இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநில வாக்காளரைத் திணிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்து! புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கவுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்தி உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, புதுச்சேரியின் அரசியலில் செயற்கையான குறுக்கீடாக அமைந்து குழப்பம் விளைவிக்கும்! பீகாரில் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா.ச.க.வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், இங்கு வெளி மாநிலத்தவரை சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்யும்.
ஏற்கெனவே பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42 இலட்சம் பேர் வெளி மாநிலங்களில் குடியேறி விட்டதால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 7 இலட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டமிட்டதும் இந்த ஆபத்தை உணர்த்தும்! புதுச்சேரியில் பெருமளவில் இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் குடியேறியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது வெளி மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் குடிமக்களாக நிரந்தரப்படுத்தும் சூழ்ச்சியான ஏற்பாடாகும்!
எனவே, சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்தக் கோரி, வரும் 01.11.2025 காரி (சனி) காலை 10.30 மணிக்கு, புதுச்சேரி - இராசா திரையரங்கம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது! பல்வேறு தோழமை அமைப்பினர் இதில் பங்கேற்கின்றனர்!
புதுச்சேரியின் அரசியல் கட்சியினர், பொது மக்கள், குடியுரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திய அரசின் இந்த சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்க அணிதிரள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறது! எக்காரணம் கொண்டும், வெளி மாநிலத்தவருக்கு புதுச்சேரியில் வாக்குரிமை வழங்கக் கூடாது என அனைவரும் ஒன்றுபட வேண்டும்!
Leave a Comment