ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நிகர் நிலைப் பல்கலை நிகரில்லாக் கொள்ளை

நிகர் நிலைப் பல்கலை நிகரில்லாக் கொள்ளை
- சாவித்திரி கண்ணன் -

லட்சலட்சமாய்க் கொட்டிக் கொடுத்து, கைகட்டி, வாய்பொத்தி, மெய்யடுங்கி அடிமைகளாய் படித்து வந்த மாணவர்களா.. இன்று ஆர்த்தெழுந்து கிளர்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்?

நில் என்றால் நிற்க வேண்டும். ஓடென்றால் ஓட வேண்டும் என்ற ரீதியான நிகர்நிலைப் பல்கலை நிர்வாகங்களின் சர்வாதிகார வலைப்பின்னலில் பிள்ளைப் பூச்சிகளாய்ப் படித்து வந்த மாணவர்கள் இன்று பிடரி தெரிக்கத் தீப்பிழம்பானார்கள்.

நிர்வாகிகளின் அலுவலக அறை சூறையாடப்படுகிறது. கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அடியாட்களை வைத்து அடக்க முயன்றவர்கள் அரண்டு போனார்கள். சாராய சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட கல்வி வள்ளல்களால் மாணவர்களின் சத்திய வேட்கையைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பலே..பலே...அதிசயம், ஆச்சர்யம், ஆனந்தம் . மனமெல்லாம் நிறைந்து பொங்குகிறது.

விவகாரம் இதுதான்-

இந்தியாவின் உயர்கல்வித் துறையில் 1984 க்குப் பிறகு தனியார் பொறியியல் கல்லூரிகளின் வரவு அரசின் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு குறைந்ததால், தவிர்க்க முடியாத தேவையாகப் பார்க்கப் பட்டது. அதுவரை 11 அரசு பொறியியல் கல்லூரிகளே இருந்த தமிழ்நாட்டில் அதிமுக அரசியல்வாதிகளால் மளமளவென்று புதிய பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தவகையில் இன்று 240 பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்களாய் வந்து விட்டன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாய் இருந்த இக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, கல்வித்தரம், அடிப்படைக் கட்டமைப்பு, நன்கொடை போன்றவற்றில் முறை கேடுகள் கொடிகட்டிப் பறந்தன. ஆகவே அரசின் அங்கமான அண்ணா பல்கலைக்கழகம் அவ்வப்போது இந்த விவகாரங்களில் தலையிட்டு சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளைக் கண்டித்து ஒழுங்கு படுத்துவது வாடிக்கையாயிருந்தது.

இதனால் அரசுத் தலையீடுகளிலிருந்து விலக்குப் பெற நினைத்த சில தனியார் கல்வி நிறுவனங்கள் குறுக்கு வழியைத் தேடினார்கள். அதற்கு வரப்பிரசாதமாய் வந்தது நிகர்நிலைப் பல்கலை அந்தஸ்து. நிகர்நிலை பல்கலை அந்தஸ்து கிடைத்து விட்டால் அண்ணா பல்கலைக் கழகம் தலையிட முடியாது. தாங்களே வேந்தர், துணைவேந்தர், முதல்வர் எல்லாமுமாய் கொட்டமடிக்கலாம். தங்கள் பெயரிலேயே பட்டங்களை வழங்கலாம் என்ற அம்சம் இந்தக் குறுமதியாளர்களை வெகுவாய் ஈர்த்தது.

ஆனால் நிகர்நிலைப் பல்கலை தகுதி பெறுவதற்கு எல்லா அம்சங்களிலும் நிறைவான தகுதி பெற்று, குறைவில்லாத நிலையை பெற்றிருக்க வேண்டும் என்ற கராரான விதிமுறைகள் இருந்தன. பல்கலைக் கழக மானியக் குழுவின் 1950 ஆம் வருட சட்டம் பிரிவு 3 ன் படி மிக உன்னத தகுதி கொண்ட சிறந்த கல்விச் சூழலுக்கு உத்திரவாதம் தரும் அனுபவச் செறிவு கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி உரிமை தரும் நிகர்நிலைப் பல்கலைத் தகுதி தரலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி முதல் பத்தாண்டு காலத்தில் இந்திய அளவில் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த எட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. 70 களிலும் 80 களிலுமாக மொத்தம் 21 நிறுவனங்கள் நிகர்நிலை அந்தஸது பெற்றன.

இந்தச் சூழல் முற்றிலுமாக கெட்டுச் சிதறி சீரழிந்து பா.ஜ.கவின் ஆட்சிக் காலத்தில் முரளி மனோகர் ஜோஷி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பில் இருந்தபோது பணத்தை அள்ளிக் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எந்த மட்டமான கல்லூரியானாலும் நிகர்நிலைப் பல்கலைத் தகுதிச் சான்றிதழூ வாங்கி விடலாம் என்று கல்விச் சூழல் சரிந்தது. இந்தச் சரிவில் தான் இன்று இந்தியாவில் 99 கல்வி நிறுவனங்கள் நிகர்நிலை பல்கலைக் கழகத் தகுதி பெற்று விட்டன. அதில் தமிழகத்திலுள்ள 16 தனியார் கல்வி நிறுவனங்கள் அடங்கும். இவற்றில் ஒரு சில, அடிப்படை வசதிகள்கூட நிறைவு செய்யாமல் ஆரம்ப நிலையிலிருந்து புதிய கல்லூரிகள் என்பதொன்றே நடைபெற்ற முறைகேடுகளுக்கு அத்தாட்சியாகும்.

சேலம் வினாயகா மிசனின் எஸ்.ஆர்.கல்லூரி அதிபர் பிச்சமுத்து இருபதாண்டுகளுக்கு முன்னால் சிலநூறு சம்பளம் பெற்ற சாதாரண ஊழியர். இன்று சில ஆயிரம் கோடிகளுக்கு அதிபர். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்கள் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாயிருந்த பிரபல வழக்கறிஞர் பராசரனும் அவரது மகன் மோகன் பராசரனும் ஆகும். பராசரன் ச ங்கராச்சாரியாரின் மிகத் தீவிர விசுவாசி, காஞ்சிமடத்தின் பக்தரான முரளிமனோகர் ஜோஷியிடம் பராசரன் மூலமாக நிகர்நிலைப் பல்கலைத் தகுதிச் சான்றிதழ் பெற்றது எஸ்-ஆர்.எம். இந்நிலையில் அகில இந்தியத் தொழில் நுட்பக் குழுமத்திடம் 6 பாடப் பிரிவுகளுக்கு 620 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தது எஸ்-ஆர்.எம். ஆனால் இன்று 19 பாடப் பிரிவுகளை ஆரம்பித்து 2,150 மாணவர்களைச் சேர்த்துள்ளது. இதன் சட்டவிதி மீறலை ஒரு விசேச ஆய்வு நடத்தி இந்திய மாணவர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

இதே போன்ற விதிமீறல்கள் சத்யபாமா, சாஸ்தா, பாரத், போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் நடந்துள்ளன. சமீபத்தில் தன்னுடைய கல்லூரியில் தன்னால் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் கமலகாசனை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வைத்தார் ஜேப்பியார். இவரது பல்கலைக் கழகத்தில் இவர், இவருடைய மனைவி, மகள்கள், மருமகன்கள் அனைவருமே வேந்தர், துணைவேந்தர், முதல்வர்கள்தான். இவ்வளவு உயரிய கல்விப் பொறுப்பில் கல்வித் தகுதியே இல்லாத ரத்த சொந்தங்களை வெட்கமில்லாமல் நியமனம் செய்து கல்லூரிக்குள் ஒரு காட்டுத் தர்பாரை நடத்தி வந்த ஜேப்பியார் மாணவர்களின் கிளர்ச்சியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கல்லூரியின் புறவாசல் வழியாகத் தலைதெறிக்க ஓடித் தப்பியுள்ளார்.

இவருடைய கூட்டாளியான மற்றொருவர் வேலூரில் விஐடி நிகர் நிலைப் பல்கலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன். இருபதாண்டுகளுக்கு முன் 35 லட்ச ரூபாய் கடன் திரட்டி அரசாங்கப் புறம் போக்கு நிலங்களை வளைத்துப் போட்டுக் கல்லூரி ஆரம்பித்த இவர் இன்று பலநூறு கோடிச் சொத்துகளுக்கு அதிபர். இன்றைக்குச் சாதாரண கடைநிலை ஊழியரிடம் கூடக் கறாராக வருமான வரி பிடித்தம் செய்யும் மத்திய அரசு இது போன்ற கல்வி நிறுவனங்களுக்கு முற்றிலுமாக வரிவிலக்கு தந்திருப்பதால் இவர்கள் வருமானத்தையும் கணக்கில் காட்ட வேண்டிய தில்லை. வரியும் கட்ட வேண்டியதில்லை.

இது ஒருபுறமிருக்க ஜேப்பியார். பிச்சைமுத்து, விஸ்வநாதன் என்ற இந்த மூவேந்தர்களும் தினமணி நிருபரை அழைத்து, அகில இந்திய தொழில் நுட்பக் குழுமத்தின் அங்கீகாரம் பெறுவது பெரிய விசயமில்லை என்றும் யாரோ சில விசமிகள், கல்வியாளர்கள் தமிழகத்தில் மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும் திருவாய் மலர்ந்துள்ளனர்.

பெரிய விஷயமில்லாத ஒரு அங்கீகாரத்தை இன்னும் ஏன் இவர்களால் பெறமுடியவில்லை? அதுவும் ஏப்ரல் 2005 லேயே ஏ.ஐ.சி.டிஇ. சம்பந்தப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்திருந்தது. பிறகு டிசம்பர் 2005, பிப்பரவரி 2006 என்று தொடர்ந்து நினைவூட்டியது. பிறகு பத்திரிகைகளில் இச்செய்தி வந்தவுடன்தான் பற்றிக் கொண்டது நெருப்பு. இதுவரை ஏ.ஐ.சி.டிஇ. மேற்பார்வையிட அனுமதி மறுத்து வந்துள்ளன மேற்படி நிர்வாகங்கள்.

மாணவர்கள் சேர்க்கை, கல்வித்தரம், கற்றுத்தரும் ஆசிரியர்களின் தகுதி, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அடிப்படை வசதிகள் போன்றவைகள் முறையாக இருக்கும் பட்சத்தில் ஏ.ஐ.சி.டிஇ. யின் அங்கீகாரம் உடனே கிடைத்துவிடும். பேராசை கொண்ட நிர்வாகங்கள் இவையணைத்திலும் முறைகேடு செய்துள்ளமையினால் ஏ.ஐ.சி.டிஇ. எதிர்க்கின்றன என்பது அப்பட்டமாய் அம்பலமானது.

ஏ.ஐ.சி.டிஇ. யின் அங்கீகாரமில்லாமல் பொறியியல் துறைக்கான தேசிய தகுதிச் சான்றாணயம் தரநிர்ணயச் சான்றிதழ் கிடைக்காது. இதனால் மாணவர்கள் மேற்படிப்புப் படிக்க முடியாது. வெளிநாட்டு விசாவிற்கு விண்ணப்பித்த்ரல் தள்ளுபடி யாகும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டாலும் அதிலும் சேரமுடியாது. இந்திய நிறுவனங்களே கூட ஏ.ஐ.சி.டிஇ. யின் அங்கீகாரத்திற்குத் தான் முன்னுரிமை தருகின்றன.

இவையணைத்தும் தெரியவந்தபோது, தாங்கள் கொடுத்த தங்கள் பெற்றோர்களின் வாழ்நாள் சேமிப்பை யெல்லாம் கொட்டி அழுது, அது போதாமல் அம்மா தாலி, அண்டா, குண்டா அடகு வைத்து அதுவும் போதாமல் அக்கம் பக்கம் கடன் வாங்கிக் கொடுத்த பணம் கல்விக்கல்ல, கல்விக் கொள்ளையர்களின் கருவூலத்திற்குத் தான என்று புரிந்து கொண்ட போதுதான் புழுவாய் இருந்த மாணவர்கள் புரட்சியாளர்கள் ஆனார்கள்.

எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் எட்டு மாணவர்களைச் சிறையில் அடைத்தது. சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழக அடியாட்கள் நிகழ்த்திய அடாவடித்தனத்தால் ராபின்வாஸ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரணை கூட இன்னுமில்லை. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. மாநில அரசு மெளனம் சாதிக்கிறது. நுழைவுத் தேர்வு ரத்து விவகாரத்தில் தேவையானால் அனைத்துத் தனியார் கல்லூரிகளும் அரசுடைமை யாக்கப்படும் எனச் சவால் விட்ட முதலமைச்சர், நடக்கும் அனைத்து அட்டூழியங்களையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். கல்லூரி நிர்வாகிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மாறாக கல்லூரிகளுக்கு மாநில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

ஏ.ஐ.சி.டிஇ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஒரு நிகர்நிலைப் பல்கலையானது 900 மையங்களில் சட்டவிரோதமான கல்வி மையங்கள் நடத்தி வந்ததை அம்பலப்படுத்தியுள்ளது.

செப் 2001 இல் பாரதிதாசன் பல்கலைக் கழக வழக்கில் ஏ.ஐ.சி.டிஇ யின் அங்கீகாரமில்லாத பாடப்பிரிவிற்கு அனுசரணையாகத் தீர்ப்பு தந்தது உச்சநீதிமன்றம். இது பல விபரீத விளைவுகளுக்கு வித்திட்டது.

அக்டோபர் 2002 இல் பாய் பவுண்டேசன் வழக்கில் தனியார் கல்வி நிறுவனங்களில் அரசுத் தலையீடு கூடாது என கல்விக் கொள்ளையர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

இதன் விளைவாக, பிப்ரவரி 2005 இல் சடடீஸ்கர் மாநிலத்தில் மட்டும் மொட்டை மாடிகளிலும், காற்றுப்புக முடியாத குடோன்களிலுமாக 112 பல்கலைக் கழகங்கள் சட்ட விரோதமாகச் சம்பாதித்து வருவதை தடை செய்கிறோம் என்றது உச்சநீதிமன்றம்.

ஆகஸ்ட் 2005 இல் மீண்டும் தனியார் கல்விக் கொள்ளையை அங்கீகரித்து இடஒதுக்கீட்டின் படி இதுவரை நிரப்ப்பட்டு வந்த அரசுக் கோட்டாவை அடியோடு ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

ஆக நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களின் அத்து மீறல்களை நீதிமன்றம் சட்ட விரோதமாகப் பார்க்கப் போகிறதா அல்லது சட்டபூர்வ அங்கீகாரம் தந்து விடுமோ என்று தெரியவில்லை.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் முற்றிலுமாக மாநில அரசின் கண்காணிப்புக்கு அப்றாற்பட்ட ஒரு நிறுவனமரகச் செயல்பட அனுமதித்திருப்பது கூட மேற்படி விபரீதங்களுக்கு ஒரு காரணமாகிறது.

நிகர்நிலைப் பல்க¨ல் அந்தஸ்தே கூட மாநில அரசின் ஒரு அங்கமான அண்ணா பல்கலைக் கழகத்திடம் கலந்து பேசி முடிவெடுக்காமல் இதற்கு முன் சம்மந்தப்பட்ட கல்லூரி அண்ணா பல்கலைக் கழகத்தில் எப்படிச் செயல்பட்டது எனத் தெரிந்து கொள்ளாமல், பல்கலைக் கழக மானியக் குழு வழங்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே கல்லூரியாகவுமில்லாமல், பல்கலைக் கழகமாகவுமில்லாமல் இரண்டுங் கெட்டான் நிலைகொண்ட நிகர் நிலைப் பல்கலைக் கழகம் என்ற ஒன்று தேவைதானா? என்பது உரத்து விவாதிக்கப்பட வேண்டும்.

இப்படி அத்துமீறிக் கல்விக் கொள்ளை நடத்தியதோடு 75,000 மாணவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கியுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் சட்ட விரோதச் செய்ல்களுக்கு சரியான சவுக்கடி நீதிமன்றத்தால் வழங்கப்பட வேண்டும். சேர்க்கையின் போதே இவர்களைச் கண்காணிக்கத் தவறிய மத்திய, மாநில அரசுத் துறைகள் இப்போதாவது தங்கள் தவற்றுக்கு உரிய பரிகாரம் தேட வேண்டும்.

நன்றி தமிழர் கண்ணோட்டம் திங்களிதழ் - ஏப்ரல் 2006

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.