ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் சல்லிக்கட்டில் எனது நேரடி அனுபவம். பெ. மணியரசன்

இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம். சல்லிக்கட்டில் எனது நேரடி அனுபவம். தோழர் பெ. மணியரசன் தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
இரண்டு, மூன்று மாவட்டங்களில்தான் “சல்லிக்கட்டு” நடக்கிறது; ஒட்டுமொத்தத் தமிழர்களின் விளையாட்டல்ல; இதற்குப் போய் அலட்டிக் கொள்ளலாமா என்று எகத்தாளம் பேசுவோர் நம்மிடையே உண்டு. எப்போதுமே எம் இனத்தை வீழ்த்திட எல்லாச் சதி வேலையும் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இப்படி நினைப்பதுண்டு.
 
அவர்களின் முகத்தில் அறைந்ததுபோல் ஏறுதழுவல் உரிமைப் போராட்டம், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஐந்து கண்டங்களிலும் நடக்கிறது. ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டு ஏறுதழுவல் உரிமைக்காக இயன்ற வடிவங்களில் எல்லாம் போராடுகிறார்கள். அந்தந்த நாட்டு மக்களின் ஆதரவோடு போராடுகிறார்கள்.

அரபு நாடுகளில் அரேபியரும் பங்கேற்ற சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டப் படங்களை முகநூலில் பார்த்து வியந்தேன். மக்கள் ஆற்றல் அளப்பரியது; அவர்களின் போராட்ட வடிவங்கள் எல்லையற்றவை.

இன உணர்ச்சி என்பது உளவியலில் ஓர் இயல்பூக்கம் (Instinct) என்பதை நான் அவ்வப்போது சொல்லி வருகிறேன்.

இதனை மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக சிலர் நினைப்பார்கள்! அலங்காநல்லூரில் கொட்டும் பனியில் – 16.1.2017 காலையிலிருந்து, இரவு முழுவதும், மறுநாள் விடியும் வரையிலும் வெட்ட வெளியில் உட்கார்ந்து போராடும் ஆண்களையும் பெண்களையும் இயக்கியது எது?

இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து திரண்ட இளம் ஆண்களும் பெண்களும் ஆவர். அவர்களைத் தளைப்படுத்திய பின் அலங்காநல்லூர் பொது மக்கள், பல நூற்றுக்கணக்கில், போராட்டத்தை அதே இடத்தில் தொடர்ந்து கொண்டுள்ளார்கள். சல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும்வரை போராடுவோம் என்கிறார்கள். சென்னை கடற்கரையில், கோயம்புத்தூரில், தஞ்சாவூரில் என தமிழ்நாடு முழுவதும் மெழுகுதிரி கொளுத்திக் கொண்டு, இரவு நேரத்தில் கொட்டும் பனியிலும் மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி போராடுகின்றனர்.

இவர்களையெல்லாம் இயக்கும் ஆற்றல் எது? “எங்கள் மரபுரிமை” என்ற இன உணர்ச்சி! “என் பாட்டனும் பாட்டியும் பாதுகாத்து வந்த சிறந்த வீர விளையாட்டை, என் தலைமுறையில் இழக்க மாட்டேன்” என்ற உளவியல்! இந்த உளவியல்தான், வெட்ட வெளியில் – கொட்டும் பனியில் விடிய விடிய உந்திக் குரலெடுத்து முழக்கமிடும் இளம் பெண்களையும், ஆண்களையும் இயக்கிக் கொண்டுள்ளது. இந்த உளவியல்தான், மனித மனத்தில் இயற்கையாகவே உள்ள இயல்பூக்கம் என்கிறோம்.

ஏறு தழுவல் மீட்புப் போராட்டத்தில் எனது சிறிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது, இந்த “இன உளவியலை”ப் புரிய வைத்திட உதவும்!

தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் ஆச்சாம்பட்டி எனது ஊர். அங்கு பொங்கல் விழாவின் மூன்றாம் நாள் – அதாவது காணும் பொங்கல் அன்று ஏறுதழுவல் நிகழ்ச்சி வீடுதோறம் நடைபெறும். ஒவ்வொரு வீட்டிலும் தொழுவம் கட்டி, பசு மாடு, வண்டி மாடுகளைக் கூட்டமாகத் திறந்து விடுவர். அவற்றைப் பிடிப்பவர்கள் பிடிக்கலாம். பிடிக்காமலும் விடலாம். கொடுவைக் காளைகளை (பாய்ச்சல் காளைகளை) தனித்தனியே அதே தொழுவில் திறந்து விடுவார்கள்.

தமிழர் இசைக் கருவியான பறைகளின் எழுச்சி ஓசை கிடுகிடுக்கச் செய்யும். வாசலில் மாடுபிடி வீரர்கள் சூழ்ந்து நின்று காளையை மடக்கிப் பிடிப்பார்கள். அவர்களை வீழ்த்திவிட்டுச் சில காளைகள் ஓடும். சில காளைகள் பிடிபடும்! இரண்டிற்குமே அங்கு கூடியிருக்கும் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள், ஆண்கள் அனைவரும் கொண்டாட்டக் கூச்சல் எழுப்புவர். விசில் ஒலி விண்ணைப் பிளக்கும்! ஒவ்வொரு தொழு முன்பும் ஊரே கூடியிருக்கும்!

பொங்கல் விழாவின் உச்சமே இந்த மாட்டு வேடிக்கைதான் – ஏறுதழுவல்தான்! ஆச்சாம்பட்டியில் முக்கியப் பிரமுகர்களிடையே சிறு சிறு பிணக்குகள் காரணமாகக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்த மாடு திறப்பு நடைபெறவில்லை. இந்த ஆண்டோ உச்ச நீதிமன்றத் தடையைத் தமிழ்நாடு அரசு முரட்டுத்தனமாக நிறைவேற்றி வருகிறது.

இந்த ஆண்டு எப்படியும் பொங்கல் விழா மாடு திறப்பும் ஏறு தழுவலும் நடத்த வேண்டுமென்ற உறுதியுடன், ஆச்சாம்பட்டி சென்று அனைவருடனும் பேசினேன். ஊர்க்கூட்டம் போட்டோம். ஒருமித்து முடிவு செய்தோம். மாடு திறப்பும் ஏறுதழுவலும் மிகச்சிறப்பாக நடந்தது. சற்றொப்ப இரு நூறு வீடுகளில் தொழுவம் கட்டி, மாடுகளும் பாய்ச்சல் காளைகளும் திறக்கப்பட்டன. பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு நடந்ததால் ஊர் மக்களிடையே மிக எழுச்சி ஏற்பட்டது. மிகுந்த மகிழ்ச்சி காணப்பட்டது!

காவல்துறையினர் ஊருக்குள் வந்தார்கள். கடைசி வரை இருந்தார்கள். ஊர் மக்களின் ஒற்றுமையையும் எழுச்சியையும் கண்ட பின்னர், அவர்கள் தடை சொல்லவில்லை. சல்லிக்கட்டு முழுமையாக நடந்து முடிந்தது.

பதினைந்து ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சல்லிகட்டு, அரசுத் தடை செய்திருக்கும் காலத்தில் எப்படி அரங்கேறியது? நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த வீர விளையாட்டை, மாடு திறப்பை நம் காலத்தில் கைவிட்டுவிடக்கூடாது என்ற உள்ளுணர்ச்சி எல்லோரிடமும் இருந்தது. பெங்களூர், சென்னை போன்ற தொலைதூர நகரங்களில் பணியாற்றும் கல்வி கற்ற இளைஞர்கள் பொங்கலுக்கு ஊருக்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாடு திறப்பில் உற்சாகமாக ஈடுபட்டார்கள்.

அகவை முதிர்ந்த மூதாட்டிகள் மாடு திறப்பில் முழு வேகம் காட்டினார்கள். அவர்கள் ஏழு தழுவினார்களா அல்லது மாடு திறந்து விட்டார்களா? ஏதுமில்லை. எட்டி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள் சிலர். அம்மூதாட்டிகளில் பலர் வீட்டிலிருந்தவாறே விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள்.

தமிழினப் பெருமித உணர்ச்சி, இயல்பூக்கமாக எல்லாத் தமிழர் மனத்திலும் இருக்கிறது. அது “இன உணர்ச்சி” – “இயல்பூக்கம்” என்றெல்லாம் அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் அதுதான் அனைவரிடமும் வேலை செய்கிறது. இதை நேராக உணர்ந்தேன்.

எங்கள் ஆச்சாம்பட்டியிலும் பல சாதிகள் உண்டு; பல கட்சிகள் உண்டு. இவற்றிற்கிடையே உரசல்களும் உண்டு. இவற்றை அமுக்கி மேலெழக்கூடிய ஆற்றல் இன உணர்ச்சிக்கு இருக்கிறது!

முகநூல் அழைப்பை ஏற்று சென்னைக் கடற்கரையில் 8.1.2017 அன்று தமிழ்நாடு முழுவதுமிருந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர், கற்றறிந்த இளைஞர்கள் ஆகியோரை இயக்கியதும் அந்த இயல்பூக்க இன உணர்ச்சிதான்!

ஐந்து கண்டங்களில் வாழும் தமிழர்களை சல்லிக்கட்டுக்காக இயக்குவதும், அலங்காநல்லூரில் கொட்டும் பனியில் விடியவிடிய விழித்திருந்து போராடிய வெளியூர் இளம் ஆண்களையும் பெண்களையும் இயக்கியதும் இன உணர்ச்சிதான்!

இன உணர்ச்சி பிற்போக்கானதல்ல! சாதியாய், மதமாய், கட்சியாய்ப் பிரிந்து கிடக்கும் தமிழர்களை, மோதிக் கொண்டிருக்கும் தமிழர்களை, பொது இலட்சியத்திற்காக ஒருங்கிணைக்கும் ஆற்றல் இன உணர்ச்சிக்கு உண்டு!

சல்லிக்கட்டுத் தடையை நீக்கிட நடத்தும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சல்லிக்கட்டு விளையாட்டு உண்டு. சல்லிக்கட்டு – சாதி ஒடுக்குமுறை கொண்டது என்று சிலர் கூறினார்கள். இப்பொழுது நடக்கும் போராட்டத்தில், எல்லா சாதி இளைஞர்களும் மக்களும் ஒன்று திரண்டு கைகோத்து நிற்கிறார்கள்.

பன்னாட்டு முதலாளிகளின் வேட்டையைத் தடுத்து நிறுத்தித் தற்காப்பு தொழிற் கொள்கையை வகுக்கும் ஆற்றல், தேசிய இன உணர்ச்சிக்கே இருக்கிறது!

தமிழர் தாயக உரிமைகளைப் பாதுகாக்கும் உந்து விசையாக இன உணர்ச்சியே இருக்கிறது. அந்த இன உணர்ச்சி தமிழர்களிடம் மட்டுமல்ல, மற்ற இனங்களிலும் இயல்பூக்கமாகவே இருக்கிறது.

இன உணர்ச்சி தேவை; ஆதிக்க இனவெறி கூடாது!
#WeDoJallikattu
#SaveJallikattu
#TamilsBoycottGovtOfIndia

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.