நடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள்
நடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள் - வான்முகில்.
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களை தமிழ்வழியிலேயே கற்கிறார்கள். இம்மாணவர்கள் 12ஆம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் இவர்களுக்குத் தமிழ்நாட்டில் இந்திய அரசு நடத்தும் புதுச்சேரி, திருவாரூர் நடுவண் (மத்திய) பல்கலைக்கழங்களில் மேல் படிப்புகளைத் தொடர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
இவ்விரு பல்கலைக்கழகங்களும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சேரத் தகுதி வாய்ந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலைப் பாடங்களை நடத்திவருகின்றன. இவ்விரு பல்கலைக்கழகங்களும் இப்பாடப்பிரிவில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுகளை ஆங்கில வழியில் மட்டுமே நடத்துகின்றன. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் அநீதி! தமிழ் வழியில் படித்தவர்கள் எப்படி ஆங்கில மொழியில் தேர்வு எழுத முடியும்?
தமிழ்நாட்டில் செயல்படும் இவ்விரு இந்திய அரசின் நடுவண் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 90 விழுக்காடு இடங்களை மண்ணின் மைந்தர்களுக்கே ஒதுக்க வேண்டும்! இந்த ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி, மாணவர்களை அவர்கள் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், புதுவை பல்கலைக்கழகம் உள்ளூர் மக்களுக்காக 25 விழுக்காடு இடங்களை ஒதுக்கியுள்ளதாக அதன் வெளியீடு (Prospectus) கூறுகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படாத பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களைப் பெறுவதற்கே தமிழ் வழியில் படித்த மாணவர்கள் ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
முதுகலை கணிதம், வேதியியல், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் சேர உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்றுவரை இல்லை!
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திருவாரூர் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இவ்விரு நடுவண் அரசின் பல்கலைக்கழகங்களிலும் அதன் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கான 90 விழுக்காடு இடஒதுக்கீட்டை நாம் போராடிப் பெற வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி மேல்நிலை வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும் போராட வேண்டும்.
தமிழ்நாடு அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள்கூட நுழைவுத் தேர்வைத் தமிழில் நடத்துவதில்லை என்பது தான் வேதனைக்குரிய நிலை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் நேரடியாகச் சேரக்கூடிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பல முதுகலை அறிவியல், கலை பாடப் பிரிவுகளை நடத்தி வருகிறது. இப்பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வை ஆங்கில வழியிலேயே நடத்தி வருகிறது. இந்நிலை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.
மேல்நிலை வகுப்பை தமிழில் படித்துள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த ஆண்டு நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நுழைவுத் தேர்வையே நீக்கி விட்டது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இது மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் தர வரிசைப்படி முதல் பத்து மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்குகிறது. இப்பல்கலைக் கழகத்தில் சேர விண்ணப்பம் போட கடைசி நாள் - மே 3.
நுழைவுத் தேர்வையே நீக்க முடிவெடுத்த பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும் நம் பாராட்டுக் குரியவர்கள். நெல்லைப் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை, நல்ல தொடக்கமாகக் கொண்டு, தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மே மாத இதழ்)
கண்ணோட்டம் இணைய இதழ்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com
Leave a Comment