ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை "மகளிர்ஆயம்" வரவேற்கிறது! மகளிர் ஆயம் தலைவர் அருணா அறிக்கை!



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை
"மகளிர்ஆயம்" வரவேற்கிறது!


மகளிர் ஆயம் தலைவர் அருணா அறிக்கை!




2019இல் தமிழ்நாட்டையே உலுக்கிய 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை' வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். இத் தீர்ப்பை மகளிர்ஆயம் வரவேற்கிறது!
அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளால் பல நாட்களாக நடந்தேறிய இக் கொடுமையை சமூக வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்!
இதனைத் தொடர்ந்து தங்கள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தியவர்களை அடையாளம்காட்டி இறுதிவரை துணிவுடன் நின்ற 8 இளம்பெண்களுக்கும் வாழ்த்துகள்! பெண்களின் உடலை புனிதமாகவும் பண்டமாகவும் 'கற்பு' என்ற பெயரில் கட்டிவைத்திருக்கும் இச்சமூகக் கட்டுகளைத் தகர்த்து 'எம் உடல் மாண்புடைய மனித உடல்' என்று இறுதிவரை தெறிப்புடன் நின்ற இவர்கள் தமிழ்நாட்டு மகளிர் அனைவருக்கும் 'செயல் மாதிரி' (Role model)!
இவ்வழக்கை நேர்மையாக நடத்தித் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவிக்கும் வாழ்த்துகள்!
தீர்ப்பு வெளியானதும் அன்றும் இன்றும் ஆளும்கட்சிகள் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இதனைத் தங்கள் கட்சி ஆட்சியின் சாதனையாக வாய்ச்சவடால் அடிக்கின்றன. இவர்களை மகளிர் ஆயம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்நீதி ஆளும் கட்சிகளால் கிடைத்ததல்ல! மாறாக இக்கொடுமை கண்டு வெகுண்டெழுந்த மக்கள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் கிடைத்தது. இவ் வன்கொடுமைக்கு எதிராக மகளிர் ஆயமும் களம் கண்டது.
இதுபோன்று தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல பாலியல் வன்கொடுமைகள் பெண்கள் மீது நடந்தேறியுள்ளன. இவை அனைத்திற்கும் சட்டத்தின் முன் நியாயம் கிடைக்க மகளிர் ஆயம் விழைகின்றது.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.