முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள்! பா.ச.க. ஆட்சியாளர்கள் சூதான வழிகளில் தமிழ்நாட்டு ஆட்சியை வழிநடத்த அ.இ.அ.தி.மு.க. தலைவர்கள் அனுமதிக்கக்கூடாது! பெ. மணியரசன் அறிக்கை!
முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள்! பா.ச.க. ஆட்சியாளர்கள் சூதான வழிகளில் தமிழ்நாட்டு ஆட்சியை வழிநடத்த அ.இ.அ.தி.மு.க. தலைவர்கள் அனுமதிக்கக்கூடாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி. செயலலிதா அவர்கள், விரைவில் உடல்நலம் பெற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நெருக்கடியான இந்த நேரத்தில், நடுவண் பா.ச.க. ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பதுபோல் ஆதிக்கம் செலுத்துவது வருத்தமளிக்கிறது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையுள்ள கட்சி, அ.இ.அ.தி.மு.க.! அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் செயலலிதா அவர்கள் உடல்நல பாதிப்பால் செயல்படாத நிலையில் உள்ளார். அந்த நெருக்கடியை ஆளுங்கட்சி தன்னுடைய சொந்த முடிவுகள் அடிப்படையில் சந்திக்க வேண்டும்.
அதற்கு மாறாக, தில்லியிலிருந்து முடிவுகள் எடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தை மருத்துவமனையிலேயே கூட்டி – மாற்று ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் மூலம் நடுவண் பா.ச.க. ஆட்சியாளர்கள் வழி நடத்துவது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. தமிழ்நாட்டின் மக்கள், தேர்தல் வழியில் கொடுத்திருக்கும் அரசியல் ஆணைக்கு முரணானது.
“இந்த நடுவண் அமைச்சர் வருகிறார்”, “அந்த நடுவண் அமைச்சர் வருகிறார்”, “அவர் வந்து முடிவெடுப்பார்” - என்றெல்லாம் இங்கு பேசப்படுவது, தமிழ்நாட்டு மக்களின் சட்டப்படியான சனநாயக உரிமையை அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் ஏதோ பெரும் கலவரம் நடப்பதைப்போல, இந்திய அரசின் “அந்தப் படைப்பிரிவு வந்துவிட்டது”, “இந்தப் பட்டாளம் வந்துவிட்டது” என்றெல்லாம் அறிவிப்பதும் அவ்வாறே படைப்பிரிவுகளைத் தமிழ்நாட்டில் அங்கங்கே நிறுத்துவதும் என்ன தேவைக்காக?
இவை பற்றியெல்லாம் அ.இ.அ.தி.மு.க.வின் அமைச்சர்களும் அடுத்த நிலைத் தலைவர்களும் - தமிழ்நாட்டு உரிமைகளை இழந்துவிடாமலும், தங்கள் கட்சி உரிமைகளை பறிகொடுத்து விடாமலும், அரசமைப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை பா.ச.க ஆட்சியாளர்கள் பறித்துக் கொள்ள அனுமதிக்காமலும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் செல்வாக்குமிக்கத் தலைவராக விளங்கும் முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் சூதான வழிகளில் தில்லி அரசியலைத் திணிக்க முயல்வது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் மட்டுமல்ல, நாகரிக சமூகம் அருவருக்கும் செயலுமாகும்!
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment