ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஈழம் : ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும் - ம.செந்தமிழன்

ஈழம் : ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும்
ம.செந்தமிழன்

தமிழீழ விடுதலையின் நான்காம் போர் 19/5 வேதனைகளுடன் முடிந்த பிறகு, தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இடையில் புதியவகை ‘போதகர்கள்’ புறப்பட்டிருக்கிறார்கள்.



‘ஒற்றுமையுடன் இருப்போம்!

ஆயுதப் போராட்டம் வேண்டாம்.

அரசியல் போரே ஒரே வழி

இராஜதந்திர நகர்வுகளே தீர்வு தரும்!’



ஆகியவை இந்தப் புதிய போதகர்களின் மந்திரங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முதல் நிலைத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற சிங்கள இந்திய உளவுத் துறைகளின் பரப்புரைகளை மறுத்துரைக்காமல் அல்லது அவை உண்மையாகவே இருந்தாலும் அந்த சரிவுகளிலிருந்து போராட்டத்தை மீட்டு எடுத்து வழி நடத்தும் முயற்சிகளில் இறங்காமல் மேற்கண்ட மந்திரங்கள் சில பிரமுகர்களால் ஓதப்படுகின்றன.



தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிரிகளிடம் சரணடையச் செய்வதற்கான அனைத்துக் கூறுகளையும் இந்த நான்கு வரி மந்திரம் கொண்டுள்ளது. கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாபன் தொடக்கி வைத்த இந்தச் சரணாகதி மதம் புலம்பெயர் நாடுகள் கடந்து தமிழகத்திலும் வேர் பிடிக்க நுழைந்திருக்கிறது. ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்!’ என்ற சொற்றொடரின் பொருள் என்ன? இந்த அழைப்பு யாரை நோக்கி விடுக்கப்படுகிறது? இந்தச் சூழலில் இந்த அழைப்பின் தேவையும் நோக்கமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடினால் சரணாகதி மதத்தின் ‘தத்துவம்’ புரியும்.



தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெடிய வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தமிழீழ மக்களின் அறுதிப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு தேசம் ஓர் இயக்கம் ஒரே நோக்கம் - அது ஈழ விடுதலை, என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்ட கருத்து. ஆகவே, ‘ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோள் ஈழத் தமிழர்களுக்குத் தேவைப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைவரும், தமிழீழ ஆதரவுப் போராட்டங்களில் எந்தக் காலத்திலும் ஒன்றுபட்டுத்தான் நிற்கிறார்கள்.



நடந்து முடிந்த ஈழப் பேரவலத்தைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் சிறு உணர்வாளர் குழுக்களும் முரண்பட்டு மோதிக் கொள்ளவில்லை. மாறாக, சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு இலக்கு நோக்கியே செயல்பட்டார்கள். 19/5க்குப் பிறகான தமிழீழ ஆதரவு அரசியற் செயல்பாடுகளில் சில முரண்கள் தமிழ்த் தேசிய இயக்கங்களிடையே முதன்மைப் படுத்தப்படுகின்றன.



• தமிழ்த் தேச விடுதலையும் தமிழீழ விடுதலையும் ஒருங்கிணைந்த புரட்சிகர நடவடிக்கைகளாக அணுக வேண்டும்.

• இந்தியாவைத் தமிழினம் தமது பகை சக்தி என்று புரிந்து கொண்டு அதனடிப்படையிலேயே எதிர்கால இனவிடுதலைப் போராட்டத்தைத் திட்டமிட வேண்டும்.

- இவை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைப்பாடுகள்.

• தமிழீழ விடுதலையே முதன்மையானது. தமிழ்த் தேச விடுதலை இரண்டாம் கட்டத்திற்குத் தள்ளப்படவேண்டியது.

• இந்தியாவைத் தமிழீழ அரசியலின் நேச சக்தியாக மாற்றும் வகையில் அணுக வேண்டும்.

- இவை தமிழர் தேசிய இயக்கத்தின் நிலைப்பாடுகள். இவை தவிர வேறு சில முரண்கள் இருப்பினும், இன்றைய அரசியல் தளத்தில் விவாதப் பொருட்களாக இருப்பவை இவ்விரண்டு முரண்கள் மட்டுமே. இந்த கோட்பாட்டு மாறுபாடுகள் இருப்பதால், த.தே.பொ.க. வும், த.தே.இ.யும் மல்லுக்கு நிற்கவில்லை. அவரவர் தளங்களில் இவ்வியக்கங்கள் தமிழீழ விடுதலை தொடர்பான பணிகளை இடையறாது மேற்கொண்டு வருகின்றன. இம்முரண்கள் தவிர, தமிழகத்தில் ஈழவிடுதலையை ஆதரிப்போர் இடையில் ஈழவிடுதலை குறித்த பெரிய முரண்கள் ஏதுமில்லை!

‘நாம் தமிழர்’ என்ற பெயரில் கடந்த 18ஆம் நாள் மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ஆகியோர், ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்! இந்த வேண்டுகோள் யாருக்கு விடுக்கப்படுகிறது? கட்சித் தமிழன் என்றால்… தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதா ‘நாம் தமிழர்’ கொண்டுள்ள விருப்பம்.?

ஆம் எனில் அது போகாத ஊருக்கு வழி தேடும் முயற்சி. ஆனால், அம்மாநாடு வலியுறுத்திய செய்தி, தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் கட்சிகள், இயக்கங்கள் தனித்துச் செயல்படுகின்றன.. அவை ‘நாம் தமிழர்’ என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்!

செல்வராசா பத்மநாபனும் புலம்பெயர் தமிழர்களிடையே ‘ஒன்றிணைவோம்’ என்றுதான் பரப்புரை செய்கிறார். இவர் வேண்டுகோள் விடுப்பது யாருக்கு? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டு பல்லாண்டு காலமாக ஒன்றிணைந்து செயல்படும் ஈழத்தமிழர்களிடத்தில்! கே.பி. யின் வேண்டுகோளின் உண்மையான பொருள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஒதுக்கிவிட்டுத் தன் தலைமையின் கீழ் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்பதே!

தமிழ்நாட்டில் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கோட்பாட்டுக் குடையின் கீழ் ஏற்கெனவே திரண்டு நிற்கும் பெருந்திரளை நோக்கி ‘ஒன்றுபடுங்கள்’ என்று ‘நாம் தமிழர்’ அறைகூவல் விடுப்பதற்கும் கே.பி.யின் அழைப்பிற்கும் அடிப்படையான ஒற்றுமைகள் உள்ளன.

கே.பி. முன்வைக்கும் அணுகுமுறைகள்:

தமிழீழ விடுதலைக்கான போராட்டம் இனி அரசியல் வழியில் மட்டுமே முன்னெடுக்கப்படும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ‘வன்முறை’ வழிகள் இனி பலன் தராது. இந்திய சிங்கள அரசுகளுடன் நல்லுறவின் அடிப்படையில் தமிழர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பெற வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்றரை இலட்சம் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கவனமாகச் செயல்படவேண்டும். (இவை தவிர ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைப்பதும் இத்தலைப்பின் கீழ் அடங்கும். ஆயினும் இத்தலைப்பு இக்கட்டுரையின் எல்லைக்கு வெளியே இருப்பதால் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.) ‘நாம் தமிழர்’ மாநாட்டில் இதே அணுகுமுறைகளை வழிமொழியும் கருத்துகளே பேசப்பட்டுள்ளன.

அருட்த்தந்தை ஜெகத்கஸ்ப்பர் : ‘தி.மு.க., அ.தி.மு.க, பா.ம.க, ச.ம.க., வி.சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அனைத்துச் கட்சிகளும் தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும்’.

‘மூன்றரை இலட்சம் தமிழர்களை வதை முகாம்களிலிருந்து மீட்பதற்காக, ராஜபக்சே காலில் கூட விழத் தயார்’.

இவை தவிர அம்மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்தியலும் ‘இந்திய அரசிடம் இணங்கிப் போவது, எந்த அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளாமலிருப்பது குறிப்பாக தி.மு.க.வுடன் சுமூக உறவு பேணுவது என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. மாநாட்டில் உரையாற்றிய பலர் இந்த அடிப்படையிலேயே பேசினர். திரைப்பட உதவி இயக்குனர்கள் நடத்திய நாடகத்தில், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை விமர்சிக்கும் காட்சி ‘நாம் தமிழர்’ மாநாட்டில் நீக்கப்பட்டது.

‘ஒன்றிணைவோம்’ என்ற அழைப்பு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்துவதற்காக அல்ல, எதிரிகளிடம் சரணடைவதற்காகத்தான் என்பதை தமிழீழ அரசியலில் கே.பி.யின் செயல்பாடுகளும் தமிழக அரசியலில் ‘நாம் தமிழர்’ மாநாடும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

ஒட்டுக் குழுக்களின் ‘ஒற்றுமை யுணர்வு’!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாபெரும் இடர்களைத் தோற்றுவித்த ஒட்டுக் குழுக்கள் எப்போதும் முன்வைத்த மந்திரம் - ‘ஒன்றுபடுவோம்’ என்பதே. தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் இந்தச் சதிகார ‘ஒற்றுமை’ குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போதைய ‘ஒன்றிணை வோம்’ மந்திரத்தின் பின்னாலிருக்கும் சதிவலையை உணர வேண்டிய அவசியம் இருப்பதால், விடுதலைப் புலிகளின் கடந்த கால அனுபவப் பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

"தனித்து நின்று போராடி தமிழீழம் காணவேண்டும் என்ற இறுமாப்போடு நாம் இயங்கவில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை வரித்துக் கொண்ட சகல விடுதலை அமைப்புகளும் எமது பொது எதிரியை எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதே எமது ஆவல்.

"…நாம் ஒற்றுமையை வரவேற்கவே செய்கிறோம். ஒற்றுமையின் தேவையை உணர்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமையானது தமிழ் ஈழப் புரட்சி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட அந்நிய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவோ, அன்றி பிற்போக்கு சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் நெருக்குதல் காரணமாகவோ, அவசரப்பட்டுச் சமைத்த சாம்பார் ஒற்றுமையாக அமைவதை நாம் விரும்பவில்லை.

"…நாம் விரும்புவது உண்மையான, நிரந்தர ஒருமைப்பாட்டையே. இந்த ஒற்றுமையானது புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்பும் இலக்கில், வரலாற்றுப் போக்கினை உணர்ந்து கொண்ட தெளிவில், புரட்சிகர இலட்சியங்களிலிருந்து வழுவாத உறுதிப்பாட்டில், ஆழமான சகோதரத்துவப் புரிந்துணர்வில் புரட்சிகர சக்திகள் மத்தியில் ஏற்பட வேண்டிய ஒன்றாகும்".

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் - இதழ் - ஏப்ரல் 85)

ஈபிஆர்எல்எஃப், டெலோ, ப்ளாட், ஈரோஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சூழலில், இக்குழுக்களில் பெரும்பான்மை யானவை இந்திய அரசின் வளர்ப்புப் பிள்ளைகளாக வலம் வந்த நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழீழ மக்களை மட்டும் நம்பி இயங்கினர். பிற ஆயுதக் குழுக்கள் தமது இந்திய எஜமானர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து செயல்படாதவர்கள். அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் எதேச்சாதிகாரக் குழுவினர்’ என்று பரப்புரை செய்தன. இந்தப் பரப்புரைக்குப் பதில் தெரிவிக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியே மேலே கண்டது. இது தொடர்பான விவாதங்கள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் மிக ஆழமாகவும் நேர்மையாகவும் மேற் கொள்ளப்பட்டன. விளைவாக, 1985 ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O)

3. ஈழப்புரட்சி அமைப்பு (E.R.O.S)

4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F)

ஆகிய நான்கு அமைப்புகளும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டன.

1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும் அடக்கு முறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறைமையையும் வென்றெடுத்தல்.

2. இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுகின்ற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத்திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரத் தாய் நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்

5. உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பு+ரணமாக விடுவித்து, அணி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்

- இவையே ஒருங்கிணைப்பிற்கான அடிப்படைக் கோட்பாடுகள்.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 85)

இந்த ஐந்து கோட்பாடுகளில் ஒன்றிலிருந்தும் வழுவாமல் இன்று வரை விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இதே உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பிற மூன்று குழுக்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுக்குழுக்களாக மாறியதை வரலாறு உணர்த்தியுள்ளது. ‘ஒன்றிணைவு’ குறித்து அதிகமாகப் பேசிய அனைத்து ஆயுதக் குழுக்களும் விடுதலைப் போருக்கு எதிரான முகாம்களில் பதுங்கியிருந்த படிதான் செயல்பட்டன.

ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் ஆசியோடு தமிழகத்தில் தங்கிக் கொண்டு, அனைத்துவிதச் சீரழிவுகளுக்கும் ஆட்பட்டு, புரட்சிகர வசனங்களைப் பத்திரிகைகளில் எழுதுவதன் வழி மட்டுமே தமது ‘விடுதலைப் போரை’ நடத்திக் கொண்டிருந்தன". விடுதலைப் புலிகள் இவர்களை, ‘காகிதப் புரட்சியாளர்கள்’ என்று அழைத்தனர். ஆனால், இந்த ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் செய்த ஒரே பரப்புரை, ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைய மறுக்கிறார்கள்’ என்பதுதான்!

ஆக, ‘ஒன்றிணைதல்’ என்ற சொல்லின் பின்னே அன்று முதல் இன்றுவரை ‘இந்திய ஏகாதிபத்தியத்தின் சதிகார முகம்’ ஒளிந்து கொண்டுள்ளது. கே.பியும், ‘நாம் தமிழர்’ அமைப்பும் வலியுறுத்தும் ‘ஒற்றுமை’க்கு என்ன கோட்பாட்டு நிபந்தனைகள் உள்ளன?

தனித் தமிழீழம் அமைய வேண்டும் - என்பதை இவ்விரு முகாம்களும் பேச்சளவில் ஒத்துக் கொள்கின்றன. ஆனால், அதைச் சாதிப்பதற்கான செயல்திட்டம் என்ன என்பதை ஆராயும் போதுதான் இவர்களின் சொல்லடுக்குகளுக்குப் பின்னால் உள்ள உண்மை முகங்கள் தெரிகின்றன.

இந்திய அரசோடு நல்லுறவு பேணிக் கொண்டு, தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, ச.ம.க, பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, ராஜபக்சேயின் காலில் விழுந்தாவது அரசியல் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்து இராஜதந்திர வழியில் தனித் தமிழீழம் அமைக்கப் போகிறார்கள்!

இவ்வளவு ‘எளிய வழிகள்’ இருக்கும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 35 ஆண்டுகள் சமர் புரிந்தார்கள் என்று வியக்க வைக்கும் செயல்திட்டங்கள் ‘இவை’! எதிரிகளிடம் சரணடைந்து விடக்கோரும் திட்டம் இது. எல்லா சரணடைவுகளுக்கும் ‘ஒன்றிணைவு’ என்ற சொல்லே மூல மந்திரம்!

இதே போன்ற சூழலை முப்பது ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட தலைவர் பிரபாகரன் பின்வருமாறு எழுதியுள்ளார், ‘ஒற்றுமை என்ற உயரிய நோக்கினை மக்களை ஏமாற்றும் வெறும் பிரசார சாதனமாகக் கையாள்வது மிகவும் கீழ்த்தரமான அரசியற் சந்தர்ப்பவாதமாகும்’ (விடுதலைப் புலிகள் இதழ் - ஏப்ரல் 85)

ஒரு தேசிய இனத்தின் விடுதலையைக் கெஞ்சிப் பெற முயல்வது, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் வாங்க நினைப்பது, போராட்டமே நடத்தாமல் அடைய முனைவது ஆகிய குணநலன்கள் கோழைத்தனத்தின் தன்னலத்தின் வெளிப்பாடுகள். 19/5க்குப் பிறகு மேலும் வீறு கொண்டு எழுந்து போராட வேண்டிய தமிழினம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது.

தமிழ்த்தேசிய அரசியலைக் களமாக முன்வைக்கும் த.தே.பொ.க., த.தே.வி.இ. உள்ளிட்ட கட்சிகளும், தமிழர் உரிமை என்றளவில் வீரியமாகச் செயல்படும் பெ.தி.க., தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட கட்சிகளுமே தமிழீழ விடுதலை அரசியலை மீண்டும் தமிழகத்தில் களமேற்றியுள்ளன. இவையே ‘அமைப்புகள்’ என்றளவில் தொடர்ந்து களத்தில் நிற்பவை. ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் வெற்றிகரமாக இயங்கும்போது அதற்கு ஆதரவாக வீரர்கள், கோழைகள் அனைவரும் குரல் எழுப்புவர். அவ்வியக்கம் சரிவைச் சந்திக்கும்போதுதான் எந்தக் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது, எது கரைந்து காணாமல் போகிறது என்பதை அறிய முடியும். வீரம் - கோழைத்தனம் ஆகிய இரண்டும் இரு இயல்புகள். ஒரு மனிதரின் கோழைத்தனம் குறித்து நாம் குறைபட இயலாது. ஆனால் தன்னலம் ஆபத்தானது. அது நல்லவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

‘சரணாகதி மதத்தவர் தம்மளவில் ஒதுங்கிக் கொண்டால், அது குறித்து நமக்கு விசனம் தேவையில்லை. அவர்கள் ராஜபக்சே, சோனியா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் கால்களில் விழுவதை நாமும் வேடிக்கை பார்க்கலாம். ஆனால், ‘ஒற்றுமை’ என்ற போர்வையில் இனவிடுதலைப் போராட்டத்தில் உள்ள அனைவரையும் காலில் விழ வைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தால், அது ஆபத்தானது.

"(எமது பாராளுமன்ற அரசியல்வாதிகள்) எமது மக்களது தேசியப் பிரச்சினையின் முழுவடிவத்தினையும் அதற்கான நிரந்தரத் தீர்வு என்ன என்பதையும் இந்திய அரசிடமோ சிங்கள அரசிடமோ உலகத்திற்கோ தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கவில்லை. தனியரசு தவிர்த்த சலுகைகள் பெறுவதற்காகவே இவர்கள் கொழும்புக்கும் டெல்லிக்கும் ராஜதந்திரக் காவடி எடுத்து வந்தனர். ஒரு தேசிய இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு தலைமை, அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையிலும் அதற்கான அரசியற் தீர்விலும் குழம்பி நின்று, ‘மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கட்டும்’ என்ற மதி நுட்பமற்ற தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்து வந்ததாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டது.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 84)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் சந்தித்துக் கெல்லி எறிந்த கருத்துதான் ‘சரணாகதி மதம்’ என்பது. நபர்கள் மாறியுள்ளனர். கருத்து ஒன்றுதான் - என்பதை மேற்கண்ட தலையங்க வரிகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. புலிகள் அடையாளம் காட்டிய ‘ராஜதந்திர காவடி’யைத் தமிழகத் தமிழ்த்தேசியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்தச் சூழல் மிகவும் சிக்கலானது. போராடிய இயக்கம் இன்று உறங்கு நிலையில் உள்ளது. தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு இனமே அல்லாடுகிறது. மூன்றரை இலட்சம் மக்கள் சொந்த மண்ணில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். எதிரிகளோ களியாட்டம் போடுகின்றனர். ஒட்டுக் குழுக்களின் பரப்புரைகளில் பிணம் தின்ற ஓநாய்களின் உற்சாக ஊளையைக் கேட்க முடிகிறது. எங்கும் வேதனை, சோகம், மன இறுக்கம், தவிப்பு, மனநோய்க்கு ஆளாகிவிடுவோமோ, மாரடைப்பு வந்து விடுமோ என்ற பதைப்பு!

ஆனால், இதுவும் ஒரு போராட்டச் சூழல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனவிடுதலைப் போர் நடக்கிறது என்பதன் அறிகுறிகள்தான் இவை. இத்தனை ஆண்டுகள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்டுப் பழகினோம். இப்போது பின்னடைவுகளை ஏற்க இயலவில்லை. வெற்றியின் களிப்பில் பங்குபெற்ற நம் அனைவருக்கும் இந்தப் பின்னடைவைச் சரி செய்யும் பொறுப்பும் கடமையும் உண்டு.

எந்தப் புலிகள் நம்மைப் புன்னகைக்க வைத்தார்களோ… அந்தப் புலிகள் முகங்களில் மீண்டும் புன்னகை பு+க்க வேண்டும். எந்தப் புலிகள் நமக்குத் ‘தமிழர்’ என்ற பெருமிதத்தை இறுமாப்பை மீட்டுத் தந்தார்களோ… அந்தப் புலிகள் மீண்டும் இறுமாப்படையச் செய்ய வேண்டும். இவையே போராடும் இனத்திற்குத் தேவையான குணங்கள்.

"சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும். தன்மானமிழந்து ‘தலைகுனிந்து’ வாழ வேண்டும். பயந்து பயந்து பதட்டத்துடன் வாழ வேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் இதழ் - மே 84)

இவையே தலைவர் பிரபாகரன் கடைபிடிக்கும் கோட்பாட்டு வரிகள். அவரோ, புலிகள் இயக்கமோ ஒரு போதும் ‘சரணாகதியை’ ஏற்றதில்லை. எதிரிகள் நமது இனத்தை அழிக்க முடிவு செய்துவிட்ட பிறகு, அவர்களிடம் சரணடைந்தாலும் மரணம்தான். திருப்பி அடித்தாலும் மரணம்தான். இவற்றில் இரண்டாவது வழியில்தான் விடுதலைக்கான வாய்ப்பு இருக்கிறது. வெற்றிக்கான சாத்தியம் இருக்கிறது.

‘சரணாகதி’ என்பது ஒரு இனத்தை அழித்தொழிக்கும் திட்டம் ஆகும். ‘சிங்களர்கள் கோபப்படும்படி எதுவும் செய்ய வேண்டாம்’ என்று தலைவர் கருணாநிதி கூறியதற்கும், கே.பி., ‘நாம் தமிழர்’ முன்வைக்கும் ‘ஒற்றுமை’ திட்டங்களுக்கும் பாரிய ‘ஒற்றுமை’ உள்ளது என்பதைக் கவனித்தால் நிலைமையை விளங்கி்க் கொள்ளலாம்.

‘சரணாகதி மதத்தவர்’ அனைவரும் எழுச்சி மிக்க வசனங்கள் பேசுகின்றனர். தலைவர் பிரபாகரன் குறித்து சிலாகிக்கின்றனர். இவையெல்லம், புரட்சிகர அடையாளங்கள் ஆகா. மாறாக, நடவடிக்கைகள் மட்டுமே அடையாளத்தைத் தீர்மானிக்கும். இயேசு ஒரு கலகக்காரராக வாழ்ந்தவர். மத நிறுவனங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜெருசலேம் நகருக்குத் தம் சீடர்களுடன் சென்ற இயேசு தேவாலயத்தின் முற்றத்தில் வணிகர்கள் கடைவிரித்திருந்ததைக் கண்டு துணுக்குற்றார். அவ்வணிகர்களை அங்கிருந்து விரட்டுகிறார். புறாக்களை விற்பவனிடமிருந்து அப்புறாக்களைப் பறித்துப் பறக்க விடுகிறார். அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தைப் பார்க்கும் மதபோதகர்களை நோக்கி, ‘இவ்விடம் வழிபாட்டுக்கான இல்லம் என்று எழுதப்பட்டுள்ளது. நீரோ இதை வழிப்பறிக்காரர்களின் குகை யாக்கிவிட்டீரே’ என்றார். (மத்தேயு 21:13) இது மட்டுமல்லாது, மதத் தலைவர்களையும், பிரசாரகர்களையும் இயேசு மிகக் கடுமையாகச் சாடினார். மத்தேயு அதிகாரம் 23 முழுவதும் மதகுருக்கள் மீதான இயேசுவின் கடுஞ்சொற்கள் நிறைந்தது.

இயேசு இறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டான்டின் என்ற ரோம அரசன் தனது வர்க்க நலன்களுக்காக, கிறித்துவத்தை ஒர் ஆதிக்க வர்க்க மதமாகக் கட்டமைத்தான். இன்று தேவாலயங்கள் வணிகமயமாகிவிட்டன. மொத்த வணிகமும் இயேசுவின் பெயரால் நடக்கிறது. ‘நீங்கள் ஒருவரையும் பிதா என்று சொல்லாதீர்கள். பரலோகத்தில் இருப்பவரே உங்கள் பிதா’ என்றார் இயேசு. (மத்தேயு 23:9) இன்று கிறித்துவப் பாதிரியார்கள் அனைவரும் ‘பிதா’(Father) என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதுவும் இயேசுவின் முன்னிலையில்தான் நடக்கிறது. யு+த மதம் என்னென்ன பாவங்கள் செய்கிறது என்பதற்காக இயேசு ஒரு கலகக்காரராகப் போராடி கொல்லப்பட்டாரோ, அப்பாவங்களைக் காட்டிலும் அதிகமான பாவங்களை கிறித்துவம் புரிந்துவருகிறது - இயேசுவின் திருப்பெயரால்!

சமூக மாற்றத்திற்குப் போராடும் இயக்கம் சரியும்போது அதைச் சரிவிலிருந்து மீட்டு அதற்கு வலுவு+ட்டத் தவறினால், இதுபோன்ற விபரீதங்கள் தவிர்க்கவியலாதவை. இதே வழியில்தான் புலிகள் சரிந்த நிலையில், சரணாகதி மதத்தினர் புலிகளின் பெயராலெயே ‘ஆயுதப் போராட்டத்தை வன்முறை’ என்று அறிக்கை விடுகின்றனர். இதே போக்கில் சரணாகதி மதம் வளர்ந்தால், புலிகள் மீண்டு வருவதே இடர் நிறைந்ததாகி விடும். ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் இவர்கள் நமது போர்க்குணத்தை மழுங்கடித்து மண்டியிட்டு மனுப்போடப் பழக்கி விடுவார்கள்.

நமது மதிப்புக்குரிய இயக்குனர் சீமான் அவர்களும் "நாம் தமிழர்" பொதுக் கூட்டத்தில் ஜெகத் கஸ்பருடைய உரையின் சாரத்தை மறுத்துப் பேசவில்லை. மாறாக அவரும் இதே தொனியில் பேசினார் என்ற செய்தி நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இயக்குனர் சீமானை இந்த ஒரு பொதுக் கூட்டத்தின் பங்கேற்பைக் கொண்டு மதிப்பிட இயலாது. தமிழீழ விடுதலைக்காக அவர் புரிந்த ஈகங்கள் அதிகம். தமிழ் இளைஞர்களிடையே இனவுணர்வைத் தட்டியெழுப்பியதில் அவர் பங்கு அளப்பரியது. இயக்குனர் சீமான், தான் நிற்பது எதிர்ப் போராட்டக் களத்தில் என்பதை உணர வேண்டும். ‘ஒற்றுமை, சமரசம்’ ஆகியவை போராட்ட உத்திகள் என்று அவர் கருதினால் அது சரியல்ல. அவர் இந்நிலையபாட்டிலிருந்து மீள வேண்டும். அவர் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு அவர் உயிரினும் மேலாக மதிக்கும் தலைவர் பிரபாகரன் வெறுத்து ஒதுக்கிய நிலைப்பாடு என்பதை இக்கட்டுரையின் மேற்கோள் சான்றுகளே தெரிவிக்கும்.

"இறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழீழம் என்றோ ஒரு நாள் உதயமாவது திண்ணம். சமதர்ம சமூகமாக எமது நாடு வளம் கொழிப்பது திண்ணம். இந்நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையை நோக்கி வீறு நடை போடுவோமாக" - இவையும் தலைவர் பிரபாகரன் எழுதிய வரிகளே!
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ், 2009 ஆகஸ்ட்டு)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.