ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் இதழ் 2009


தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

ஏப்ரல் 2009 இதழ் - தலையங்கம்


குளத்தை இறைத்து பருந்துக்கு விடக்கூடாது


    சமூக நெருக்கடிகள் புதிய போராட்டங்களை உருவாக்குகின்றன் புதிய போராட்டங்கள் புதிய அரசியல் தலைமைகளை வார்த்தெடுக்கின்றன. இந்த வரலாற்று விதிகளுக்கு முரணாகத் தமிழ்நாட்டில் இடைக்காலப் பின்னடைவுகள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

   
    இலங்கை - இந்தியக் கூட்டுப்படைகள் ஈழத்தில் நடத்தும் தமிழ் இனப்படுகொலைகள், அப்போரினால் ஏற்படும் இடப்பெயர்வு அவலங்கள், பட்டினிக் கொடுமைகள், மருந்தும் சிகிச்சையுமின்றி மடியும் மக்கள் என அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களிடையே மகத்தான இன எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எழுச்சியை மங்கி மறையச் செய்திட சில கட்சிகள், மறைமுக மற்றும் நேர்முக வேலைகள் செய்கின்றன.

   

    எழுச்சியைத் தங்களுக்காதவரவாக மாற்றிக் கொள்ள சில தேர்தல் கட்சிகள் சில போராட்டங்கள் நடத்துகின்றன. அப்பழுக்கற்ற தமிழ் உணர்வாளர்கள் என்ன செய்ய வேண்டும்?


    கடந்த காலச் சாதனைகளிலிருந்து;து வீரம் பெற வேண்டும்; கடந்த்த காலத் தவறுகளிலிருந்து;து  பாடம் பெற வேண்டும். 1965 மொழிப்போர், உள்ளடக்கத்தில் ஒரு மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சி! ஆனால் அதை உள்வாங்கி, உலுத்துப் போகச் செய்தது தேர்தல் கட்சியாக மாறிப் போன தி.மு.க. தீக்குளித்தும், துப்பாக்கிக் குண்டேந்தியும் செத்து மடிந்தோர் செய்த ஈகம் வீணாயிற்று! எதிர்பார்த்த விளைச்சல் தரவில்லை. திரும்பவும் அது போன்ற விபத்து நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய கொள்கை வழியில் தான் புதிய தலைமை உருவாகும். 

 

    முதலில் கொள்கையைத் தீர்மானிக்க வேண்டும். வருங்கால இலக்கைத் தீர்மானிக்க, நிகழ்கால நெருக்கடியைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய இந்திய அரசு, சிங்கள அரசுக்குப் படைக் கருவிகள், படையாட்கள், பணம் ஆகியவற்றைத் தருகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது அது நடத்தும் ஒடுக்குமுறையின் விரிவாக்கமே இது. இந்திய அரசின் நில-அரசியல், பொருளியல் சுரண்டல், விரிவாதிக்கக் கொள்கை என்பவை அடுத்த நிலையில் முகாமை பெறுகின்றன. ஒரு சிக்கலை ஒற்றைப் பரிமானத்தில் மட்டும் புரிந்து கொள்வது நாம் ஏமாந்து போவதற்கு வழிவகுக்கும். அதன் பன்மைத் தன்மையைப் பார்க்க வேண்டும். அதே வேளை அச்சிக்கலின் அடிப்படைக் கூறை அடையாளம் காண வேண்டும். அவ்வாறு அடையாளம் காணாவிடில் கவனக்குவிப்பு இருக்காது; கவனச்சிதறல் ஏற்படும். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக் குரலை நசுக்குவது இந்திய அரசின் அடிப்படைக் கொள்கை. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் நடத்தும் விடுதலைப் போராட்டங்களை படை கொண்டு தாக்குகிறது. இந்திய அரசின் உயிர் "இந்தியத் தேசியம்" என்ற புனைவு தேசியத்தில் இருக்கிறது. அதனால் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக் குரல் சன்னமாக எழுந்தால் கூட, இறையாண்மைக்கு ஆபத்து, ஒருமைப்பாட்டிற்கு ஊறு என்று இந்திய அரசும் அதன் கங்காணி மாநில அரசுகளும் ஊளையிடுகின்றன.


    இது இந்திய அரசின் - அதாவது இந்தியப் பெருமுதலாளிகள், பார்ப்பனர்கள், இந்தி ஆதிக்க ஆற்றல்கள் ஆகிய ஆளும் வர்க்கத்தின் பொதுக்குணம். இதிலும் குறிப்பாக தமிழ் இனத்தை, எப்போதும் ஐயத்திற்குரிய பகை இனமாகவே இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள்பால் அது கொண்டுள்ள இதே "உறவைத்" தான் ஈழத்தமிழர்பாலும் கொண்டுள்ளது.


    ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, தனிநாட்டுக் கோரிக்கை என மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் போராடித் தனித்தன்மையை நிலை நாட்டி வருகிறார்கள். ஆரியர்கள் தங்களின் மொழி, மெய்யியல், புராணங்கள், இதிகாசங்கள், வர்ணாசிரமப் பழக்க வழக்கங்கள் என்பனவற்றைத் தமிழர் மீது தொடர்ந்து திணித்து ஓரளவு வெற்றி கண்டாலும், தமிழர்களில் பலர் அவற்றை அந்தக் காலத்திலிருந்து எதிர்த்து, தனித்தன்மையை நிலைநாட்டி வந்துள்ளார்கள். ஆரிய மொழியான சமஸ்கிருதத்தின் துணையின்றி மட்டுமல்ல
அதைப் புறங்கண்டு நிலைத்த மொழி இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ் மட்டுமே!


    இதனால் ஆரியர்க்கும் அவர் வழிவந்தோர்க்கும், தமிழர்கள் மீது எப்போதும் பகை உணர்ச்சியும், ஐயுறவும் இருந்து கொண்டே உள்ளது. இந்தியாவின் நில-அரசியலுக்குத் துணை நிற்போம் என்றும், இந்தியக்கடலில் இந்தியாவின் காவல்
அரணாக விளங்குவோம் என்றும் விடுதலைப்புலிகள் திரும்பத் திரும்ப உறுதி கூறினாலும் இந்திய அரசு அதை ஏற்கவில்லை. சிங்களர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

 

    காவிரி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய உரிமைச் சிக்கல்களில் தமிழ்நாட்டிற்கு எதிராக உள்ள இனங்களுக்கு இந்திய அரசு பக்கத் துணையாக செயல்படுகின்றது. பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, உச்சநீதிமன்ற, நடுவர்மன்றத் தீர்ப்புகளின்படியோ, வரலாற்று ஞாயத்தின்படியோ ஆதரவாக அது இல்லை. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது. தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப்படை சுட்டுக் கொல்லத் துணை நிற்கிறது.


    இந்தப் புரிதலோடுதான் தமிழ்நாட்டில் புதிய தலைமை எழ வேண்டும். தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் வரையறுப்பு தமிழர்க்கான மாற்று அரசியல் கோட்பாடாக வேண்டும். எமது தேசிய மொழி தமிழ்; எமது தேசிய இனம் தமிழர்; எமது தேசம் தமிழ்த்தேசம்; இறையாண்மையுள்ள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு! இதுவே தமிழ்த்தேசியம்! தமிழ்த் தேசியச் சுடர், புதிய மாற்று அரசியலுக்கு வழிகாட்ட வேண்டும். அந்த வெளிச்சத்தில் தமிழர்க்கான அரசியல், பொருளியல், சமூகவியல் கொள்கைகளை வகுக்க வேண்டும். சங்க காலத்திலிருந்து வலியுறுத்தப்படும் தமிழர் அறம், உணவையும் உரிமையையும் பிறரோடு சமமாகப் பகிர்ந்து கொள்வதை வலியுறுத்துகிறது. மார்க்சிய நிகரமை, பெரியார் – அம்பேத்கர் வழிகாட்டிய சமூகநீதி ஆகியவை தமிழர் அறம் என்ற அடித்தளத்தில் நிற்கக் கூடியவை. அடைய வேண்டிய இலக்குகள் குறித்த வரையறுப்பு, குழப்பமில்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் மீண்டும் ஈகங்கள் விரையமாகும்.


    இப்பொழுது ஈழத்தமிழர்கள் உயிர்காக்க தமிழ்நாட்டில் இதுவரை 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். பலர் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், மற்ற சட்டங்கள் கீழ் சிறைப்பட்டுள்ளனர். பலர் காவல்துறையினரின் தடியடிக்குள்ளாகி காயம்பட்டனர்; பலர் காவல்நிலையங்களில் அடைக்கப்பட்டனர். தமிழகமெங்கும் பலமாதங்களாக ஈழத்தமிழர்க்காகப் போராட்டங்கள் தொடர்கின்றன. பரப்புரைகள் நடக்கின்றன. அச்சுப்படிகள் கோடிக்கணக்கில் வந்து குவிகின்றன. குறுந்தகடுகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் எண்ணி மாளாது. கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என படைப்புகள் பற்பல வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் முதலானோர் ஈழத்தமிழர் இன்னுயிர் காக்கும் போராட்டங்களில் துடிப்போடு ஈடுபட்டுள்ளார்கள். "பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்" என்பது பழமொழி. பதவிப்பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பது புதுமொழி. ஈழத்தமிழர்க்காகப் போராடிக் கொண்டிருந்த கட்சிகள் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எதிர் எதிர் முகாம்களுக்கு ஓடிவிட்டன. இனத்துரோக தி.மு.க. தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சேர்ந்துள்ளது. ம.தி.மு.க., இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சி, பா.ம.க. ஆகியவை இன எதிரியாக உள்ள செயலலிதா தலைமையில் கூட்டணி சேர்ந்துள்ளன.

 

    இக்கட்சிகளைத் திருத்த முடியாது. இவை திருந்தவும் மாட்டா. தலைகீழாகத் தொங்குவதால் வவ்வால்களுக்கு வலிக்காது. அதில்தான் அதன் சுகம். தேர்தல் சூதாட்ட அரசியலைப் புறந்தள்ளி, தமிழ்த் தேசியப் போராட்ட அரசியலை முன்னெடுப்பதே உண்மையான தமிழ் இன உணர்வாளர் கடமையாகும்.


    அவ்வாறான ஒரு தமிழ்த் தேசிய அமைப்பை வலுப்படுத்த வேண்டிய நேரமிது. ஆனால், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், அவரவர் ஆர்வத்திற்கேற்ப தனித்தனிக்குழுக்களாகச் செயல்பட முனைந்துள்ளனர். இப்போக்கைத் தவறென்று கூற முடியாது. இம்முனைப்பில் எச்சரிக்கை தேவை.
வரையறுக்கப்பட்ட இலக்கில்லாமல், அப்போதைய சூழல், ஆர்வம் ஆகியவற்றை நம்பி இயக்கம் தொடங்கினால் அது வளர்வதும் நிலைப்பதும் கடினம்.


    பல்வேறு குழுக்களாகப் பல்கித் தங்களுக்குள் உரசியும் மோதியும் இன உணர்வு ஆற்றல்கள் ஒருங்கிணைக்கப்படாமல், காட்டாற்று வௌ;ளம் போல் விரைவில் காணாமல் போய்விட வாய்ப்புண்டு. இவ்வாறு காணாமல் போவதைத்தான் தேர்தல் கட்சிகள் எதிர்பார்க்கின்றன. குளத்தை இறைத்துப் பருந்துக்கு விட்டது போல் ஆகிவிடும். ஓர் ஊரில் அனைவரும் திரண்டு மீன்பிடிக்கக் குளத்து நீரை, இறைத்து வெளியேற்றினார்கள். அதன்பின் மீன்பிடிக்கப் போகும் போது அவர்களுக்குள் குழுச்சண்டை வந்துவிட்டது.


    எந்தத் தெருவுக்கு எவ்வளவு பங்கு மீன் கொடுப்பது என்பதில் சண்டை வந்து விட்டது. ஊர் மக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். வானத்தில் வட்டமிட்ட பருந்துகள், சேற்றில் கிடந்த மீன்களைக் கொத்திக் கொத்தித் தின்றன. அது போல் ஆகிவிடக்கூடாது, இப்பொழுதுள்ள எழுச்சி. தேர்ந்து தெளிந்து, ஆழ்ந்து அகன்று செயல்பட வேண்டிய நேரமிது. சரியான உட்கூறுகளைக் கொண்ட தமிழ்த் தேசியச் சுடர் நம் அனைவர்க்கும் சரியாக வழிகாட்டும்.

 


  தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - அறிவிப்பு


    இப்பொழுதும் எங்கள் புழக்கத்தில் "கண்ணோட்டம்" என்ற பெயர் தான் உள்ளது. 1986 ஆம் ஆண்டு அது தொடங்கப்பட்டது. 1993 இல் இதழ் பதிவு செய்யப்பட்ட போது கண்ணோட்டம, தமிழர் கண்ணோட்டம் ஆனது. இப்பெயர் மீது இப்பொழுது வழக்கு நடக்கிறது. இதனால் 2008 மே முதல் புதிய "தமிழர் கண்ணோட்டம்" என்ற பெயரில் வந்தது.


    வழக்கு இன்னும் முடியவில்லை. புதிதாகப் பதிவுக்கு விண்ணப்பித்தோம். "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்" என்ற பெயர் இந்திய இதழ்ப் பதிவாளரால் ஏற்கப்பட்டு, சென்னை எழும்பு+ர் மாநகரக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    இதுவும் ஒரு நன்மைக்கே! இலட்சியத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் இதழுக்குப் பெயர் கிடைத்துள்ளது. முதலில் தட்டச்சு இதழாக வந்தது. பின்னர் உருட்டச்சு இதழாக வந்தது. அப்போது அதன் விலை 0.50 காசு. ஓர் இலட்சியம், அதற்கான மெய்யியல், அவற்றிற்கான ஓர் அமைப்பு என்ற இம்மூன்றும் சேர்ந்து "கண்ணோட்டத்தை" இயக்குகின்றன.


    தமிழர்கள் மீதும் சமூக அறிவியல் மீதும் அக்கறையுள்ள ஆற்றல்மிகு அறிவாளர்கள், பாவலர்கள், இளைஞர்கள் பலரும் கண்ணோட்டத்தில் எழுதுகிறார்கள். விரிவடைந்து கொண்டே வரும் வாசகப் பரப்பு, இதழை வாரி அணைத்துக் கொள்கிறது. இயக்கத் தோழர்களும், ஆதரவாளர்களும் எண்ணிப் பார்க்காத இடங்களுக்குகெல்லாம் தாளிகையைக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். இதழ் ஆக்கத்தில் இளம் தோழர்களின் உழைப்பு எடுப்பானது.


    எத்தனை இருந்தாலும் இழப்பில்லாமல் கண்ணோட்டத்தை நடத்த முடியவில்லை. இன்னும் பெரும் எண்ணிக்கையில் இதழ் விற்பனை பெருகினால் தான் இழப்பில்லாத நிலை வரும். ஓரளவு ஈடுகட்டும் நோக்கத்தில் விலையைப் பத்து ரூபாயிலிருந்து பதினைந்து ரூபாய் ஆக்க முனைந்தோம். தோழர்கள், இந்த அளவு உயர்த்தக் கூடாது என்றார்கள். பன்னிரண்டு ரூபாயாக விலையைக் குறைத்துள்ளோம். இதழை நடத்த விற்பனைத் தொகை மட்டுமே போதாது. நன்கொடைகள், அன்பளிப்புகள், வழங்குவோர் உதவி பெருந்துணையாக உள்ளது. உங்கள் அன்போடும் அரவணைப்போடும். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் வீறு நடை போடும். நன்றி.

 

- ஆசிரியர்.

1 comment:

  1. namathu ithal matra vara,matha ithalkalaipol yelithaka yella kadaikalilum kidaikumpadi seiyunkal.... sendra ithalukaka mikavum siramapatean... sa.karthikeya,(idainilai aasiriyar)puliangudi 627855 nellai mavatam.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.