனுபவம் உண்டு. 1970களில் உணவுதானிய உற்பத்தியில் குறிப்பாக நெல் உற்பத்தியில் தேவைக்கும் வழங்கலுக்கும் பெரிய இடைவெளி இருந்ததை காரணம்காட்டி தமிழகச் சந்தையை ஆட்சியாளர்கள் திறந்துவிட்டார்கள். ஆந்திரா அரிசியும் கர்நாடக அரிசியும் மத்திய தொகுப்பு என்ற பெயரால் பஞ்சாப்  அரியானா அரிசியும் தமிழ்நாட்டுச் சந்தையை ஆக்கிரமித்தன. இன்று தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி கிட்டத்தட்ட தன்னிறைவை எட்டும் அளவுக்கு இருந்தபோதிலும் தமிழகச் சந்தை தமிழ்நாட்டு உழவர்களுக்குக் கிடைக்கவில்லை. அயல் மாநில அரிசிகளை தமிழகச் சந்தையிலிருந்து விரட்ட முடியவில்லை.

இதே நிலை உணவு எண்ணெய் இறக்குமதியின் காரணமாக எண்ணெய் வித்து உழவர்களுக்கும் ஏற்பட இருக்கிறது. இதற்கு முன்னர் வாஜ்பாய் ஆட்சியில் மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் (பாமாயில்) ஏராளமாக இறக்குமதியானதால் உள்நாட்டில் எண்ணெய் வித்து விளைவித்த உழவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். ஏற்கெனவே உலகச் சந்தை நிலவரத்தின் காரணமாக பருத்தி உழவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டினோம். உணவுதானிய உற்பத்தியும் செய்ய முடியாது, பணப்பயிர் சாகுபடியும் பயன்தராது என்ற நிலையில் உழவர்கள் வேளாண்மையை விட்டு விரட்டப்படுவது தீவிரம் பெறும். விலையேற்றப் பிரச்சினையை உழவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் அரசாங்கமும் வலது சாரி, இடது சாரி அரசியல் கட்சிகளும் ஒன்றுபோல் செயல்படுகின்றன. சி.பி.எம். கட்சியோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ அல்லது ம.தி.மு.க.வோ எந்தக் கட்சி விலைவாசிப் பிரச்சினைக்கு போராட்டம் நடத்தினாலும் அவர்கள் எடுத்துக் காட்டுவது காய்கறி விலையைத்தான். ஆர்ப்பாட்டம் செய்கிற இளைஞர் அமைப்பினரோ மகளிர் அமைப்பினரோ காய்கறிகளை மாலையாகப் போட்டுக் கொண்டு கையில் அரிசி, பருப்பு போன்றவற்றை ஏந்திக் கொண்டு விலை உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவது வழக்கமாகிவிட்டது. இவர்கள் யாரும் கையில் ஒரு சிமெண்ட் பொட்டலத் தையோ, உயிர் காக்கும் மருந்து பாட்டிலையோ, வேறுபொருள்களையோ வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை. இன்றியமையாப் பொருள் என்ற பெயரால் உழவர்கள் விளைவிக்கும் பொருள்களைத்தான் இவர்கள் குறிவைத்துத் தாக்குகிறார்கள். ஒரு கொப்பøர தேங்காய் கொள்முதல் விலை குறைந்தது 5ரூபாய் வேண்டும் என்று உழவர்கள் கோரினால் அதனை எதிர்ப்பதில் பா.ஜ.க.வும் தேர்தல் கம்யூனிஸ்ட்டுகளும் ஒரே நிலையில் இருப்பதைப் பார்க்கமுடியும். சிமெண்ட், இரும்பு, மருந்து போன்றவை பெரும் பாலும் பெருமுதலாளிய நிறுவனங்களால் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் காய்கறி, அரிசி, பருப்பு முதலியவற்றை உற்பத்தி செய்பவர்கள் கோடிக்கணக்கான உழவர்கள். இவர்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பது கிராமப் பொருளாதாரத்தை பாதுகாக்கும். நிலத்திலிருந்து அவர்கள்  வெளியேறாமல் பாதுகாக்கும். தமிழர்களின் தாயக நிலம் வேற்றாருக்கு கைமாறாமல் பாதுக்கப்படும்.  ஒரு தேநீர் விலையை விடக் குறைவான விலைக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதை காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலை கொடுக்காமல் ஆட்சியாளர்கள் மறுப்பது இந்த அணுகுமுறையின் காரணமாகத்தான். அரசு தனது மானியச் செலவை உயர்த்திக் கொள்வதற்குமுன்வராமல், வாக்கு வாங்குவதற்காக தாங்கள் முன்வைக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோடிக் கணக்கான உழவர்களைப் பழிவாங்குகிறார்கள்.

இந்த அணுகுமுறை கிராமப்புறத்தில் பணச் சுழற்சியே இல்லாமல் மட்டுப்படுத்தி, உழவர்களை நகரங்களை நோக்கி விரட்டுகிறது. நகரங்களில் பல்வேறு சமூக பதட்டங்களும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் இதன் காரணமாக தீவிரப்படுகின்றன. "வருமானத்தை அதிகரித்தால் விலையேற்றம் ஒரு பிரச்சினையே அல்ல' என்ற முதலமைச்சர் கருணாநிதியின் அணுகுமுறைதான் ஒட்டுமொத்த இந்திய ஆட்சி யாளர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. அதற்காக எல்லா மக்களின் வருமானத்தையும் இவர்கள் உயர்த்தி விடுவதில்லை. குரல்கொடுக்கும் வலுவுள்ள நடுத்தர வர்க்கத்தை சரிக்கட்டிக் கொண்டு தங்கள் மக்கள் வி÷ராத, பொருளியல் கொள்கையை ஆட்சியாளர்கள் தங்கு தடையின்றிச் செயல்படுத்திக் கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துøர இந்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக இடைமட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு இரண்டு மடங்கிலிருந்து மூன்று மடங்குவøர ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அரசு ஊழியர்களும் சில ஒழுங்கமைக் கப்பட்ட தொழிலக ஊழியர்களும் விலைவாசிக்கேற்ற அகவிலைப்படி பெறுகிற வாய்ப்பில் வைக்கப் பட்டுள்ளார்கள். இப்போது ஏற்படும் விலை உயர்வு இவர்களைப் பெருமளவு பாதிப்பதில்லை. இந்த வாய்ப்பில்லாத உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத தற்காலிகத் தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர் போன்ற பிரிவினர் விலை உயர்வுத் தாக்குதலை எந்தப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் எதிர்கொள்ளுகிறார்கள். இந்தத் தாராளமய பொருளியல் கொள்கை மாறினாலே தவிர இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வுச் சிக்கலிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாது. தாராளமய  தனியார்மயக் கொள்கை தோல்வி யடைந்து வருவதை உலக பொருளியல் நிலைமை எடுத்துக்காட்டுகிறது.

இங்கிலாந்தில் திவாலாகிவிட்ட  நாதர்ன்ராக்(Northern Rock Bank வங்கியை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டதும் அமெரிக்காவின் பேர்ஸ்டேன்ஸ் (Bear Stearns Bank) வங்கியை அமெரிக்க அரசு ஏற்றுள்ளதும் இந்தத் தாராளமயக் கொள்கை தோல்வியடைந்ததற்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்திய பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்ட போது ஒ÷ர நாளில் இந்திய சேம வங்கி 1700 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் ஈடுபடுத்தி சந்தை சரியாமல் முட்டுக்கொடுக்க முனைந்ததும், ரூபாய்க்கு எதிரான டாலர் நாணய மதிப்பு சரியும்போது இந்திய சேமவங்கி டாலøர வாங்கிக் குவித்து ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க முனைந்ததும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. இதனைப் படிப்பினையாகக் கொண்டு இந்திய அரசு சந்தை நாயகத்திற்கு அடிபணியாமல் மக்கள் சார்பில் சந்தையில் தலையிட வேண்டும்.

* இணையதள வர்த்தகச் சூதாட்டத்தை (ஆன்லைன் வர்த்தகம்) தடைசெய்ய வேண்டும்.

* உணவு தானியங்கள் மற்றும் வேளாண்மை விளைபொருள்களுக்கு இலாபகரமான விலை அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

* உணவுதானிய வர்த்தகத்திலும், இன்றி யமையாப் பொருள் வணிகத்திலும் கார்கில், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ், பிர்லா, பாரதிமிட்டல், öரகேஜா போன்ற வடநாட்டு பெருநிறுவனங்களும் ஈடுபடுவதைத் தடைசெய்ய வேண்டும்.

* செலவுக்குறைவான, நீர், நிலவளங்களைப் பாதுகாக்கும் இயற்கை சார்ந்த நீடித்த சாகுபடிகளுக்கு வேளாண் மானியத்தை அதிகமாக அளித்து அவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

* வேளாண்மை சார்ந்த மக்கள் தொகையை குறைப்பதுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற மேற்கத்திய அணுகுமுறையைக் கைவிட்டு சிறு நிலவுடைமையாளர்களை அடிப்படையாகக் கொண்ட
வேளாண் உற்பத்தியைச் சார்ந்திருக்கும் அணுகு முறைக்கு திரும்பவேண்டும்.

* புன்செய் தானிய உற்பத்தியைத் தீவிரப் படுத்துவது, பழம், காய்கறி ஆகியவற்றைச் சேமிக்க உற்பத்தி இடங்களுக்கு அருகே குளிர்பதன கிட்டங்கிகள் அமைப்பது போன்ற வேளாண் சார்ந்த
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அரிசி உணவு மட்டுமே சாப்பிடும் ஒற்றை உணவு முறையிலிருந்து கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட கலப்பு உணவுப் பழக்கத்திற்குத் தமிழர்கள் திரும்ப வேண்டும். அரசு இவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

* வேளாண்மைத் துறையில் அரசின் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

*சிறுதொழில் முனைவோருக்கு மானிய விலையில் இரும்பு உள்ளிட்ட இடுபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

*விலைவாசியோடு இணையாத ஊதிய முறையே எந்த பிரிவு உழைப்பாளர்களுக்கும் இருக்கக் கூடாது.
இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு நெருக்கடி தாராளமய உலகமய பொருளியலால் விளைந்த ஒன்று; இக் கொள்கைக் கைவிடப்பட வேண்டும் என்ற விழிப் புணர்வுபடித்த இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.