ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

போர்க்களப் பேராசிரியர் அறிவரசனார்க்கு புகழ் வணக்கம்! பெ. மணியரசன் இரங்கல்!


போர்க்களப் பேராசிரியர் அறிவரசனார்க்கு புகழ் வணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!




பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் நேற்று (04.03.2020) கடையத்தில் அவர்களது இல்லத்தில் உடல்நலமின்றி காலமாகினார். என்ற செய்தி அதிர்ச்சியும் துயரமும் அளிக்கிறது. உடல் நலமின்றி படுக்கையில் இருக்கிறார்கள் என்றசெய்தி தெரிந்து, போய்ப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தத்துயரச் செய்தி வந்தது.
உடல் நலமின்றி இருந்த நிலையிலும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று எடுத்த முயற்சிக்காக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.
தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டக்களங்களில் சந்தித்துக் கொண்ட போது தான் ஐயா அறிவரசன் அவர்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கமும் நட்பும் ஏற்பட்டது. நேர்மையான தமிழறிஞர். தமது எழுது கோலைத் தலைவர்களுக்கு முதுகு சொறியும் குச்சியாக மாற்றாதவர். நீண்ட காலம் திராவிடச் சிந்தனையில் ஊற்றம் பெற்றவர் என்றாலும் பிற்காலத்தில் சிறந்த தமிழ்த்தேசியராகத் தம்மை மறுவார்ப்பு செய்து கொண்டவர்!
எது உண்மையோ, எது தமிழின உரிமை மீட்பிற்குத் தேவையோ அதன் பக்கம் நிற்க வேண்டும் என்று செயல்பட்ட செம்மாந்த நெஞ்சினர் அறிவரசனார்.
தமிழீழத்தில் போர் நிறுத்தம் செயல்பட்ட 2006 - 2008 காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்று இரண்டாண்டுகள் தமிழாசிரியர்களுக்குப் பாடம் நடத்திப் பயிற்சி தந்தவர். அவரிடம் தமிழ் கற்ற மாணவிகளில் தமிழீழத் தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனி அவர்களும் ஒருவர்.
2009- க்குப் பிறகும் பிரான்சு உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்குச் சென்று தமிழீழப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் கற்பித்தார். தமிழ்ப் பாடநூல்கள் யாத்துத் தந்தார்.

தமிழ்நாட்டில் நடந்த தமிழின, தமிழ் மொழி உரிமை மீட்புப் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார். தம் குடும்பத்தைத் தமிழ்த்தேசியக் குடும்பமாக உருவாக்கியவர் ஐயா அறிவரசனார்.
தமிழின இளையோர் பின்பற்றத்தக்க இலட்சிய உறுதி, போர்க்குணம், பண்பாடு முதலியவற்றை ஒருங்கே பெற்றிருந்த பேராசிரியர் ஐயா அறிவரசனார் அவர்களுக்குத் தலைதாழ்த்தி புகழ் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்; இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.