“மீன் சந்தையைக் கொளுத்திய காவல்துறையினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” நடுக்குப்பம் மீனவர் சந்தையைப் பார்வையிட்ட பெ. மணியரசன் கோரிக்கை!
“மீன் சந்தையைக் கொளுத்திய காவல்துறையினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” நடுக்குப்பம் மீனவர் சந்தையைப் பார்வையிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
கடந்த 23.01.2017 அன்று, சென்னை கடற்கரையில் நடைபெற்று வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தைக் கலைக்க, வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஈடுபட்ட தமிழ்நாடு காவல்துறையினர், நடுக்குப்பம் மீனவர் சந்தையை எபாஸ்பரஸ் தூவிக் கொளுததிச் சாம்பலாக்கியும், தானி – மகிழுந்து உள்ளிட்ட ஊர்திகளை எரித்தும், அப்பகுதி மீனவர்களைக் கொடுமையாகத் தாக்கியும் வெறியாட்டம் போட்டுள்ளனர்.
இன்று (27.01.2017) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், காவல்துறையினரால் எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவச்சந்தையை நேரில் பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். காவல்துறையினரின் வெறியாட்டத்தை மக்கள் எடுத்துக் கூறினர்.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழர்களின் ஏறுதழுவல் உரிமைக்காக, சென்னை கடற்கரையில் அறவழியில் போராடி வந்த மாணவர்களையும் இளைஞர்களையும் கடந்த 23.01.2017 அன்று, தமிழ்நாடு காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர்.
தடியடியில் பதறி ஓடிவந்த மாணவர்களும் மாணவியரும், தங்கள் வீடுகளில் இளைப்பாற இடம் கொடுத்த ஒரே காரணத்திற்காக, நடுக்குப்பம் பகுதி மீனவர்களையும், இப்பகுதி மக்களையும் காவல்துறையினர் மிகக்கொடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள நடுக்குப்பம் மீனவர் சந்தையை, காவல்துறையினரே பாஸ்பரஸ் பொடி தூவி தீக்கிரையாக்கியுள்ளனர். தானிக்களை காவல்துறையினரே கொளுத்தியது குறித்து காணொளிக் காட்சிகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. கார்களையும் கொளுத்தியுள்ளனர். எரிந்து கிடக்கின்றன அவ்வண்டிகள்!
இவையெல்லாம் வெளிவந்தும்கூட, காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினரின் இந்த வன்முறைச் செயல்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்கள் உடனடியாகக் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன் சந்தையை எரித்ததால், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 50,000 நட்ட ஈடு வழங்க வேண்டும்.
அறவழிப் போராட்டம் நடத்த கடற்கரையையும் மீனவர் குப்பங்களையும் வன்முறைக் களங்களாக மாற்றிய காவல்துறையினரின் அத்துமீறல் குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
அத்துடன் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ள இந்த மீன் சந்தையை, மீண்டும் கட்டியெழுப்பிட நாங்கள் துணை நிற்போம் என அம்மக்களுக்கு நம்பிக்கை அளித்தோம்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் வி. கோவேந்தன், பிரகாசுபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
முகநூல்: fb.com/tamizhdesiyam
Leave a Comment