ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திருவள்ளூரில் சேமிப்பு கிடங்கு சுவர் இடிந்து 11 கட்டிட தொழிலாளர்கள் பலி : கிடங்கு உரிமையாளர் கைது


திருவள்ளூர் மாவட்டம் அலாமதி அருகேயுள்ள உப்பரப்பாளையத்தில் கடந்த 06.07.2014 அன்று தனியாருக்கு சொந்தமான கிடங்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

தனியாருக்கு சொந்தமான 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கிடங்குகளின் அருகே புதிதாக மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவரையொட்டி குடிசை வீடுகள் கட்டப்பட்டிருந்தது. 

இதில் குடும்பம், குடும்பமாக தொழிலாளர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீடுகளில் விழுந்து அமுக்கியது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 

இதில் 19 வயதான ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து நாகராஜ் கூறுகையில், ஆந்திரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் குடிசை வீட்டில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வந்தோம். என்னுடைய தந்தை பண்டியா கொத்தனார் வேலையும், நான் சித்தாள் வேலையும் செய்தோம். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் தொழிலாளர்கள் சிலர் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வெளியே சென்றிருந்தனர். என்னையும் சேர்த்து 12 பேர் குடிசை வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தோம்.

நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் காற்று மற்றும் பலத்த மழை இடைவிடாமல் பெய்துகொண்டே இருந்தது. சில நிமிடத்திற்குள் திடீரென ஓலை குடிசை வீடுகள் அனைத்தும் பெயர்ந்து அப்படியே சரிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. 

சிறிது நேரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்படியே மயங்கிவிட்டேன். மீண்டும் எழுந்தபோது இடிபாடுகளை அகற்றம் செய்யும் பணி நடந்தது. உடனே நான் என்னுடைய கைகளை இடிபாடுகளுக்கு இடையே உயர்த்தி காப்பாற்றும்படி செய்கை காண்பித்தேன். உடனே என்னை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டார்கள். என்னுடைய தந்தை மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் உயிரோடு இல்லை என்ற செய்தி அப்போதுதான் எனக்கு தெரிந்தது. 

இதனை தொடர்ந்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட சேமிப்பு கிடங்கு உரிமையாளர் பாலா (வயது 35) என்பவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் உயிர் இழந்த 11 தொழிலாளர்களும் வேலை பார்த்த புதிதாக கட்டப்படும் சேமிப்பு கிடங்கின் மேஸ்திரிகள் தேவேந்திரனும்(50), முருகேசனும்(45) கைது செய்யப்பட்டனர்.

மூவரும் பொன்னேரி நீதிமன்ற காவலில் வைக்க நிதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

புதிதாக கட்டப்படும் சேமிப்பு கிடங்கின் உரிமையாளரும், பாலாவின் அண்ணனுமான மோகன் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. மோகன் செங்குன்றம் மொண்டிமாநகரைச் சேர்ந்தவர். அவரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

பாலா சென்னை முகப்பேரில் வசிக்கிறார். அவர் மீது செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு செங்குன்றம் போலீஸ் நிலையத்திலும், பொன்னேரி போலீஸ் நிலையத்திலும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.