ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஆகஸ்ட்டு 2009


தலையங்கம்
புதிய போர்வாள் ஏந்திப் புறப்படு


போர் நடத்தியும் ஓர் இனத்தை அழிக்கலாம் அயலாரைப் பெரும் எண்ணிக்கையில் புகவிட்டும் ஓர் இனத்தை அழிக்கலாம்.



இந்த இரண்டு வழிகளிலும் தமிழினம் அழிகிறது. ஈழத்தில் போர் நடத்தி அழிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அயல் இனத்தாரை அதிக எண்ணிக்கையில் புகவிட்டு அழிக்கிறார்கள்.


ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இன அழிப்பில் இந்திய அரசின் பாத்திரம் முகாமையானது. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், மிகை எண்ணிக்கையில் இந்திக்காரர்களை வேலைக்கு அமர்த்தும் போக்கு தீவிரப்பட்டு வருகிறது.



அண்மையில், நடுவண் உற்பத்தி வரி - தமிழ்நாடு மண்டலத்திற்கு(ஊநவெசயட நுஒஉளைநஇ வுயஅடையெனர ணுழநெ) நடுவண் அலுவலர் தேர்வாணையம் அலுவலர் தேர்வு நடத்தியது. இதன்வழி 400 ஊழியர்கள் தமிழ்நாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த நானூறு பேரில் நான்கு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த நான்கு பேரும் முன்னாள் படைத்துறையினர் என்ற பிரிவின் கீழ் தேர்வானவர்கள்.


இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே அத்தேர்வு நடப்பதால், இந்திக்காரர்கள் தங்கள் தாய்மொழியில் எழுதுகிறார்கள். தமிழர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இரண்டு மொழிகளுமே தமிழர்களுக்கு அயல் மொழிகள். இந்திக்காரர்களை விடக் குறைந்த மதிப்பெண் வாங்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்படுகிறது.


அத்துடன் பெயரை வைத்து இனத்தைத் தெரிந்து கொண்டு தமிழர்களைத் தோல்வி அடையச் செய்யும் தாள் திருத்துவோரும், அதிகாரிகளும் வடக்கே உள்ளனர்.


தமிழகத்தில் உள்ள நடுவண் உற்பத்தி வரி அலுவலகங்களுக்காகத் தேர்வான 396 பேரில், உ.பி., ம.பி., பீகார் உள்ளிட்ட இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மிகுதியும் உள்ளனர். கடந்த ஆண்டு சென்னை மாநகரில் உள்ள வருமானவரி அலுவலகங்களுக்கு மட்டும் 200 இந்திக்காரர்கள் வேலையில் சேர்க்கப்பட்டனர். தமிழக மிகுமின் நிறுவனங்கள் உள்ளிட்ட பெருந்தொழில் நிறுவனங்களில் வடநாட்டாரும் பிற அயல் இனத்தாரும் தமிழர்களைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கப்படுகிறார்கள். தமிழகத் தனியார் தொழில் நிறுவனங்களில் ஏராளமாக அயல் இனத்தார் அன்றாடம் வேலைகளில் சேர்கிறார்கள்.


ஏற்கெனவே, தமிழகத் தொழில் வணிகங்களில் மார்வாரி - குசராத்தி சேட்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்போது மலையாளிகளும் தொழில், வணிகங்களைக் கைப்பற்றுகிறார்கள். அயலார் ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் எந்த அளவு அபாயக் கட்டத்தை அடைந்து விட்டது என்பதற்கு அடையாளம் அண்மையில் திருப்பு+ரில் நடந்த நிகழ்வு! அதிர்ச்சி அளிக்கிறது. திருப்பு+ர் மெரிடியன் அப்பேரல்ஸ் உள்ளாடை நிறுவனத்தில் வேலைபார்க்கும் சிங்களவர்களும் மிகை எண்ணிக்கையில் உள்ள ஒரியாக்காரர்களும் சேர்ந்து கொண்டு் தமிழ்த் தொழிலாளிகளை அடித்துக் காயப்படுத்தினார்கள். அந்த நிறுவனத்தின் மேலாளர் சமிந்த பண்டார நாயக்கா என்ற சிங்களவர்.



நடவடிக்கை கோரி தமிழ்த் தொழிலாளிகள் உண்ணாப் போராட்டம் நடத்தினார்கள். என்ன வெட்கக்கேடு!


இதுபோல் ஒரு தாக்குதல் ஒரிசாவில் ஒரியர்களுக்கு நடந்திருந்தால், பீகாரில் பீகாரிகளுக்கு நடந்திருந்தால் கொழும்பில் சிங்களவர்களுக்கு நடந்திருந்தால் என்ன எதிர்வினை நடந்திருக்கும்? மானக்கேடு, மானக்கேடு!


தேர்தல் அரசியல் தரகர்கள் நம்மினத்தவரை செயலற்றவர்களாக மாற்றிவிட்டார்கள். இந்திய அதிகாரவர்க்கம் ஒரு சூதுத் திட்டத்தை ஓசைப்படாமல் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்று இருப்பதை மாற்றி, கலப்பின மாநிலம் என்று ஆக்குவதே அத்திட்டம்!



தமிழக மக்கள் தொகையில் தமிழர்கள், அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை மக்களாக சிறுத்துப் போக வேண்டும் என்பதே அத்திட்டம். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்த ஆபத்தை உணர்ந்து 2005 மே 21இல் “வெளியாரை வெளியேற்றுவோம்” எனற் தலைப்பில் ஈரோடையில் மாநாடு நடத்தியது. ஒனறு் வெளியாரை வெளியேற்றும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் அல்லது தமிழினம் தனது தாயகத்தை இழக்க வேண்டும். இவ்விரண்டுமற்ற இன்னொரு பாதை நம்முன் இல்லை.


மலைகளை இழந்தோம், வற்றாத ஆறுகளை இழந்தோம், அலைகடல் தீவினை இழந்தோம், அனைத்தையும் இழந்து சொந்த மண்ணில் வந்தேறிகளுக்கு அடிமைகள் ஆகப்போகிறோம்! வெள்ளையர் ஆண்டபோது, பாலாற்றில் ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடியது. வடதமிழ்நாட்டின் செவிலித்தாய் அது!



வெள்ளையர்கள் நமக்கு 1892-ஆம் ஆண்டு போட்டுத்தந்த ஒப்பந்தப்படி, தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் பாலாற்றில் கன்னடரோ. தெலுங்கரோ அணைகட்ட முடியாது. வெள்ளையர் ஆட்சி முடிந்து தில்லிக் கொள்ளையர் ஆட்சி வந்தபின், தெலுங்கர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் பாலாற்றின் குறுக்கே 30 அணைகள் கட்டித் தண்ணீரைத் தடுத்துவிட்டனர். கசிவு நீரையும் தடுக்கக் கணேசபுரத்தில் முப்பத்தோராவது அணை கட்டுகிறது ஆந்திரா!


வழக்குப் போட்டிருக்கிறோம், கடிதங்கள் எழுதிக் கொண்டுள்ளேன் என்று வாய் வீச்சு வீசுகிறார் தமிழக முதலமைச்சர். காவிரியின் கதி என்ன? கர்நாடகத்தில் வௌ்ளச் சேதம் ஏற்படாமல் தடுக்க, மிகை நீரைத் தமிழகத்தின் பக்கம் திறந்து விடுவார்கள். கர்நாடகத்தின் வடிகால் தான் தமிழகக் காவிரி! சட்டப்படி வர வேண்டிய தண்ணீரை அனுமதிக்கமாட்டார்கள்.



முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று மலையாளிகள் சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். போக்கிரித்தனத்தை மூடிமறைக்க புதிய அணை கட்டப் போவதாகப் போக்குக் காட்டுகிறார்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு, சிவகிரி பகுதியில் செண்பகாதேவி ஆறு ஆகிய தமிழக ஆறுகளைக் கேரளம் தனதாக்கிக் கொண்டுள்ளது. பன்னாட்டு முதலாளிகளும்,



இந்தியப் பெருமுதலாளிகளும் உலகமயம் என்ற “மந்திரக் கோலைக்” காட்டிக்காட்டி, நம் பொருளியலை, நம் தாயகத்தை விழுங்குகின்றனர். அன்னை மண்ணிலேயே அயல் இனத்தார்க்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களில் சிலர் தாங்கள் ஆதிக்க சாதியினர் என்று ஆணவப்பட்டுக் கொள்வதில் என்ன வீரம் இருக்கிறது? என்ன பெருமை இருக்கிறது?


தமிழ் இனத்திற்குள் பிறப்பால் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? வரலாற்றில் நம் இனத்தின் மீது படிந்துவிட்ட அழுக்குகளில் சாதியும் ஒன்று. அதை மனதிலிருந்து துடைத்தெறிய வேண்டும்.



வாழ்ந்து செழித்த இனம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. தமிழினமே, உன்னையே நீ எண்ணிப்பார்! உலகிற்கு நீ வழங்கிய கொடைகளை எண்ணிப்பார்! உன் மொழி தான் உலகின் முதல்மொழி! உன் நாகரிகம் தான் உலகின் முதல் நாகரிகம்! சிந்து வெளி நாகரிகத்திற்கு நிகராக அக்காலத்தில் எந்த நாகரிகம் இருந்தது?


நீடு துயில் களைந்து நிமிர்ந்து நில்! புதிய போர்வாள் இதோ, பிடி!


“தமிழ்த்தேசியம்” என்பது அதன் பெயர்!


இப்போது உன்னை வெல்ல ஒருவராலும் முடியாது. வரும் ஆவணி 10 ஆம் நாள், ஆம், ஆகஸ்ட்டு 26, புதன்கிழமை, தமிழ்த் தேசிய எழுச்ச்சி நாள்!!


ஊர்வலம், ஆர்ப்பாட்டம், விளக்கக்கூட்டம் என வீதிக்கு வா! வரலாற்றுக் குதிரையின் முதுகிலமர்ந்து அதன் பிடரியைப் பிடித்து செலுத்து!

ஆகஸ்டட்டு 2009 இதழை கீழுள்ள பதிவில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.