ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பா.ச.க. ஆட்சி மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் உரிமையைப் பறிக்கிறது
இந்துத்துவா கூச்சல் போடும் பா.ச.க., ஒட்டுமொத்த இந்துக்களுக்கான கட்சியல்ல - அது ஆரியத்துவ கட்சி - பிராமணத்துவ கட்சி என்பது மீண்டும் அம்பலமாகி நிற்கிறது. மருத்துவ மேற்படிப்பு இடங்களில் ஒருபக்கம் தமிழ்நாட்டு இடங்கள் பறிபோகின்றன. இன்னொரு பக்கம், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்கள் பறிக்கப்படுகின்றன.

கடந்த மூன்றாண்டுகளாகவே இவ்வாறான இட ஒதுக்கீட்டுப் பறிப்பு நிகழ்ந்தது; இந்தக் கல்வியாண்டும் தொடர்கிறது. உயர்கல்வியில் நீட்தேர்வு திணிக்கப்பட்டதற்குப் பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவம் ஆகியவற்றில் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 விழுக்காடு இடங்களை இந்தியத் தொகுப்புக்குத்தந்துவிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள தமிழ்நாட்டை இது மிகக்கடுமையாக பாதிக்கிறது.

அது மட்டுமின்றி, இவ்வாறு இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்து இடங்களும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, பொதுப் போட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அறவே இல்லை என மறுக்கப்பட்டு விட்டது. அரசமைப்புச் சட்டக்கட்டாயம் இருப்பதால், பட்டியலின சாதியினர் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு தப்பிப்பிழைத்திருக்கிறது.

இந்த வகையில், தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1,758இல் 50 விழுக்காடு - அதாவது 879 இடங்கள் இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு ஏதும் கிடையாது! இவ்வாறு அனைத்து மாநிலங்களிலிருந்தும் மொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட 9,550 இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ஏதும் கிடையாது!

இந்திய அரசின் கல்வி மற்றும் அலுவல்பணிகளில் 27 விழுக்காடு இடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு வழங்க வேண்டுமென்ற மண்டல் குழு பரிந்துரையும், அதை செயல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் அப்பட்டமாக மீறப்படுகிறது. நடுவண் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தான் இந்த 27 விழுக்காடு செல்லுமென்றும், மாநிலங்களிலிருந்து பெறப்படும் இடங்களுக்கு இந்த இட ஒதுக்கீடு இல்லையென்றும் இந்திய அரசு தடித்தனமாக விளக்கமளிக்கிறது.

ஆனால், மாநிலங்களிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட இடங்கள் உள்ளிட்டு அனைத்து இடங்களுக்கும் முன்னேறிய சாதியினரில் ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் 10 விழுக்காட்டு இடங்களை - அவர்களுக்கு வழங்குவதற்கு மட்டும் எந்த சட்டத்தடையும் இல்லை என்கிறது இந்திய அரசு!

இதன் காரணமாக, 2017 - 2018 கல்வியாண்டு தொடங்கி 2020 - 2021 கல்வியாண்டு வரை பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவ மேற்படிப்பு இடங்களில் ஏறத்தாழ 7,300 இடங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. வெறும் 370 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே பொதுப்போட்டியின் வழியாக இடம் பெற்றிருக்கிறார்கள். மாறாக, முன்னேறிய வகுப்பினர் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழியாக 635 இடங்களைக் கைப்பற்றி விட்டனர். இதற்கு மேல் பொதுப்போட்டியில் மிக அதிக இடங்களையும் பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், மருத்துவ மேற்படிப்பில் 879 இடங்கள் இந்தியத் தொகுப்புக்கு செல்லாமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 440 இடங்களை பெற்றிருக்க முடியும்.

சட்டத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான இந்த அத்துமீறலை பல்வேறு தரப்பினர் சுட்டிக் காட்டிய பிறகும், மோடி அரசு அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் இவ்வாறு கிட்டத்தட்ட 11,000 பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் பறிபோய்விட்டன!

இந்த அநீதியை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்து சனநாயக ஆற்றல்களும் போராட்டக் களத்தில் இறங்க வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது. இப்போதாவது, பா.ச.க. தமிழர்களுக்கான கட்சியல்ல என்பதையும், இந்தியா முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட சமூக இந்துக்களுக்கான கட்சியல்ல என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இசுலாமிய எதிர்ப்பைக் காட்டி, ஒட்டுமொத்த இந்துக்களுக்கான கட்சி போல காட்டிக் கொள்ளும் பாரதிய சனதா, உண்மையில் பிராமண மேலாதிக்கக் கட்சி என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்!

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2020 இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.