தேங்காய்த்திட்டு :: புதுவை மக்கள் போர்க்கோலம்
'அமைதி பூங்கா" என்று வர்ணிக்கப்படும் புதுச்சேரி மாநிலம், தற்பொழுது உலகமயத்தின் விளைவால் அமைதி இழந்து நிற்கிறது. துணைநகரம், துறைமுக விரிவாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலம் என பல திட்டங்களை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ள புதுச்சேரி அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தி களத்தில் இறங்கியுள்ளனர். சிங்கூர், நந்திகிராமம் போன்ற இடங்களில் தாராளமயத்திற்கும் உலகமயத்திற்கும் எதிராகத் தொடங்கிய போராட்டங்களின் வரிசையில் புதுச்சேரியும் இணைந்து கொண்டுள்ளது.
துறைமுக விரிவாக்கம்:
சுமார் 2500 குடும்பங்கள வசிக்கும் புதுவை தேங்காய்த்திட்டு கிராமத்தில், நெல், தென்னை, கத்தரிக்காய், வெள்ளரிக்காய், கீரை வகைகள், மரவள்ளி போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு மீன் பிடித்துறைமுகம் அமைக்க, முன்னரே 40 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டது. இதனால் அப்பகுதியில் உப்பு நீர் பெருமளவு நிலத்தடி நீருடன் கலந்து விட்டது. கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு 3 கி.மீ அளவிற்கு கடல் உள்ளே புகுந்து விட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான மீனவ கிராமங்கள் பாதிப்படைந்தன. இங்கு துறைமுகம அமைப்பதற்காக, உப்பளம் சாலையில் இருந்து தேங்காய்த்திட்டுக்குச் செல்லும் பகுதியில் பன்னெடுங்காலமாக நீரோட்டத்துடன் படகு போக்குவரத்து இருந்த பனஞ்சாலை ஆறு, தற்போது சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டு, அதன் மீது தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தேங்காய்த்திட்டு பகுதியின் பெயரே, அப்பகுதி தென்னைமரங்கள் நிறைந்திருக்கும் பூமியென்பதற்கு சான்றாக விளங்குகிறது. அப்படிப்பட்ட வளமான வேளாண் விளைநிலத்தை துறைமுக விரிவாக்கத் திட்டம் என்கிற பெயரில் வடநாட்டு தனியார் நிறுவனத்திற்கு புதுச்சேரி அரசு ஒப்படைத்துள்ளது. இயற்கை வளங்களை அழித்து சுற்றுச்சூழலை கெடுத்து அப்பகுதி வாழ் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து புதுச்சேரி மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
புதுச்சேரியில் தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறைமுகம் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு ஆழமில்லாதது. அதனால் கடலை ஆழப்படுத்தி துறைமுகத்தை விரிவாக்க அரசு திட்டமிட்டது. இப்பணியை 'ஓம் மெட்டல்ஸ்" என்கிற வடநாட்டு தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. துறைமுகத்தை ஆழப்படுத்திய பின் அதை நிர்வகிக்கும் உரிமையும் அத்தனியார் நிறுவனத்திற்கு அளிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை முறைப்படி பொது ஏலம் (Open tender) மூலம் தீhமானிக்காமல், நியமன அடிப்படையில் போட்டுள்ளது புதுச்சேரி அரசு. இந்த குறுக்குவழி ஏன் பின்பற்றப்பட்டது என்று வலுவான ஐயங்கள் எழுந்துள்ளன.
துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது மட்டுமல்லாமல் பணக்காரர்களின் வசதிக்காக உயர்தர நட்சத்திர விடுதிகள் கட்டவும் அந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விளைநிலங்கள் உள்ளிட்ட சுமார் 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தனியார் நிறுவனத்திற்குப் புதுச்சேரி அரசு தாரைவார்ப்பதால் அப்பகுதி மக்கள், சமூக நல இயக்கங்கள் என பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இத்திட்டத்தை எதிர்த்து போராட 'வீடு, நில கையக எதிர்ப்புக் குழு" என்கிற அமைப்பை தேங்காய்த்திட்டு திரு.காளியப்பன் தலைமையில் அமைத்துள்ளனர்.
புதுச்சேரி அரசு போட்டுள்ள இவ்வொப்பந்தம் அப்பகுதி நிலத்தையும் துறைமுகத்தையும் ஓம் மெட்டல்ஸ் நிறுவனத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுகிறது. இந்நிறுவனம் செயல்படத் தொடங்கினால் வரும் லாபத்தில் வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே புதுச்சேரி அரசுக்கு அந்நிறுவனம் தர வேண்டும். இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என மற்ற முதலாளிய மற்றும் மார்க்சிஸ்டு கட்சி அரசுகளைப் போலவே புதுச்சேரி அரசும் தம்பட்டம் அடிக்கிறது. அங்கு வெறும் 1151 பேருக்குத்தான் வேலைகிடைக்கும்@ அதுவும் புதுச்சேரி வாழ் மக்களில் எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்பது வினாக்குறியே. ஏனெனில் துறைமுகத்தில் வேலை செய்யக்கூடிய அளவிற்கு துறைமுக மேலாண்மை உள்ளிட்ட அத்துறை சார்ந்த கல்வி பயின்றவர்கள் தேங்காய்த்திட்டு பகுதியில் மட்டுமல்ல புதுச்சேரி மாநிலத்திலேயே மிகமிகக் குறைவாகவே இருப்பர்.
ஓப்பந்தத்தின் படி ஒரு சதுர அடி நிலத்தை ஆண்டிற்கு வெறும் 5காசு குத்தகைக்கு கொடுத்துள்ளது அரசு. அதாவது ஒரு ஏக்கருக்கு ஆண்டுக் குத்தகையாக வெறும் 2000ரூபாய் தான் கிடைக்கும். புதுச்சேரி ஒன்றியப் பிரதேச அரசு 30 ஆண்டுகளுக்கு மேல் தனியாருடன் ஒப்பந்தம் போட முடியாது என்று விதி இருக்கிற நிலையில் அதனையும் மீறி 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு;ள்ளது. இது சட்டவிரோதச் செயல்.
தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாகவும், அப்பகுதி மக்களுக்கு எதிராகவும் அரசியல் அதிகார மையங்கள் செயல்படுவது புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவா அல்லது கட்சி நிதியின் வளர்ச்சிக்காகவா என்பது தான் கேள்வி. சுமார் 2700 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டம் நிறைவேறிய பின் துறைமுகத்தை மீண்டும் தனியாரிடமிருந்து அரசு திரும்பப் பெற வேண்டுமானால் புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டு மொத்த வரவு செலவு திட்டத்தையே மிஞ்சும் அளவிற்கு பணம் கொடுத்து தான் வாங்க வேண்டியதிருக்கும் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். துறைமுகத்தை மறைமுகமாக அரசு தனியார்மயமாக்கி விட்டதை ஒப்பந்தத்தின் மூலம் சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ளலாம். இத்திட்டம் தேங்காய்த்திட்டு பகுதிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த புதுச்சேரி நகரபகுதிக்கும் கேடும் ஆபத்தும் விளைவிக்கக்கூடியது என்பதை பல ஆய்வுகள் சொல்கின்றன.
இயற்கை வளங்களை அழிப்பதனால் வருங்கால சந்ததியினர் கடும் பாதிப்புக்குள்ளாக போகின்றனர் என்பதை உணர்ந்து உலகமே இன்று வெப்பமயமாதலுக்கு எதிராக ஒன்று திரண்டு கொண்டிருக்கும் இவ்வேளையில், விளைநிலங்கள், கடற்பகுதி உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிக்கும் இது போன்ற திட்டங்களை எதிர்த்தாக வேண்டியது மக்களின் கடமையாகும். அதனை தேங்காய்த்திட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதை அங்கு நடக்கும் சீற்றமிகு போராட்டத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஏற்கெனவே கடற்பகுதியை 4 மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தியதால் அரியாங்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நிலத்தடி நீருடன் கடல் நீர் கலந்து நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் அதனை பொருட்படுத்தாமல் கடலை சுமார் 16 மீட்டர் அளவிற்கு மேலும் ஆழப்படுத்தவிருக்கும் இத்திட்டம் மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடல் ஆழமாக்கப்படுவதால் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகள் ஏற்பட்டால் கடல் மட்டம் உயரும்@ அதனால் கடலோர பகுதி மக்கள் தம் வாழ்விடங்களை இழந்து நிற்கதியாய் நிற்க வேண்டியதிருக்கும்@ இந்த உண்மையைக் கூட பரிசீலிக்க மறுக்கிறது அரசு. இத்திட்டத்தால் வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் ஐயமில்லை. ஏற்கெனவே கடலோர காவல் நிலையம் அமைப்பதாகக் கூறி வீராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்களின் வாழ்விடங்களை கையகப்படுத்தி மீனவர்களை கடலை விட்டேத் துரத்தும் திட்டத்தை வைத்துள்ளது அரசு. சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் அவலத்தை அப்பகுதி மக்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களைப் பொருட்படுத்தாமல், கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் நாள் 153 ஏக்கர் அரசு நிலத்தை எந்தவிதக் காப்புத் தொகையும் பெறாமல் ஓம் மெட்டல்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார், துறைமுக அமைச்சர் வல்சராஜ். அந்நாளைப் 'புதுச்சேரியின் பொன்னாள்" என்று அப்பொழுது அவர் குறிப்பிட்டார். துறைமுக விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் தனியார் நிறுவனம் அரசுக்குத் கொடுத்துள்ள சுற்றுச் சூழல் அறிக்கையில் இத்திட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என ஒரிடத்திலும் கூறவில்லை. கடல் ஆழப்படுத்தப்படுவதால் உப்புநீர் புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும்.
மேலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல பணிகளுக்காக சுமார் 800 லாரிகள் வந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவெ சிறு நகரமான புதுச்சேரியில் இது போன்ற போக்குவரத்துகளால், போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபடுதல் போன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கும். இதற்கெல்லாம் புதுச்சேரி அரசு எந்த விளக்கமும் சொல்வதில்லை.
இது போன்ற பெரும்திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவது பற்றி முழுமையான விசாரணை நடத்தி, மக்களிடம் கருத்துக் கேட்டு செயல்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி அரசு நிலத்தை தனியார் வசம் ஒப்படைத்துள்ளதை, புதுச்சேரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் சுட்டிக்காட்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் முறையிட்டனர். அவர்களது வாதத்தின் ஞாயத் தன்மையை உணர்ந்த ஆட்சியாளர் 14-02-07 அன்று அரசின் சுற்றுச்சூழல் அமைப்பினர் நடத்தவிருந்த பொது விசாரணையை தள்ளிவைத்தார். ஒப்படைத்த 153 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெற்று, பொது விசாரணை முடிந்த பின், அதற்குத் தக செயல்படலாம் என்று அறிவித்தார்.
அதன்பின்னர் போராட்டக்குழு, சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்ட எழுச்சியான பொதுக்கூட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் அடுத்த கட்டமாக, தேங்காய்த்திட்டு கிராம மக்கள் தங்கள் வீடுகள் அனைத்திலும் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர். இதற்கிடையில், புதுச்சேரி நகராட்சிக் கூட்டத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து ஒருமனதாக தீர்மானம் இயற்றியும், புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரி மாநில அரசும் காங்கிரஸ் அரசே. புதுச்சேரி நகராட்சியும் காங்கிரஸ் நிர்வாகமே.
மக்கள் கொதித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் சிறிதும் சலனமின்றி உயர்நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் கடந்த 19.03.07 அன்று 'புதுச்சேரி துறைமுகக் கழகம்" எனும் பெயரில் பெயர்ப்பலகை வைத்து 'சுபாஸ் புராடக்ட்ஸ் மற்றும் மார்கட்டிங் குழுமம்" என்கிற நிறுவனம் பூசை செய்து பணிகளை துவக்கினர். இதனையறிந்த தேங்காய்த்தி;ட்டு மக்கள் அப்பகுதிக்கு சென்று உடனடி கட்டுமான பணிக்காக, பூசை செய்த இடத்தில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி, தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, உப்பளம் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சுபாசு நிறுவனமானது மத்திய ரிசர்வ் வங்கியின் கருப்புப் பட்டியலின் கீழ் உள்ள நிறுவனம் என்பதும், கொல்கத்தாவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை உயர்நீதி மன்றம் கண்டித்ததும் மறக்கக்கூடிய செய்திகளல்ல.
வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமைக்கு எதிராக புதுச்சேரி அரசு செயல்படுவதைக் கண்டித்தும் உலகமய தாராளமயத்திற்கு துணைபோகும் வகையில் துணைநகரம், துறைமுக விரிவாக்கம், சிறப்புப் பொருளியல் மண்டலம் உள்ளிட்ட திட்டங்களை கைவிடக் கோரியும் 19-02-2007 அன்று, பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேங்காய்த்திட்டு பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இதனையடுத்து, 23-03-07 அன்று போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் முதல்வர். வல்லுநர் குழு அமைக்க போவதாக முதல்வர் கூறியதை போராட்டக்குழுவினர் அங்கேயே எதிர்த்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஏற்கெனவே தில்லியுள்ள தேசிய துறைமுக மேலாண்மைக் கழகம் (யேவழையெட ஐளெவவைரவந ழக Pழசவ ஆயயெபநஅநவெ NஐPஆ) 1971லிருந்து பலமுறை ஆயு;வு செய்து துறைமுகத்திட்டம் புதுச்சேரிக்கு உகந்ததல்ல என பல முறை கூறிவிட்டது. அது போல பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சார்ந்த முனைவர் இராமசாமி அவர்களின் நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை, கடலோரப் பகுதிகளை ஆராய்ந்த டேனிஸ் ஹைட்ராலிக் நிறுவனம் (னுயniளா ர்லனசயடடiஉ ஐளெவவைரவந) இருமுறை ஆய்வு செய்து இத்திட்டம்; சாத்தியப்படாத ஒன்று(ழேn கநயளiடிடைவைல ஊநசவகைiஉயவந) என சான்றளித்தது@ திருச்சி தேசியக் கல்லூரியை சார்ந்த மண்ணியல் துறை(புநழடழபiஉயட னுநியசவஅநவெ) வல்லுனர் திரு.ஆர்.பாஸ்கரன் இதே போல் சாத்தியமில்லையென சான்றளித்தார். இவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களின் போராட்டத்தை திசை திருப்பிட, வல்லுனர் குழு அமைக்கப்போவதாக முதல்வர் சட்டமன்றத்திலும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 27-03-2007 அன்று சட்டமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட எழுச்சியுடன் பேரணியாக புறப்பட்ட மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆவேசமுற்ற மக்கள், சட்டப்பேரவையில் ஒப்படைப்பதற்காக கொண்டு வந்திருந்த ரேசன் அட்டை நகல்களை எரித்தனர். மக்கள் தங்களின் ரேசன் அட்டை நகல்களையே எரித்து போராடிய போதும் அரசு மெத்தனமாக இருந்தது. உலகமயத்திற்கு ஆதரவளிக்கும் அரசியல் தரகர்களை மக்களுக்கு அம்பலப்படுத்திய இப்போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பெண்கள் உள்ளிட்ட 3000 பேர் கைது செய்யப்பட்டனர். முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியிலுள்ள கடைகள் அனைத்தையும் மூடியிருந்தனர்.
02-04-2007 அன்று சட்டப்பேரவையில் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர், தொடர்புடைய துறை அமைச்சர் ஆகியோர் பதில் அளிப்பதாக இருந்தது. சட்டப்பேரவை அலுவல் பட்டியலில் இருந்தும் திடீரென எவ்வித காரணமுமின்றி துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றிய கேள்விகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப் போடப்படடது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது. துறைமுகத் திட்டத்திற்காக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் தனியார் நிறுவனம் பல கோடி கையூட்டு கொடுத்ததாகவும் இது குறித்து மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்யவேண்டும் என்றும் 06-04-07 அன்று நடந்த தேங்காய்த்திட்டு நில கையக எதிர்ப்புக் குழுவின் ஆலேசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
பின்னர் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மக்கள் எதிர்ப்புடன் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறியதையும் பொருட்படுத்தாமல், துறைமுக அமைச்சர் வல்சராஜ் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவேன் என்று திமிர்த்தனத்துடன் கூறினார். இதனால் சினமுற்ற மக்கள் 13-04-07 அன்று அமைச்சரின் கொடும்பாவியை சவப்பாடையில் கட்டி ஊர்வலமாக எடுத்துவந்து எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்பொழுது பாதுகாப்பு பணியிலிருந்து காவல் துறையினர் மீது சவப்பாடையின் மீது கட்டப்படடிருந்த மஞ்சள் பொடி காற்றில்பட்டதால் அதனை மிளகாய் தூள் என்று அவர்களே கற்பிதம் செய்து கொண்டு பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் மீது கடுமையான முறையில் தடியடி நடத்தினர். அதில் இப்போராட்டத்தில் தீவிரமாய் செயல்பட்ட ஊர்மக்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். ஆளும் கட்சியான காங்கிரசின் உள்ளாட்சி மன்ற பிரதிநிதியான பாஸ்கரன் மிகக்கடுமையாக தாக்கப்பட்டார். கேட்கக் கூசும் ஆபாச வார்த்தைகளால் பெண்களை காவல் துறையினர் மிகக்கடுமையான வார்த்தைகளால் திட்டினர்.
காயமடைந்த பெண்கள் உள்ளிட்ட 12 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் இவ்வளவு பேர் இருந்தும் அவ்விடத்தில் ஒரு பெண் காவலாளி கூட இல்லாமல் இருந்தது, அவசியமே இல்லாமல் 3 காவல் துறை கண்காணிப்பாளர்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்தது ஆகியவற்றை பார்க்கும் போது இத்தாக்குதல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாக மக்களிடம் சந்தேகம் வலுத்துள்ளது. உலகமய முதலாளிகளின் அரசியல் கூட்டாளிகளான ஆட்சியாளர்களின் உத்தரவுடன் காவல் துறையினர் ஏவல் துறையாக செயல்பட்டு ஆளும்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதியையே தாக்கியும், மண்ணின் மக்களை தாக்கியும் உலகமயத்திற்கு ஆதரவாக வெறியுடன் செயல்பட்டது. இத்தாக்குதலில் தப்பியோடிய மக்கள் காவல் துறையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் 4 காவல் துறையினர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஊர்மக்கள் காவல்துறையினர் ஊரில் நுழைய தடைவிதித்தனர். காவல்துறையினர் ஊருக்குள் அனுமதிக்கப்டாததால் தேங்காய்த்திட்டு முகப்பு வாயிலிலேயே முகாமிட்டிருந்தனர். இந்த நிகழ்வுகளால் மக்கள் அமைச்சர் மீது கடும் கோபத்திலுள்ளதை உணர்ந்த அரசு அமைச்சர் ஊரிலிலேயே இல்லாத போதும் அவரது வீட்டிற்கு காவல்துறையினரின் கூடுதல் பாதுகாப்பு அளித்தது. இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டி பல்வேறு இயக்கங்கள் அரசை வலியுறுத்தின.
நகராட்சி மன்ற உறுப்பினர் பாஸ்கரன் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெவித்து புதுச்சேரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் காவல் துறை கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 20 பேர் உள்ளிட்ட சுமார் 257 பேர் மீது காவல்துறையினர் முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். காவல் துறை கண்காணிப்பாளர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக இ.த.ச 307 பிரிவின் கீழ் வழக்கும், அமைச்சரின் உருவபொம்மை எரிப்புக்காக வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் அனைவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், விருத்தாசலம் வழக்கறிஞர் ராஜு, விழுப்புரம் வழக்கறிஞர் லூசி ஆகியோரைக் கொண்ட உண்மை கண்டறியும் குழு புதுச்சேரியில் 15-04-2007 அன்று தனது விசாரணையை தொடங்கியது. இவர்கள் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்று தாக்குதலில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். தேங்காய்திட்டு நகரமன்ற உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் காவல்துறையினரின் அத்துமீறல் குறித்து தங்கள் புகாரை பதிவு செய்தனர். இக் குழுவினர் வருகை குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் கூறும் போது தடியடி சம்பவத்தில் உள்ள உண்மை நிலைகளை இக்குழு விரைவில் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைப்பார்கள் என்றும் அதன் பேரில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மக்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார். 16-04-07 அன்று இத்தாக்குதலை கண்டித்தும், இத்திட்டத்தை கைவிடக் கோரியும் நில கையக எதிர்ப்புக் குழுவினரும் பகுதிப் பொது மக்களும் சேர்ந்து சட்டமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மக்களின் போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது உறுதி. நியாமான போராட்டம் என்றுமே தோற்றதில்லை என்பது வரலாறு.
சிறப்பு பொருளாதார மண்டலம்
சேதராப்பட்டு பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க புதுச்சேரி அரசு 800 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முனைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 09-04-2007 அன்று, புதுச்சேரி-மயிலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேசுவார் என்று வருவாய்துறை அதிகாரியும் காவல்துறையினரும் வாக்குறுதி கொடுத்தனர். அது போல் மாவட்ட ஆட்சியர் வராததால் மறுநாள் புதுச்சேரி-மயிலம் சாலையில் மறியலும் கடையடைப்பும் நடந்தது.
பின்னர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து 11-04-2007 புதனன்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து கலைந்து சென்றனர். பின்னர், 11-04-2007 புதனன்று சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் முழுஅடைப்புப் போராட்டம் நடைப்பெற்றது.
துணைநகரம்
புதுச்சேரியில் துணைநகரம் அமைக்க அரசு முடிவு எடுத்தது. தனியார் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழில் நடத்திட அரசே அவர்களுக்கு துணை போவதை மக்கள் மட்டுமின்றி ஆளும் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்த்ததால் அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனால் இத்திட்டம் சற்றே தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
நன்றி : தமிழர் கண்ணோட்டம் மாத இதழ், ஏப்ரல் 2007
Leave a Comment