ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு : சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா? கி. வெங்கட்ராமன் அறிக்கை!


தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை
தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு :

சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதையும், பிற ஆற்று நீர்த் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்துவதையும் தடுத்து நிறுத்த இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது என இன்று (14.11.2019) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அதிர்ச்சியளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியும், நீதிமுறைமையும் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடையாதா என்ற வினாவை எழுப்புகிறது!
கர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேயா ஆற்றின் குறுக்கே கர்நாடக – தமிழ்நாடு எல்லைக்கு அருகே 9 கிலோ மீட்டர் தொலைவில், யார்கோல் கிராமத்தில் 500 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கும் கொள்ளளவு கொண்ட 414 மீட்டர் நீள அணையை ஏறத்தாழ 87 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது.
மேலும், கோலாறு மாவட்டத்தின் மல்லூர் வட்டத்தில் 160 குளங்களை நிரப்பும் வகையிலும், எல்லமல்லப்பா குளத்தில் 284 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கும் வகையிலும், வரத்தூர் குளம் முதல் நரசப்பூர் குளம் வரை பல்வேறு குளங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் வகையிலும் பெண்ணையாற்றிலிருந்து ஏறத்தாழ 8 அடி விட்டமுள்ள குழாய்களைப் பதித்து, இராட்சத நீறேற்றிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் உறிஞ்ச கர்நாடக அரசு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவையெல்லாம் நிறைவேறிவிட்டால், தென்பெண்ணை ஆற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் வரத்து மிகப்பெருமளவுக்கு பாதிக்கப்படும். கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட உழவர்களும், பொது மக்களும் பாசன நீரும், குடிநீருமின்றி மிகப்பெரும் அல்லலுக்கு ஆளாவார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இத்திட்டங்களைத் தடை செய்ய வேண்டுமென்று கோரி, கடந்த 18.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
அன்றைய மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்குமிடையே 1892ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கர்நாடக அரசு அணைக் கட்டுகள், தடுப்பணைகள், பெருமளவு தண்ணீர் உறிஞ்சும் திட்டங்கள் ஆகிய எதற்கும் தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுக்கு தகவல் கூட தெரிவிக்காமல் கர்நாடக அரசு பெருமளவிலான தண்ணீர்த் தடுப்புத் திட்டங்களை செயல்படுத்துவது மேற்சொன்ன ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதால், உச்ச நீதிமன்றம் இத்திட்டங்களை சட்ட விரோதமான திட்டங்கள் என அறிவித்துத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், உடனடியாக அத்திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடையாணை வழங்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
இவ்வழக்கில் ஒரு எதிர்வாதியாக உள்ள இந்திய அரசு, கர்நாடகத்தின் இந்த சட்ட விரோதச் செயலுக்கு முழு ஆதரவு அளித்து மனுத்தாக்கல் செய்தது.
தமிழ்நாடு அரசு கர்நாடகத்தின் இந்த அணைக்கட்டு மற்றும் நீர்த்தடுப்புத் திட்டங்களுக்கு எதிராக இந்திய அரசு தலையிட்டு ஆவனசெய்ய வேண்டுமென்று கோரிக்கைக் கடிதம் எழுதியது உண்மைதான் என்றாலும், அது “மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956”-இன்படி முறையான படிவத்தில் வரவில்லை என்றும், இச்சட்டத்தின்படி ஒரு தீர்ப்பாயம் அமைக்குமாறு தெளிவான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் கூறி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது.
அதுமட்டுமின்றி, தென்பெண்ணையாறு குறித்து கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே 1933இல் செய்து கொள்ளப்பட்ட துணை ஒப்பந்தமானது, கர்நாடகம் குடி தண்ணீர் தேவைக்காக அணை கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் தேவையில்லை என்று கூறுகிறது. கர்நாடக அரசு தான் மேற்கொள்ளும் இத்திட்டங்களெல்லாம் குடி தண்ணீர் தேவைக்காகத்தான் என்று வரையறுத்திருக்கிறது. எனவே, இத்திட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறியது.
அதற்கு மேலும் சென்று, காவிரி வழக்கின் இறுதிக் கட்டத்தில் சொன்னதுபோல இச்சிக்கலில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற பழைய வாதத்தையும் முன்வைத்தது.
“மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956”- பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு மாற்றமடைந்துள்ள இன்றைய நிலையில் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பகிர்வுச் சிக்கலை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு முழு அதிகாரமுண்டு என்று 2016 திசம்பரில் அரசமைப்பு ஆயத் தீர்ப்பின் வழியாக தெளிவாகக் கூறிவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு தென்பெண்ணை ஆற்று வழக்கை விசாரிக்க அதிகாரமில்லை என்ற தோற்றுப்போன பழைய வாதத்தையே மீண்டும் இந்திய அரசு முன்வைக்கிறது.
கர்நாடக அரசு, தனது “நீராவாரி நிகாம்” வழியாக காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகளேயோ, காவிரி நீரைத் திருடி குளங்களில் சேமிப்பதையோ குடி தண்ணீர் திட்டம் என்று சொல்லித்தான் நிலைநாட்ட முனைந்திருக்கிறது. குடி தண்ணீர் தேவைக்காக என்று சொல்லி, தொழிற்சாலைகளுக்கும், பணப்பயிர் சாகுபடிக்கும் நீரைத் திருடிச் செல்வதை கர்நாடகம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இது இந்திய அரசின் ஒத்துழைப்புடனேயே நடக்கிறது!
இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றுக்குத் தனியாக ஒரு தீர்ப்பாயம் கோரவில்லை என்ற ஒரு வலுவில்லாத காரணத்தைக் காட்டி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் மேற்கொள்ளும் அடாவடித் திட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை போட முன்வராதது இயற்கை நீதிக்கு எதிரானது!
“தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் இதுகுறித்து தீர்ப்பாயம் அமைக்குமாறு நான்கு வாரங்களுக்குள் கடிதம் அனுப்பலாம்” என அறிவுரை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அந்த நான்கு வாரத்திற்குக் கூட கர்நாடகத்திற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முன்வரவில்லை! மாறாக, இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் இடைக்கால மனுவை (I.A. No. 95384 of 2019) தள்ளுபடி செய்திருப்பது சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லை போலும் என்ற ஐயத்தையே எழுப்புகிறது!
முல்லைப் பெரியாறு வழக்கை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு இச்சிக்கலை விசாரிக்க அரசமைப்பு ஆயம் கோரியும், அதுவரை கர்நாடகத் திட்டங்களுக்கு இடைக்காலத் தடை கோரியும் உடனடியாக புதிய மனு ஒன்றை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தென்பெண்ணை ஆற்றின் உரிமையை நிலைநாட்ட விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.