வள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா.
வள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா.
தொன்றுதொட்டு வானியல் அறிவியலில் முன்னேறி இருந்த இனம் தமிழினம்! வள்ளலாரின் வானியல் கருத்துகள் வியக்க வைக்கின்றன.
இயற்கையின் இயங்கியலை தமிழர்கள் அறிந்தது போல வேறெந்த இனமும் இவ்வளவு நுட்பமாக அறிந்திருக்குமா என்பது ஆய்வுக்குரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வானியல் அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
“செஞ்ஞாயிற்றுச்செலவும்
அஞ்ஞாயிற்றுபரிப்பும்
பரிப்புச்சூழ்ந்தமண்டிலமும்
வளி திரிதருதிசையும்,
வறிதுநிலைஇய காயமும், என்றிவை...”
என்று புறநானூற்றில் உறையூர் சாத்தனார் பாடியுள்ளார்.
மன்னன் நலங்கிள்ளி இயல்பைக் குறிப்பதற்கான இப்பாடலில் வானியல் செய்தியையும் புலவர் எடுத்துரைக்கிறார்.
இதன் பொருள் கதிரவனின் இயக்கப்பாதையும் அதன் ஈர்ப்பும் காற்றின் விசை திசையும் எவ்விதத் தாங்குதலும் இல்லாமல் தொங்கும் ஆகாயத்தையும் நேரில் சென்று அளந்து அறிந்த வந்தது போல் கணிக்கும் வானியலாளர்கள் என்று குறிப்பிடுவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் வானியல் அறிவின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது.
“வளிதிரிதருதிசை” என்றால் காற்று இல்லாத அண்டப்பெருவெளி என்று பொருள். காற்று இல்லாத ஒரு வெளி இருப்பதை அன்றே கூறுகின்றனர்.
பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்று மேற்கத்திய அறிவியல் உலகம் 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் எடுத்துக் கூறியது. ஓர் ஆற்றல் இன்னொரு ஆற்றலாக வடிவ மாற்றம் பெறுமே தவிர அழியாது. எடுத்துக்காட்டாக, வெப்ப ஆற்றல் மின்சார ஆற்றலாக மாறலாம். மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறலாம். ஆனால், இவற்றின் கூட்டுத்தொகை மாறாது. இதுவே ஆற்றலின் அழியா விதி.
இதனை ‘இல்லது தோன்றாது, உள்ளது மறையாது” என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர் நம் தமிழர்கள்.
உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில் தான். ஆனால் நாம் அதற்கு முன்பே கண்டறிந்து விட்டோம். அவற்றிற்கான குறிப்புகள் தமிழ் இலக்கியங்கள் எங்கிலும் காண முடியும்.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”
என்ற திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில் இவ்வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படையில் உலகம் உருண்டை, வான் பொருட்கள் யாவும் உருண்டை வடிவில் உள்ளன, அண்டம் விரிவடைகிறது என்ற அறிவியல் செய்திகளைக் கூறுகிறது.
இவ்வாறான வானியல் குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைந்திருந்தாலும் அவற்றை ஒருங்கிணைத்து தனக்கான செய்திகளை உள்ளடக்கி, தமிழர் வானியல் அறிவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் வள்ளலார்.
வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவல் பகுதி என்பது உலகத் தோற்றம், உயிர்த் தோற்றம் மற்றும் இயல்பு, ஐம்பெரும் ஆற்றல் தோற்றம். அண்டவியல், இயற்கை அமைப்பு, அதன் தன்மை மற்றும் செயல்பாடுகள், இப்படி பிரபஞ்சம் தொடக்கம் முதல் முடிவு வரை உள்ள அனைத்தையும் குறிப்பிட்டப்பட்டுள்ள ஒரு அறிவியல் அடிப்படை நூல் ஆகும்.
இவற்றில் தான் வானியல் குறிப்புகள் குவிந்து கிடக்கின்றன. ‘உலகம் எப்போது தோன்றியது?’ என்ற கேள்விக்கு பெருவெடிப்புக் கோட்பாட்டின் வாயிலாக அறிவியல் பதில் தருகிறது. பேரண்ட மூலத்தில் ஏற்பட்ட பெரு அழுத்தம் காரணமாக ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்தது, அவற்றிலிருந்து இப்பிரபஞ்சம் விரிந்தது என்பதாகும்.
ஒன்றிலிருந்தே இந்த பிரபஞ்சம் உருவானது என்ற அறிவியல் உண்மையை நம் இலக்கியங்கள் கூறியிருந்தாலும் அவற்றை வள்ளலாரும் குறிப்பிடுகிறார்.
வெளியிடை ஒன்றே விரித்துஅதில் பற்பல
அளி உற வகுத்த அருட்பெருஞ்சோதி (253)
வெளி என்பது ஒன்றுதான், அவை பலவாக விரிந்தது என்ற உண்மையை இப்பாடல் வாயிலாக கூறுகிறார்.
மேலும்,
வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைந்த அருட்பெருஞ்சோதி (254)
இவ்வாறான வெளி பல வெளியாக பிரிந்து அதில் அண்டங்கள், பேரண்டங்கள், கோள்கள், விண்மீன்கள், ஐம்பெரும் ஆற்றல்கள், இன்னும் வான்பொருட்கள் தோன்றி விரிந்தன என்கிறார்.
வெளியிடை உயிர் இயல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ்சோதி (255)
வெளியில் உயிர்களைப் படைத்தும் அவை வாழ்வதற்கான இயல்புகளையும் இவ்வுயிர்களுக்கான பேராற்றலும் சில அதிசய ஆற்றலையும் (சித்தர்கள், ஞானிகள் உணரக்கூடிய சித்தியல் ஆற்றல்) இவ்வெளியில் இருக்கிறது என்கிறார் வள்ளலார்.
அண்டமும் அதன் மேல் அண்டமும் அவற்றுள்
பண்டமும் காட்டிய பரம்பர மணியே (646)
அண்டங்களையும் அவற்றின் மேல் அடுக்காக உள்ள பிற அண்டங்களையும் அவற்றில் உள்ள கோள்கள், அசையும் அசையா பொருட்கள் உள்ளிட்ட வான் பொருட்கள் இருக்கின்றன என்கிறார் வள்ளலார்.
”இவ்வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ்சோதி” (290)
என்ற வரியின் மூலம் இப்பரந்த வெளிகளில் ஒவ்வொன்றிலும் பற்பல அண்டங்களும் உள்ளடக்கி இருக்கிறது என்ற செய்தியை குறிப்பிடுகிறார்.
வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்சோதி (247)
வெளியின் இரு ஆற்றலைப் பற்றி கூறுகிறார். ஒன்று வெளி விரிந்துக்கொண்டு போகும் விரிவாற்றலையும் இரண்டாவதாக மீண்டும் தன்னில் இழுத்து அணைத்துக் கொள்ளும் அணைவியல் ஆற்றலையும் குறிப்பிடுகிறார்.
வள்ளலார் குறிப்பிடும் இந்த அணைவியல் என்ற ஆற்றல் தான் இன்றைய நவீன பிரபஞ்சத்தின் உச்சபட்ச அறிவாக நவீன அறிவியலாளர் கருதுகிறார்கள். அவர்களின் ஆய்வுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் வள்ளலாரின் வானியல் சிந்தனை எவ்வளவு வியப்பானது என்பது தெரியும்.
1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட மூலத்தில் பெரும் அழுத்தத்தினால் ஏற்பட்ட பெருவெடிப்பில் விரியத் தொடங்கிய இப்பேரண்டத்தின் விரிவு அதன் பிறகும் விரிந்து கொண்டே இருக்கிறது என்ற உண்மையை 1920 ஆம் ஆண்டு பெல்ஜிய வானியல் அறிஞர் ஜார்ஜிஸ் லெமெய்டர் (Georges Lamaitre) கண்டறிந்து கூறினார். இன்னொரு வியப்பு என்ன வென்றால் இவ்விரிவு வேகம் இன்னமும் குறையவில்லை என்பதுதான். மேலும் இதே கால கட்டத்தில் அமெரிக்க வானியலாளர் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருக்கும் விண்மீன் கூட்டங்கள் மிக விரைவாக விலகிச் சென்றன என்றார்.
இப்படி விரிந்து கொண்டே செல்லும் போது ஒரு சமயத்தில் தன் விரிவை நிறுத்திக்கொண்டால் அதன் எதிர்வினையாக உள்ளிழுக்கும் ஆற்றலை அவை பெறக் கூடும். அவ்வாறான உள்ளிழுக்கும் பட்சத்தில் பரந்த விரிந்த இப்பேரண்டம் தான் தொடங்கிய புள்ளியிலே சுருங்கி அடங்கிவிடும். அதனை “பெருஞ் சுருக்கம்” (Big Crunch) என்று அழைக் கிறார்கள். பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் இதனை ஒற்றைத்திரட்சி (Singularity) என்பார்.
இச்சுருக்க விதி கருந்துளைக் (Black hole) கோட்பாடுகளுடன் பொருத்தி நிறுவப்படுகிறது. கருந்துளை என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பல பொருட்களின் தொகுப்பாகும். இத்துகள் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னுள் ஈர்த்து அடக்கிக் கொள்ளும் பேராற்றலைப் பெற்றது.
இவற்றிலிருந்து பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத் திரங்கள், கோள்கள், பால்வெளி மண்டலம் போல உள்ள எண்ணற்ற மண்டலங்கள் உள்ளிட்ட எதுவும் தப்பிக்க இயலாது; ஏன் ஒளியும்கூட தப்பிக்க இயலாது. மேலும் ஈர்க்கப்படும் ஒளி திரும்ப வர முடியாதபடி இந்த ஈர்ப்பு விசை தன்னுள் அடக்கிக் கொள்ளும், பிரபஞ்சம் அழிவு என்ற ஒன்றை சந்தித்தால் எல்லாமும் ஒரு புள்ளிக்குள் ஈர்க்கப்பட்டுவிடும் என்று அறிவியலாளர்கள் கூறு கிறார்கள்.
இவ்வாறான பிரபஞ்சத்தின் உச்சபட்ச அறிவியல் கோட்பாடான பெருஞ்சுருக்கம் மற்றும் கருந்துளைக் கோட்பாடுகளை மிக எளிமையாக அணைவியல் என்று போகிற போக்கில் குறிப்பிடும் வள்ளலாரின் பிரபஞ்ச அறிவு நம்மை வியக்கக் வைக்கிறது.
மேற்கண்ட அண்டவியல் விரிவியலில் விரிந்து போகிறது என்பதை நாம் அறிந்தோம். ஆனால் அது எப்படி, எந்த முறையில் விரிகிறது என்பதை இன்னமும் யாரும் விளக்கவில்லை. இவற்றை வள்ளலார் விரிவாக விளக்குகிறார். ஒரு சூத்திரம் போல் கூறுகிறார். அதாவது புதிய பொருள்கள் எப்படி பிறக்கிறது என்பதை விளக்குகிறார்.
ஒரு பொருளில் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்ற நான்கு நிலைகள் இருப்பதைக் குறிப்பிடும் வள்ளலார் அவை ஒவ்வொன்றிலும் உட்கூறுகளாக அடி, முடி, கடை என்ற நிலை இருப்பதாக விளக்குகிறார். இந்த நிலைகள் ஒன்றுக்கொன்று இணைதல் மூலம் புதிய பொருள் உருவாகிறது என்கிறார்.
எல்லா விதமான கணக்குகளுக்கும் 0 (சுழியம்) முதல் 9 வரை உள்ள எண்கள் அடிப்படை. இவற்றை கொண்டே பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்துக் கோடி, பில்லியன், மில்லியன், டிரில்லியன் உள்ளிட்ட பெரும் மதிப்புகளும் எண்ணிக்கையும் உருவாகின்றன. அதாவது சிறிய எண்களே பெரும் மதிப்பு எண்களுக்கு அடிப்படை என்பதாகும். கணித மேதைகள் பலர் உலக விரிவு - கணித அடிப்படையிலேயே விரிகிறது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் போலத் தான் உலகில் எல்லா விதமான பொருள்களும் மேற்கண்ட வள்ளலார் குறிப்பிடும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் அதில் உட்கூறுகளான அடி, முடி, கடை போன்றவற்றின் சேர்க்கையில் தான் தோன்றுகிறது என்பதையும் இவையே பொருள் பிறப்பதற்கான காரணம் என்கிறார் வள்ளலார்.
இவற்றை வேறு பாடலில் இச்சூத்திரத்தை பொருத்தி பாடியுள்ளார்.
ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்சோதி (141)
ஆர் என்றால் ஒளி என்பதாகும். ஆரியல் என்றால் ஒளியியல் என்று பொருள். அதாவது ஒளியில் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்ற நான்கு நிலை இருப்பதைக் குறிப்பிடுகிறார்.
மேலும்,
அண்டப்புறப்புற அமுதம் பொழிந்து உயிர்
அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ்சோதி (374)
இப்பாடலில் அண்டத்தின் புறப்புற பகுதி மழை என்று குறிப்பிடுவதை கவனிக்கலாம். அமுதம் என்றால் மழையைக் குறிக்கும்.
இவ்விரிவுக் கோட்பாடு அண்டவியலுக்கும் பிண்ட வியலுக்கும் உள்ளிட்ட எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்.
இவ்விரிவியல் கோட்பாடுகளை இவ்வளவு துல்லிய மாக வள்ளலாரை தவிர வேறு யாரும் இதுவரையிலும் சொல்லவில்லை. வள்ளலாரின் வெளிவிரிவியல் சூத்திரம் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது. இவற்றை நாம் இன்னமும் ஆராயவில்லை, இனிமேலாவது அவற்றை ஆராய்ந்து உலகத்திற்கு அறிய வைக்க வேண்டியது நம் கடமையாகும்.
ஐம்பெரும் ஆற்றல் தோற்றத்தையும் வள்ளலார் போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த அருட்பெருஞ்சோதி (273)
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெருஞ்சோதி (274)
வான்வெளியிலிருந்து காற்றும் காற்றிலிருந்து நெருப்பும் தோன்றின என்கிறார் வள்ளலார். தீயிலிருந்து நீரும் நீரினால் நிலமும் தோன்றியதை குறிப்பிடுகிறார்.
நீர்மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்
ஆர் உற வகுத்த அருட்பெருஞ்சோதி (275)
நீரின் மேல் நெருப்பும் அந்த நெருப்பின் மேல் உயிர்ப்பும் இருக்கிறது என்கிறார்.
நீரின் வெப்பநிலை குறையும்போது உறைபனியாகவும் சராசரி வெப்பநிலையில் இயல்பான நீராகவும் மேலும் அதீத வெப்ப நிலையில் ஆவியாகவும் வெப்ப நிலையைப் பொருத்து மாறுகிறது.
மேலும் நெருப்பில் உயிர்ப்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். நெருப்பிற்கு இரு இயல்புகள் உண்டு ஒன்று வெளிச்சம், இரண்டாவது வெப்பம். வெளிச்சத்தைப் பார்க்கலாம், வெப்பத்தைக் காண இயலாது, ஆனால் உணர முடியும் இவ்வாறு காண இயலாத வெப்ப ஆற்றலே உயிர்களை இயக்குகிறது. வெப்பம் இல்லாத பொருட்கள் இல்லை, அதுவும் உயிர் உள்ள பொருட்கள் அனைத்திலும் வெப்பம் இருக்கும், வெப்பம் இல்லாமல் இருந்தால் அவை உயிருடன் இல்லை என்ற பொருள்.
வெப்பம் இல்லாத உடல் பிணமாகும். மனித விந்தில் வெப்ப நிலை குறைந்தால் அவ்விந்து உயிராற்றல் இழந்து குழந்தையின்மை ஏற்படலாம் என மருத்துவ அறிவியலாளர்கள் கூறுவது குறிப்பிட்டதக்கது. இவற்றையே நெருப்பின் மேல் உயிர்ப்பும் என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்.
இப்பிரபஞ்ச வெளியில் பரந்து விரிந்திருக்கிற அண்டங்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு விரிந்திருக்கிற வெளிகளையும் அவற்றின் அமைப்பையும் வள்ளலார் விவரிக்கிறார்.
வெளிவகை விரிவுப் பகுதியில் பலவகை வெளிகளை வகைப்படுத்துகிறார். அவை பூதவெளி, உயிர்வெளி, பகுதி வெளி, கலைவெளி, சுத்தநல்வெளி, பரவெளி, பரம்பர வெளி, பராபர வெளி, பெருவெளி, பெருஞ்சுக வெளி போன்ற வெளிகள் இருப்பதாக விளக்கிச் செல்கிறார்.
இவ்வாறான வெளிகளில் ஒலி நிறைந்திருக்கிறது என்ற அறிவியல் செய்தியை,
வெளியினில் ஒலி நிறைவியன் நிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருட்பெருஞ்சோதி (249)
வெளி எங்கிலும் ஒலி பரவி இருக்கிறது, அவற்றோடும் விரிவடைகிறது என்று கூறுகிறார்.
மேலும் கணக்கிட முடியாத இப்பிரபஞ்சத்தை ஆராய்வதற்கும் காண்பதற்கும் வழியை அறிவியல் முறையில் வள்ளலார் கீழ்க்காணும் பாடலில் தெரியப்படுத்துகிறார்.
அண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்
கண்டுகொண்டிட ஒளிர் கல நிறை மணியே (651)
கோடிக்கணக்கான அண்டங்களை அரை நொடியில் சென்று அங்குள்ள பண்டங்களை (பொருட்களை) கண்டு கொள்ள ஒளியை படைத்த மணியே என்கிறார்.
அதாவது ஒளியே மிக அதிவேகமாக பயணிக்கக்கூடிய ஊடு என்கின்ற அறிவியல் செய்தியை கூறுகிறார். இன்றைய நவீன அறிவியல் கூறும் செய்தியை வள்ளலார் உணர்ந்து கூறி இருக்கிறார், நாம் காணும் ஒவ்வொரு பொருளும் நம் கண்ணுக்கு தெரிகிறது என்றால் ஒளி தான் காரணம். பொருள் மீது ஒளி பட்டு எதிரொளிக்கும் போது ஒரு பொருள் நமக்கு தெரிகிறது என்பது அறிவியல் உண்மை.
வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும். ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும். ஒளி என்பது போட்டான் (photons) எனும் நிறை இல்லாத ஒரு துகள் ஆகும். இத்துகள்கள் புவியீர்ப்பு விசைக்கு கட்டுபடாததால் ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லை என ஐன்ஸ்டின் கூறியுள்ளார்.
இதுவரை நாம் கண்டது அருட்பெருஞ்சோதி அகவலில் ஒரு சில பாடல்களை மட்டுமே. இதில் மொத்தம் 798 இரண்டடி செய்யுள் பாடல்கள் உள்ளன. அதில் இருக்கும் அனைத்து பாடல்களும் அறிவியல் செய்திகளை நிரப்பி இருக்கின்றன. இதில் கற்பனை, கட்டுக்கதைகள், புனைவு, புகழ் பாடுதல் உள்ளிட்ட எதுவும் இல்லை என்பது மேலும் சிறப்பிற்குரியது.
ஆனால் இவ்வளவு அறிவுக்களஞ்சியமாக இருக்கக் கூடிய வள்ளலாரின் பெருமிதங்கள் வெளியுலகத்திற்குத் தெரியாமல் போனது எப்படி என்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது.
ஈராயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த தமிழர் அறிவியல், பண்பாடு உள்ளிட்டவற்றை பகுத்தறிவு என்ற பெயரில் நம் மக்களைக் கற்க விடாமல் செய்துவிட்டனர்.
தமிழ் காட்டுமிராண்டி மொழி, அவற்றில் ஒன்று மில்லை எல்லாம் மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளது. அவற்றைப் புறக்கணியுங்கள், வீட்டில் மனைவியிடம், வேலைக்காரப் பெண்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறப்பட்டது. இவ்வாறு நம்மின அறிவை மண் போட்டு மூடியது பகுத்தறிவுப் பகலவர் கூட்டம்!
முற்போக்கு, பகுத்தறிவு போன்ற சொற்களில் நம் தமிழினத்தின் அறிவை மறைத்து விட்டார்கள். தமிழில் ஒன்றுமில்லை - தமிழ் இலக்கியங்களில் ஒன்றுமில்லை, என்ற எவ்வித ஆய்வும் செய்யாமல் வாய்க்கு வந்த தெல்லாம் சொல்லி தமிழினத்தை தாழ்வு மனப்பான் மைக்கு உள்ளாக்கி விட்டனர்.
இவ்வாறான தாழ்வு மனநிலையிலிருந்து நம்மினத்தை விடுவிக்க வந்தவரே வள்ளலார்.
தமிழரின் பண்பியல், வாழ்வியல், வானியல், மெய்யியல், தத்துவவியல், உயிர் நேயப் பண்பாடு, சாதி ஒழிப்பு, ஆண் - பெண் சமத்துவம், உருவ வழிபாடு மறுப்பு உள்ளிட்ட எல்லாக் கூறுகளையும் வெளிக் கொணர்ந்தவர் வள்ளலார். தமிழினம் மிகச்சிறந்த வானியலாளர் மரபு கொண்டது என்பதைத் தம் அகவல் கொண்டு நிறுவியவர் வள்ளலார்.
வள்ளலாரின் வானியல் கோட்பாடுகள் இன்னமும் நுட்பமாக ஆராயப்பட வேண்டும், அவ்வாறு ஆராயப்பட்ட கோட்பாடுகளைக் கல்விக் கூடங்களில் பாடமாக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு கல்விக்கூடங்களில் “அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை மறு சீரமைத்து தமிழ் இலக்கியங்களில் இருக்கும் விஞ்ஞானம், வானியல் உள்ளிட்ட பல அறிவியல் செய்திகளை தொகுத்து “அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டும்.
தமிழ் முன்னோரின் அறிவியல் அறிவை அடித்தளமாகக் கொண்டு நவீன அறிவியலை அத்துடன் இணைத்து இங்கு அறிவியல் வளர்ச்சி காணவேண்டும். இந்த அறிவியல் வளர்ச்சி ‘எவ்வுயிரும் நம் உயிரே’ என்ற தமிழர் அறத்திற்கு இசைய வளரவேண்டும். வள்ளலாரின் அறிவியல் பார்வையும், அறவியல் தேவையும் இதில் நமக்கு வழிகாட்டும்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 ஏப்ரல் மாத இதழ்)
கண்ணோட்டம் இணைய இதழ்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com
Leave a Comment