இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக இரட்டை வேடம் போடுகிறது டெசோ - தலைவர் பெ. மணியரசன் அறிக்கை
இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக இரட்டை வேடம் போடுகிறது டெசோ
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை
ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை விசாரிக்க தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும் என்ற தெளிவான கோரிக்கையையும், ஈழத்தமிழர்கள் இலங்கையில் சேர்ந்து இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை அறிய ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற துல்லியமான கோரிக்கையும் தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இன உணர்வுமிக்க, மனித உரிமையில் அக்கறையுள்ள வெகுமக்களால் கடந்த ஆண்டிலிருந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.
ஈழத்தமிழர் அழிப்புப் போரில் பங்குகொண்ட இந்திய அரசு மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தும் திருப்பணியில் பன்னாட்டு அரங்கில் ஈடுபட்டுள்ளது. இந்திய ஆட்சியாளர்களின் இத்திருப்பணியின் ஓர் உறுப்பாக கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள டெசோ அமைப்பு பங்காற்றி வருகிறது என்பது இவ்வாண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
1.2.2014 அன்று சென்னயில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் மேற்கண்ட தெளிவான கோரிக்கைகளை குழப்பிவிடும் நோக்கத்தோடு பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டு வகையில் தீர்மானங்களை டெசோ கூட்டம் நிறைவேற்றியுள்ளது.
வருகின்ற மார்ச்சு மாதம் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வர உள்ள, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிப்பதோடு, சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று இந்திய அரசு தனியான ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிய வேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.
சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு விசாரணை வேண்டுமென்று இந்திய அரசு தீர்மானம் முன்மொழிய வேண்டும் என்று கேட்கிற டெசோ, அமெரிக்கா முன்மொழி யும் தீர்மானத்தையும் ஆதரிக்க வேண்டுமென்று கேட்கிறதே இதன் பொருள் என்ன? வரப்போகும் அமெரிக்கத் தீர்மானத்தில் என்ன கோரிக்கை இருக்கிறது என்பது டெசோவுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அதை ஏன்? தீர்மானத்தில் வெளிப்படுத்த வில்லை? தெரியாவிட்டால் தெரியாத ஒரு கோரிக்கையை ஆதரிக்கும்படி இந்திய அரசை வலியுறுத்துவது ஏன்? கடந்த ஆண்டும் இதே போல் முந்திக்கொண்டு அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென பிப்ரவரி மாதத்திலேயே கோரிக்கை வைத்தார் கருணாநிதி.
இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை தமிழின அமைப்புகள் அம்பலப்படுத்தின. அதன் நகலை மாணவர்கள் எரித்தனர். தமிழகம் தழுவிய மாணவர் போராட்டம் எழுச்சிப் பெற்றது.
இந்த எழுச்சியை பார்த்து கருணாநிதி பின் வாங்கி அமெரிக்கத் தீர்மானம் வேண்டாம், சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு கோரி இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கூறி குட்டிக் கரணம் போட்டார். இவ்வாண்டும் பிப்ரவரி முதல் நாளிலேயே கருணாநிதியும், டெசோவும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் நோக்கில், தமிழகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் எழுச்சிக் கொண்டுள்ள தமிழின உணர்வாளர்களை குழப்பிவிடும் தந்திரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்திய ஆளும் வர்க்கம், இனப்படுகொலை குற்றவாளிகளான இலங்கை ஆட்சியாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆகியோருக்கு நிரந்தர விசுவாசியாக இருக்க கருணாநிதியும் டெசோவும் முடிவு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் தமிழினத்திற்கு நிரந்தமாக துரோகம் செய்யும் வேலையில் இருக்கிறார்கள் என்றும் புரிகிறது.
அடுத்து ஈழத் தமிழர்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையிலும் கருணாநிதியும் டெசோவும் குழப்பம் உண்டாக்குகிறார்கள். ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்கு கிடைத்திடும் வகையில் 13ஆம் அரசியல் சட்டத்திருத்தத்தை நடை முறைப்படுத்திடவும் இலங்கை அரசை வலியுறுத்தி இந்திய அரசு செயல்பட வேண்டுமென்று டெசோ தீர்மானம் கூறுகிறது
முதலில், 13 ஆவது திருத்தத்தின் படி ஈழத்தமிழர்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்காது என்று டெசோ தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். அப்படி தெரிந்திருந்தும் 13 ஆவது திருத்தத்தின் படி ஈழத்தமிழர்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று டெசோ கோருவது யாரை பாதுகாக்க, யாரை ஏமாற்ற.
இந்திய அரசையும், இலங்கை அரசையும் பாதுகாக்கவும், ஈழத்தமிழர்களை ஏமாற்றவும்தான் டெசோ இது போன்று தீர்மானம் போட்டுள்ளது. அடுத்து கருத்து வாக்கெடுப்பு நடத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்திய அரசை கோருகிறது டெசோ தீர்மானம். காளை மாட்டில் பால் கறந்து பசியால் துடிக்கும் குழந்தைக்கு தருகிறேன் என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இலங்கை அரசே கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருவது. இன விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடந்த எந்த நாட்டிலும் இன ஆதிக்கம் செய்த அரசு தானே முன் வந்து கருத்து வாக்கெடுப்பு நடத்தியதில்லை.
ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் தலையிட்டு பன்னாட்டு மேற்பார்வையாளர்களின் கண்காணிப்புக்கு கீழ்தான் கருத்து வாக்கெடுப்பு கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகளில் நடந்துள்ளன.
ஈழத்தமிழர்களிடம் கருத்துவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரும் டெசோ தலைவர்களின் நெஞ்சத்தில் மறைப்பதற்கு மாசு,மரு எதுவும் இல்லை என்றால் ஐ.நா. மன்றத்தை நோக்கி அல்லவா அந்த கோரிக்கையை வைத்திருக்க வேண்டும். ஐ.நா. மன்றத்திடம் இந்தியா கோர வேண்டும் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். இக்கோரிக்கையை இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று டெசோ கேக்கும் போதுதான் டெசோ திரைக்குப் பின்னால் எத்தனை எத்தனையோ மர்மங்கள் ஒளிந்து கிடக்கின்றன என்பதை ஊகிக்கமுடிகிறது.
கருணாநிதி அவர்களோ, இதர டெசோ தலைவர்களோ ஈழச் சிக்கலில் தமிழர்களை குழப்பிவிடும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் என்பது எமக்குத் தெரியும். இச்சிக்கலில் அவர்கள் தாங்களே முன் வந்து தங்களின் நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டவர்கள். எனவே அவர்களால் தமிழினத்தை குழப்ப முடியாது என்று நமக்குத் தெரிந்தாலும் அவர்கள் தெரியாமல் இந்த தவறுகளை செய்ய வில்லை; இந்திய ஆளும் வர்க்கத்திடம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி மீண்டும் மீண்டும் தங்களின் குழப்ப வேலைகளை செய்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே இவ்வறிக்கை தேவைப்பட்டது.
20. 2. 2014 இல் கண்டன ஆர்ப்பாட்டம்:
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 1.2.2014 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் ஈழச் சிக்கல் குறித்து தெளிவான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவற்றை முன் வைத்து 20.2.2014 அன்று சென்னையிலும் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத்தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி, மே 17 இயக்கம், விடுதலைத் தமிழ்ப்புலிகள், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மற்றும் தமிழகம் முழுவதிலிருந்து தமிழ்த் தேசிய, மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் தமிழீழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழர்களிடம் தமிழீழம் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2. வரும் மார்ச்சு மாதம் ஜெனிவாவில் தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் இலங்கை அரசு நடத்திய தமிழினப் படுகொலை குற்றங்கள் மீது விசாரணை நடத்தி, இராசபட்சேயையும் மற்ற இலங்கை அரசு தரப்பினரையும் பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்திட வழி செய்யும் வகையில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு மன்றம் அமைத்திட வேண்டும். இதற்குரிய தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசு முன் மொழிய வேண்டும்.
இந்தியாவில் வாழும் 8 கோடி தமிழர்களுக்கான பன்னாட்டு அரங்க பிரதிநிதித் துவம் இப்போது இந்தியா வழியாகத்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே இந்தியாவில் வாழும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியா மேற்கண்ட இரண்டு தீர்மானங்களையும், ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும் முன் மொழிந்து அவை வெற்றி பெற உலக நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும்.
இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து மேற்கண்ட தீர்மானங்கள் செயலுக்கு வரும் வகையில் பெருந்திரளாக தமிழ் மக்கள் பங்கேற்று பிப்ரவரி 20 கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Leave a Comment