தலித் மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்., கட்சியினர் வெறியாட்டம் - நா.வைகறை
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், கரியாப்பட்டிணம் காவல் சரகத்துக்குட்பட்ட கிராமம் செட்டிப்புலம். இது வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு சுமார் 1400 குடும்பங்கள் உள்ளன. வன்னியர்கள் (கவுண்டர்கள், படையாட்சிகள்) முத்தரையர்கள், தேவர்கள், கோனார்கள், பறையர்கள் ஆகியோர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
சிறுபான்மையினராக பள்ளர்கள் மற்றும் இதர சாதிகளில் ஒரு சிலர் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட சாதியில் கவுண்டர்கள் பெரும்பான்மை சமூகத்தினராக உள்ளனர். தாழ்த்தப்பட்டவர் குடும்பங்கள் 120. செட்டிப்புலத்தில் ஏகாம்பரேஸ்வர் என்ற சிவன்கோயில் உள்ளது. சிறையன்காடு, இடையர்காடு, நடுக்காடு, தெற்குக் காடு, பச்சையன்காடு, தியாகராஜபுரம் என்ற ஏழு பகுதிகள் (கரைகள்) செட்டிப்புலத்தில் உள்ளன.
ஏகாம்பரேஸ்வரர் கோவில் வடபாதிமங்கலம் வி.எஸ்.தியாகராஜ முதலியாரால் கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள்கூட வி.எஸ்.தியாகராச முதலியார் நிலத்தில் வேலை செய்ய குடியமர்த்தப்பட்டவர்கள்தான். நில உச்சவரம்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்தில் இக்கோவில் ஊர் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2005-ல் பொதுமக்களிடம் பணம் வசூலித்து (தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கிவிட்டு) குடமுழுக்கு நடைபெற்றது.
தாழ்த்தப்பட்ட மக்கள் இக்கோவிலுக்குள் சென்று வழிபட உரிமையில்லை; பொங்கலிட உரிமையில்லை. வெளியில் நின்று அர்ச்சனை தட்டை குருக்களிடம் கொடுக்க, அவர் அர்ச்சனை முடித்து வெளியில் வந்து பிரசாதம் தருவார். பொங்கல் கூட வெளியில் தான் வைக்கப்படும். இக்கோவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகுதியாக வாழும் பகுதியில் உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் உள்ளே சென்று வழிபட, பொங்கலிடத் தடையில்லை.
செட்டிப்புலத்தில் உள்ள முடிதிருத்துபவர்கள் (2 குடும்பங்கள் உள்ளன) சலவைத் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தொழில் செய்வதில்லை.தலித் மக்கள் வீட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூட சலவைத் தொழிலாளர் வேட்டி கட்ட வரமாட்டார்கள்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பிணம் தூக்குவது, மயானத்தொழில் செய்வது, இழவு சொல்லுவது போன்ற வேலைகளைத் தாழ்த்தப்பட்டவர்களே செய்து வருகின்றனர்.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்த உரிமைகோரி செப்டெம்பர் 30 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கோயில் நுழைவுப் போராட்டம் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. சுமார் முந்நூறு பேருடன் வி.மாரிமுத்து தலைமையில் ஊர்வலமாகச் சென்றபோது செட்டிப்புலத்தைச் சார்ந்த மேல்சாதியினர் கோவிலைப் பூட்டுப் போட்டு பூட்டினர்.
இந்நிலையில் கோட்டாட்சியர் இராசேந்திரன் 144 தடை ஆணை பிறப்பித்து கோவில் பூட்டுக்கு சீல்வைத்தார். ஊர்வலம் சென்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மறுநாள் (01.10.2009) காலை ஊராட்சிமன்றத் தலைவர் மணிமாறன் கோவில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். மணிமாறன் உள்ளிட்ட 218 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்நாளே மணிமாறன் விளம்பரம் செய்து ஆட்களை கோவிலுக்கு வரச் சொல்லியுள்ளார்.செட்டிப்புலம் பகுதி பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்கள் (அவர்களின் பிரதிநிதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகிய இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் வகையில் அமைதிப்பேச்சு 08.10.2009 அன்று நாகப்பட்டினம் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 14.10.2009 அன்று காலை 11 மணிக்கு நாகை மற்றும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கிராமப் பொதுமக்கள் வழிபாடு செய்வதென்று இரு தரப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும், தொடர்ந்து எந்த நிலையிலும் தலித் பிரிவினரை வந்தவுடன் மேல் சாதியினர் வாகனங்களை மறிக்கின்றனர். சிலர் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த வாகனத்தைத் தாக்க முற்பட, காவல்துறை தடுக்க, வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மேல் சாதியினர்க்காதரவாக வர்த்தகச் சங்கம் செப்டம்பர் 30 அன்றும், அக்டோபர் 14 அன்றும் கடையடைப்பு நடத்தியது.
மூடப்பட்டிருந்த கடைகளுக்குப் பின்னிருந்து கல், கட்டை, பாட்டில் போன்றவை கோட்டாட்சியர் வாகனம் உள்ளிட்ட ஊர்திகளின் மீது கோயிலுக்குள் நுழையக்கூடாது என யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
14.10.2009 காலை கோட்டாட்சியர் இராசேந்திரன் - காவல்துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன், துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன - அரசு அதிகாரிகள் சிலர், கிராமத்தில் உள்ள தலித் மக்களைக் காவல்துறை வேனில் ஏற்றிக்கொண்டு கோயிலை நோக்கிச் சென்றனர்.
மூங்கிலடி கடைத்தெரு பகுதியைக் கடந்துதான் கோவிலுக்குச் செல்ல முடியும்.அக்கடைத்தெரு, மூன்று சாலைகளின் சந்திப்பு. கோட்டாட்சியர் தலைமையில் வாகனங்கள் கடைத் தெருவிற்கு வீசப்பட்டன. கோட்டாட்சியரின் ஓட்டுநர் முருகானந்தம் தாக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திக் கூட்டத்தை கலைத்தது. பலருக்குக் காயம் ஏற்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கோவில் நுழைவு ஊர்வலத்தில் அமைதிப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட நாகை சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, மற்றுமுள்ள அக்கட்சிப் பொறுப் பாளர்கள், தலித் மக்கள் கலந்து கொண்டனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் யாரும் வரவில்லை.
ஊராட்சி மன்றத்தலைவர் மணிமாறனும், ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் சிவப்பிரகாசமும் ஊருக்குள்தான் இருந்தனர். அவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சிவப்பிரகாசத்தை சந்தித்து விவரம் கேட்டோம். அவர் “எங்கள் ஊருக்குள் தீண்டாமைப் பிரச்சினை எதுவுமில்லை. மாரிமுத்து எங்களிடம் சொல்லியிருந்தால் இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம். இதுக்கொரு போராட்டம் தேவையில்லை” என்றார்.
ஊராட்சிமன்றத் தலைவர் மணிமாறனிடம், கோவில் பூட்டை உடைத்தது ஏன்? என்று கேட்டோம் அதற்கு அவர், “நான் முதலில் ஆன்மீகவாதி; பிறகு தான் அரசியல்வாதி. பிரதோசம் அன்று கோயில் பூட்டிக் கிடப்பது நல்லதாக எனக்குத் தெரியவில்லை. எனவே பூட்டை உடைத்தேன்” என்றார்.
அமைதிப் பேச்சுக்குப் பிறகு 13.10.2009 அன்று பிற்படுத்தப் பட்டவர்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் அ.இ. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவருமான சந்தோசம் தலைமையில் தனிக்கூட்டம் நடத்தியுள்ளனர். வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுக்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதற்குப் பகுதி வாரியாக ஆட்களைத் தேர்வு செய்துள்ளனர். செலவை ஊர் ஒத்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளனர்.
அரசு நிர்வாகத்தை எதிர்த்ததற்கு என்ன காரணம்? ஒன்று தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரான சாதி வெறி இன்னொன்று இவர்களைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்ற துணிச்சல். சீல் வைத்த கோவில் பூட்டை உடைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர், தி.மு.க. ஆதரவாளர். வேதாரண்யம் சட்ட மன்ற உறுப்பினர் வேதரத்தினத்திற்கு (தி.மு.க) நெருக்கமானவர். ஒரே வகுப்பினர்.
கோவில் பூட்டை உடைத்த பிறகு ஊராட்சிமன்றத் தலைவரை, கோட்டாட்சியர் கடுமையாக பேசிவிட்டு கிராம நிர்வாக அதிகாரி மூலம் புகார் கொடுக்கச் சொல்லியுள்ளார். 218 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் யாரும் கைது செய்யப்படவில்லை. காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் காரணத்தால் காவல்துறை நடவடிக்கையும் இல்லை.
முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சந்தோசம் மாற்றுக் கட்சிக்காரர்தானே தவிர மாற்றுச் சாதி அல்ல. சாதி ஆதிக்க உணர்ச்சி இவர்களை இணைக்கிறது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட வைக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுத்த முடிவின்படி வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம் ஏன் வரவில்லை? தகராறு செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பது பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் மணிமாறன் காவல்துறையிடமும், கோட்டாட்சியரிடமும் பேசியதாக எங்களிடம் கூறினார். ஆனால், உரிய வலுவுடன் காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் அங்கு செல்லவில்லை. குறைந்த எண்ணிக்கையில் காவல்துறையினர் அங்கு சென்றது.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரனின் அலட்சியமே. இந்நிகழ்விற்குப் பிறகு ஊர் முழுக்கக் காவல்துறையினர் உள்ளனர். குதிரை களவு போன பிறகு லாயத்தை பூட்டியவன் நிலையில் உள்ளது காவல்துறை நடவடிக்கை. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோசம் உள்ளிட்ட 315 பேர் மீது வன்கொடுமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
14.10.2009 முதல் ஊருக்குள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆண்களே இல்லை. அப்பெண்கள் பீதியில் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இப்போது உள்ளுரிலும் வேலை இல்லை. சுற்றுப் பகுதிகளிலும் வேலை தரக்கூடாது என மிரட்டியுள்ளார்கள்.
“நாங்க கோவில்ல பங்கு கேட்கல, சாமிய கும்பிடத்தான் உரிமை கேட்குறோம், இது தவறா?” என்றார் தலித் பக்கிரிசாமி. வேதாரண்யம் அல்லது திருத்துறைப்பூண்டிக்குச் சென்றே இளைஞர்கள் முடிவெட்டிக் கொள்கின்றனர். உள்ளுரில், மேல்சாதி யார்க்குக் முடித்திருத்துவோர் தலித்து களுக்கு முடித்திருத்தத் தடை. ஏகாம்பரேஸ்வரர் வழி பாட்டுச் சிக்கலுக்குப் பிறகு மாரியம்மன் கோவிலிலும் நாங்கள் வழிபடத் தடையிட்டுள்ளனர் என்றார்கள், ஊராட்சி மன்ற உறுப்பினரும் சி.பி.எம். கிளைச் செயலாளருமான கோவிந்தசாமியும், இந்திய குடியரசுக் கட்சியைச் சார்ந்த பிர்லா தங்கதுரையும்.
“தாழ்த்தப்பட்ட மக்கள் அச்சத்தின் பிடியில் நம்பிக்கையற்று வாழ்கின்றனர்” என்றனர். செப்டம்பர் 30 அன்று திருவாரூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசிய கலைஞர், “இந்த ஆட்சி ஏழை, எளிய மக்களுக்குத் தேவையானதை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. அதை நிறை வேற்றும் வரையில் ஆட்சியில் இருப்போம். அதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுமேயானால் நாங்கள் ஆட்சியிலேயே இருக்க மாட்டோம் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் (தினத்தந்தி 01.10.2009).
ஆனால் நடைமுறையில் சாதி வெறியுடன் செயல்படும் தன் கட்சி உறுப்பினர் மீது கூட நடவடிக்கை எடுக்க கலைஞர் அச்சம் கொள்கிறார். சமத்துவபுரம் கட்டிக்கொடுப்பது, பெரியார் - அம்பேத்கர் விருதுகள் வழங்குவது மட்டும் போதாது. சாதி வெறியோடு செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்து சமூக நீதியை உண்மையாக நிலைநாட்ட வேண்டும்.
கோரிக்கைகள்
27.10.2009 அன்று நாகை மாவட்ட ஆட்சியர் நடத்திய அமைதிப்பேச்சில் மாவட்ட ஆட்சியர் முனியநாதன் 28.10.2009 அன்று தலித் மக்களை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்சென்று வழிபட வைத்துள்ளார்.இது ஒரு நாள் கூத்தாக இல்லாமல் தொடர அரசு தொடர்ந்து முயலவேண்டும்.
தமிழ் இன உணர்வாளர்கள், மனித நேயர்கள் சாதி கடந்து, பொது நீதிக்கு போராட வேண்டும். தலித் மக்கள் சம உரிமை பெறத் தோள் கொடுக்க வேண்டும்.
(19.10.2009 அன்று நாகை மாவட்டம், செட்டிப்புலத்தில் தோழர்கள் நா.வைகறை (தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க.), வழக்கறிஞர் இ.தனஞ்செயன் (ஒன்றியச் செயலாளர், தி.து.பூண்டி த.தே.பொ.க.), கா.பாலசுப்ரமணியம் (த.தே.பொ.க. திருத்துறைப்பூண்டி), இரா.பிரபாகரன் (தமிழக இளைஞர் முன்னணி, திருத்துறைப்பூண்டி), க.அர்ச்சுணன் (த.தே.பொ.க., பட்டுக்கோட்டை), வழக்கறிஞர் ம.மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து, திரட்டிய விபரங்கள் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டது).
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)
Leave a Comment