சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதற்கு தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களே மூலகாரணம்!
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதற்கு தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களே மூலகாரணம்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்!
இந்தியத் தொழில்நுட்பக் கல்வியகத்தில்(ஐ.ஐ.டி.) செயல்பட்டு வந்த, மாணவர்களின் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தின் ஏற்பிசைவை அந்நிறுவனம் நீக்கியுள்ளதற்கு தில்லி அரசு காரணமில்லை என்று தமிழக பா.ச.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
அண்மையில் வெளி வந்திருக்கும் உண்மைகளின்படி, தமிழக பா.ச.க. தலைவர்கள்தான், அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தின் அனுமதியை இரத்துச் செய்யுமாறு தில்லி மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. தில்லி அரசுக்கு இதில் நேரடி பொறுப்பு இல்லை எனச் சொல்லும் பா.ச.க. தலைவர்கள், தாங்கள் தான் இதற்கு பொறுப்பு என நேரடியாகச் சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொள்வது ஏன்?
இரு நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ச.க. தலைவர்களில் ஒருவரான எச். இராசா, ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த அனுமதியை இரத்து செய்திருக்க வேண்டும் என்று கூறினார். இதன்மூலம், ஆறு மாதங்களுக்கு முன்பே அவர் இதற்காக முயன்றிருக்கிறார் - மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.
இதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பில்லை என்கிறார்கள். நரேந்திர மோடி அனைத்திந்தியக் கல்வித்துறையை ஆரியப் பார்ப்பனிய மயமாக்கிட எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்திற்கு (ICHR) ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுதர்சன ராவ்வை நரேந்திர மோடிதான் அமர்த்தினார். கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுத் (NCERT) தலைவராக, இந்துத்துவாவாதியான தீனநாத் பத்ராவை அமர்த்தியதும் அதே நரேந்திர மோடிதான். கல்வியைக் காவிமயமாக்குவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் நரேந்திர மோடியின் உடனடித் திட்டமாக உள்ளது. இந்தப் பின்னணியில்தான், சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கிய அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்திற்கான அனுமதி மறுப்பைப் பார்க்க வேண்டும்.
உயர் ஆராய்ச்சிக்கல்வி நிறுவனத்தில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தினர், அரசியல் விசயங்களைப் பேசினார்கள் எனக் கூறுகிறார்கள். இந்தியாவின் வர்ண சாதி ஆதிக்க முறைகள் பற்றி பேசுவதும், சமூக ஆராய்ச்சியின் ஒரு பகுதியே! பார்ப்பனிய எதிர்ப்பாளர்களாகவும் மனித சமத்துவத்திற்கான சிந்தனையாளர்களுமான பெரியார் - அம்பேத்கர் பெயரில் செயல்பட்டு வந்த, படிப்பு வட்டத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை செய்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நரேந்திர மோடி வெற்றி பெற்ற உடனேயே, தமிழ்நாட்டில் பார்ப்பனிய ஆதிக்கத்தை தங்குதடையின்றி கொண்டு வந்துவிடலாம் என்று பாரதிய சனதாக் கட்சி கனவு காண்பது, பலிக்காது. தமிழர்கள் காலங்காலமாக பார்ப்பனியத்தையும் வடமொழியையும் எதிர்த்த மரபுக்கு சொந்தக்காரர்கள்.
அ.இ.அ.தி.மு.க. அரசு, பெரியாரை அண்ணா தி.மு.க.வின் மூலவராகக் காட்டிக் கொண்டு, பெரியாருக்கு நேர்ந்திருக்கும் அவமரியாதையை, அவருடைய கருத்துப் பரவலுக்கு செய்யப்பட்டுள்ள தடையை கண்டிக்காவி்ட்டாலும், அந்தத் தடையை நீக்க வேண்டுமென ஒரு கோரிக்கைக் கூட வைக்காமல் இருப்பது அ.தி.மு.க.வினுடைய நிலைபாடு, இச்சிக்கலில் பா.ச.க.வின் நிலைப்பாட்டோடு ஒத்துப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், இந்தத் தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து, கைது செய்யும் அடக்குமுறையை அ.இ.அ.தி.மு.க. அரசு ஏவிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் கூட, இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து, கைது செய்ய ஆணையிட்டுள்ளது அ.இ.அ.தி.மு.க. அரசு.
ஐ.ஐ.டி.யில் மீண்டும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் செயல்பட அனுமதிக்கும்வரை, தமிழகத்தில் அனைத்து முற்போக்கு சக்திகளும் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
Leave a Comment