ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"திணறும் மோடி ஆட்சி?" தோழர் கி. வெங்கட்ராமன், கட்டுரை

"திணறும் மோடி ஆட்சி?" தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
பாரதிய சனதாவின் நரேந்திர மோடி அரசு மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறை வேற்றாமல், பொருளியல் முனையிலும், அரசியல் முனையிலும், வெளியுறவுத் துறையிலும் முற்றிலும் படுதோல்வி அடைந்து நிற்கிறது!

‘’நல்ல காலம் வருகிறது!” (அச்சே தின்) என்று திசை எட்டிலும் விளம்பரம் செய்து, அரியணை ஏறிய மோடியின் ஆட்சியில், அனைத்துப் பிரிவு மக்களும் கெட்ட காலத்தையே சந்திக்கிறார்கள். எங்கு நோக்கினும் மக்கள் கொந்தளிப்பும், அமைதியற்ற சூழலும் அதிகரித்து வருகின்றன.

காங்கிரசு ஆட்சியில் சரிந்து கொண்டிருந்த இந்தியப் பொருளியலைத் தூக்கி நிறுத்த வந்த ஆற்றல் மிக்கத் தலைவராக ஊடகங்களால் ஊதிப்பெருக்க வைத்த மோடி, மிகப்பெரிய முட்டுச்சந்தில் இந்தியப் பொருளியலை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

தொழில் துறை உற்பத்தி மிகப்பெரும் சரிவில் உள்ளது. கடந்த நிதியாண்டில் (2016 - 2017), 7.9 விழுக்காடாக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி, இந்த நிதியாண்டில் (2017 - 2018) 4.5 விழுக்காடாக விழுந்துள்ளது. வேளாண் உற்பத்தி 4.5 விழுக்காடு உயர்விலிருந்து, 2.1 விழுக்காடாக குறைந்துள்ளது.

மோடி அரசு அறிவித்த செல்லாத நோட்டு அறிவிப்பு, அதைத் தொடர்ந்த ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டும் இணைந்து வேளாண்மையையும், சிறு, நடுத்தரத் தொழில்களையும், சில்லறை வணிகத்தையும் புரட்டிப் போட்டு விட்டது! மிகப்பெரும் எண்ணிக்கையில் வேலை இழந்து தொழிலாளர்கள் வீதியில் வீசப்பட்டிருக்கிறார்கள்.

மறுபுறம், பணவீக்கம் அதிகரித்து அனைத்துப் பொருள்களின் விலைகளும் ஏறுமுகமாக இருக்கின்றன. இந்த நெருக்கடியை மக்கள் மீது சுமத்தி பிழிந்தெடுக்கிறது மோடி அரசு!

உழவர்கள் விளைவித்த வேளாண் விளை பொருட்களுக்கு, குறைந்த அளவு ஆதார விலையை உயர்த்த மறுத்தும், கடன் தள்ளுபடி செய்ய மறுத்தும், முதலீட்டுக்காக குறைந்த வட்டியில் கடன் கொடுக்க மறுத்தும் உழவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளியது. ஆனால், மறுபுறம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது!

உலக நாடுகள் அனைத்திற்கும் பறந்து சென்று, அதானி - அம்பானி - டாடா போன்ற பெருமுதலாளிகளுக்குப் புதிய சந்தைகளைத் தேடித்தரும் முகவராக செயல்படுவதை நரேந்திர மோடி வாடிக்கையாகவே கொண்டுள்ளார்.

பெருமுதலாளிகளுக்கு சலுகை வட்டியில் கொடுத்த கடன்களைத் திரும்ப வசூலிக்க முடியாமல் அரசுத் துறை வங்கிகள் ஓட்டாண்டி நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் காங்கிரசு ஆட்சியில், உருவாக்கப்பட்ட சுமை என்று புறந்தள்ளிப் பேசும் மோடியின் ஆட்சியில்தான் ஏறத்தாழ 2 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் “இனிமேல் வசூலிக்க முடியாத கடன்கள்” என வகைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டன.

மக்களின் சேமிப்புப் பணத்தைப் பெருமுதலாளிகளுக்கு இவ்வாறு வாரி இறைத்ததனால், நரேந்திர மோடிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கையூட்டுத் தொகை கிடைத்தது. இனி, இவ்வாறு பெரு முதலாளிகள் கட்சிகளுக்கு வழங்குவதை சட்டப்பூர்வமானதாக மாற்ற, எந்தக் கூச்சமுமின்றி நிறுவனச்சட்டத்தில் (கம்பெனி சட்டத்தில்) திருத்தங்கள் செய்யப்பட்டன. “நன்கொடை” என்ற பெயரால், கட்சிகளுக்கு முதலாளிகள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வரம்பின்றி கொடுக்கலாம்! வாங்கிய கட்சிகளின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்ற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. பெருமுதலாளிகளின் கருப்புப் பணத்தைப் பெருக்கவும், அதில் கட்சிகள் பங்கு பெறவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!

எவ்வளவு சலுகைகள் வழங்கிய போதிலும், புதிய தொழில்கள் தொடங்க, புதிய முதலீடுகள் வந்த பாடில்லை!

வந்த முதலீடுகளிலும் ஏறத்தாழ 61 விழுக்காடு முதலீடு ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ளும் நடவடிக்கையிலேயே ஈடுபடுத்தப்பட்டன. அதாவது, புதிதாக தொழில்கள் தொடங்கப்படவில்லை! வெறும் நிதி மூலதனம் கைமாறி இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே பொருள்!

மக்களின் வாங்கும் சக்தி விரிவடைவதற்கு மாறாக, நிலைகுலைந்திருப்பதனால் சந்தை விரிவாக்கத்திற்கும் உள் நாட்டில் வாய்ப்பில்லை.

இவை அனைத்தும் சேர்ந்து, இந்திய அரசின் வரி வருமானத்திற்கும் அன்றாட செலவுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்து நிதிப்பற்றாக்குறை உயர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்த நிதியாண்டிற்கு எதிர்பார்க்கப்பட்ட மொத்த நிதிப் பற்றாக்குறையில் ஏப்ரல் - அக்டோபர் 2017க்கிடையில் உள்ள ஏழு மாத இடைவெளியிலேயே 96 விழுக்காடு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என நிதி அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

அரசின் வரவு - செலவு (பட்ஜெட்) பற்றாக்குறை மிகப்பெருமளவிற்கு உயர்ந்து, அதை ஈடு செய்வதற்கு அரசுத் துறை நிறுவனப் பங்குகளை வந்த விலைக்கு விற்று நிதித் திரட்டும் நெருக்கடியில் மோடி அரசு முட்டிக்கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம், பல்வேறு சிறு தொழில்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், வீழ்வதன் எதிர்வினையாக மக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் ஜி.எஸ்.டி. வரி வீதங்களை குறைக்கும் நிலை மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது!

இந்த நிதி நெருக்கடியை, மக்கள் மீதும் மாநிலங்கள் மீதும் மோடி அரசு திருப்பி விடுகிறது!

பா.ச.க.வின் அடிமை ஆட்சியாளர்களான அ.தி.மு.க.வினரே, தமிழ்நாட்டிற்கு அளித்து வரும் நிதிப்பங்கீட்டை இந்திய அரசு குறைத்து வருகின்றது எனப் புலம்பத் தொடங்கிவிட்டனர். கடந்த 2017 சூலை முதல் அக்டோபர் வரை ஜி.எஸ்.டி. வரியின் மூலமாக தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு 24,000 கோடி ரூபாயை அள்ளிச் சென்றுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு அளித்ததோ 632 கோடி ரூபாய்தான்!

நிதி ஆணையத்தின் திருகல்மருகலான கணக்கீட்டு முறையால் வரி வருவாய்ப் பங்கீட்டில் ஆண்டுதோறும் 6,000 கோடி ரூபாயை தமிழ்நாடு இழந்து வருகிறது.

பொருளியல் முனையில் இதுதான் நிலை என்றால், அரசியல் முனையில் எந்தச் சிக்கலையும் தீர்க்க முடியாமல் மோடி அரசு குழம்பி நிற்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக பா.ச.க. அரசு “தேசபக்த” கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தாலும், காசுமீர் எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் சாவதும், பொது மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதும் முன் எப்போதையும்விட அதிகரித்து வருகிறது. காசுமீர் மக்கள் இயக்கங்களோடு, பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுக்கு முயற்சி செய்வதாக சொல்லிக் கொண்டாலும், கடுகளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை!

ஊடகத் தணிக்கைகளைத் தாண்டி, சமூக வலைத் தளங்களுக்கு தடை விதித்த போதிலும், இளைய காசுமீரிகள் வீதியில் இறங்கி கற்கள் வீசுவதும், பெண்களும் முதியோரும் பெருந்திரள் பேரணி நடத்துவதும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க வல்லரசின் ஓடும் பிள்ளையாக மாறிக் கொண்டிருப்பதால், இந்தியா தெற்காசிய மண்டலத்தில் தனிமைப்படுவதும், புதிய நண்பர்களைப் பெற முடியாமல் தவிப்பதும், மோடி அரசின் திசை தெரியாத அரச உத்தியை எடுத்துக் காட்டுகின்றன.

பாகித்தானுக்கு எதிராக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் கூச்சல் எழுப்புவதை நம்பி அமெரிக்காவின் பக்கம் இந்தியா சாயும்போது, சீனா - இரசியா - பாக்கித்தான் என்ற புதிய எதிரி வலைப் பின்னலை தனக்குத் தானே இந்திய அரசு உண்டாக்கிக் கொள்கிறது.

இசுரேலின் நெதன்யாகுவை மோடி ஆரத் தழுவும் போது, ஈரானையும், அதைச் சார்ந்துள்ள சிரியா நாடுகளையும் பகையாக்கிக் கொள்வதோடு, சவுதியையும் உறுதியான கூட்டாளியாகப் பெற முடியாமல் போகிறது. இவ்வாறு எல்லா முனையிலும், மோடி திக்குத்தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் 2018 பிப்ரவரி 16-28 இதழில் வெளியான கட்டுரை இது).

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.