ஹைத்தி: ஏகாதிபத்தியத்தின் பிண அரசியல் - க.அருணபாரதி
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
கடுமையான நிலநடுக்கத்தால் குலைந்து போயுள்ளது, ஹைத்தி தீவு. கடந்த சனவரி 12ஆம் நாள், அத்தீவைக் குலுக்கிய 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களின் படி, சுமார் 1.5 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.
அந்நாட்டின் தலைநகரான, போர்ட் ஆவ் பிரின்ஸ் (Port – Au - Prince) நகரின் 8 மருத்துவமனைகள் நிலநடுக்கத்தால் நொறுங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பலர், தாம் இன்னும் தொட்டுக் கூடப் பார்க்காத நோயாளிகள் பலர் காத்துக் கிடக்கின்றனர் என்றும், பலர் இரத்தமின்றியும் உயிர்காக்கும் மருந்துகள் இன்றியுமே உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.
அந்நாட்டில், போதிய மருத்துவர்களும் மீட்புக் குழுவினரும் இல்லாததால் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான முழுகட்டமைப்புகளும் அந்நாட்டில் இல்லாததால், அந்நாடு சர்வதேச சமூகத்திடம் உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஹைத்தியின் இக்கோரிக்கையை பயன்படுத்தி, அங்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஒரு பெரும் பேரழிவு நடந்த இடத்தில், “மீட்புக்குழு” என்ற பெயரில் பிணங்களை தள்ளிவிட்டு, ஆதிக்கம் செலுத்தத் துணிந்திருக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். ஹைத்தி மேல் அமெரிக்காவிற்கு இருக்கும் இந்த ஆதிக்கவெறிக்கும் ஒரு வரலாறு உண்டு.
சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட தீவு ஹைத்தி தீவாகும். இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஒரு நாளைக்கு, வெறும் 2 டாலர்கள்(அதாவது ரூ.90) வருமானம் பெறுகின்றனர். 18ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு காலனியாக இருந்த ஹைத்தியில், கருப்பின மக்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்துள்ளன. கருப்பர்களின் அரசு என அமெரிக்கா உள்ளிட்ட வெள்ளை இனவெறி நாடுகளால் ஹைத்தி வர்ணிக்கப்படுவதும் உண்டு. கருப்பர்களை அடிமைகளாக்கி அவர்களது உழைப்பை ‘கருப்புத்தங்கம்’ என்றும் வெள்ளையர்கள் அழைத்து வந்திருக்கின்றனர்.
தொழில்மயமாவது என்ற பெயரில், வேகவேகமாக காடுகள் அழிக்கப்பட்டு. தற்பொழுது, வெறும் 2 விழுக்காடு காடுகள் மட்டுமே அங்கு எஞ்சியுள்ளன. இவற்றின் விளைவாக, இந்த இரு நூற்றாண்டிகளில் நடக்காத மிகப்பெரிய நிலநடுக்கத்தை அந்நாடு உணர்ந்திருக்கிறது.
1990களில் முதன் முறையாக சனநாயக வழியில் ஹைய்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜீன் பெட்ரான்ட் ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் மூலம் தூக்கியெறியப்பட்டார். ஜீன் பெட்ராண்ட் நாடு கடத்தவும் பட்டார். அப்போது அதிபர் பதவி ஏற்றிருந்தவர் பில் கிளிண்டன். 1994இல் ஹைய்திக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பியதும் இவரே. இன்று அவர் தான் ஹைய்தி நிலநடுக்கம் குறித்த தகவல்களை அமெரிக்க அரசிற்கு உடனுக்குடன் வழங்கும் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒபாமா அறிவித்துள்ள இன்னொரு பிரதிநிதி வேறு யாருமல்ல. ஈராக்கிலும் ஆப்கனிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அமெரிக்க மக்களாலும் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஜார்ஜ் புஷ் தான் அவர். இவர்கள் இருவரும் ஹைய்தியில் நடக்கும் நிவாரணப் பணிக்கான நிதி திரட்டும் அமைப்புகளுக்குத் தலைமை தாங்குவார்களாம். இந்த இருவர் நியமனத்திலிருந்தே, அமெரிக்காவின் நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைத்திக்கு, நிவாரணப் பணிகளுக்காக, பொது நிதியிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா 10 கோடி டாலர்கள் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு மாதம் ஒன்றிற்கு செலவிடப்படும் தொகையில் நூற்றிலொரு பங்கு இது. இது தவிர, ஜெர்மன் நாடு 2.2. இலட்சம் டாலர்களைக் கொடுக்கின்றதாம்.
அரசியல் நிலையற்ற தன்மை, சூறையாடப்பட்ட பொருளியல் என திக்குமுக்காடிய ஹைத்தியில் அவ்வப்போது உள்நாட்டுக் கலகங்கள் வெடிப்பதுண்டு. இதனால் ஐ.நா. பாதுகாப்புப் படைகள் சுமார் 12,000 பேர் அங்கு ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் இணைந்து பிற நாட்டு மீட்புக்குழுவினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தற்பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைத்திக்கு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளெல்லாம் உதவிகளையும், மீட்புக்குழுவினைரையும் அனுப்பி வந்த நிலையில், ஹைத்தியின் மிக அருகில் உள்ள அமெரிக்காவிலிருந்து ஆள் வரவில்லை. ஹைத்திக்கு மிக அருகில் உள்ள மியாமியிலும் பூர்ட்டொரீகொவிலும் அமைந்துள்ள அமெரிக்க தளங்களிலிருந்து கூட ஹைத்தியில் மீட்பு உதவிகளுக்கு யாரும் வரவில்லை. விசாரித்துப் பார்த்தப் போது, ஹைத்தியில் ‘பாதுகாப்புக் குறைபாடுகள்’ இருப்பதாக தெரிவித்தனர், அமெரிக்க பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகள். நிலநடுக்கத்தால் அந்நாட்டு அதிபர் மாளிகையே சிதறிக்கிடக்கும் நிலையில், அங்கு அமெரிக்கா எதிர்பார்க்கும் ‘பாதுகாப்பு’ இல்லையாம்.
நீண்ட யோசனைக்குப்பின், ஹைய்தி கடற்கரையை அமெரிக்கா அனுப்பிய, ‘கார்ல் வின்சன்’ (USS Carl Vinson) என்ற கப்பல் வந்தடைந்தது. நிவாரணப் பொருட்களும், மருத்துவர்களும் வந்திருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ஹைய்தி மக்களுக்கு, அதிர்ச்சியும் ஏமாற்றமுமே மிஞ்சியது.
அக்கப்பல், 19 ஹெலிகாப்டர்களை கொண்ட விமானம் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிய போர்க்கப்பல் எனத் தெரிந்தது. இவ்வளவு மனிதநேயமிக்க அமெரிக்க அரசின் அதிபருக்கு ‘நோபல் பரிசு’ கொடுக்கப்பட்டதை எண்ணி அம்மக்கள் தன் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான். நீண்ட யோசனைக்குப் பின், அக்கப்பலிலிருந்து 3 மருத்துவர்கள் இறங்கினர். அவர்கள் அமெரிக்கா சார்பாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளனராம் நாம் நம்பித்தான் தொலைக்க வேண்டும்!
இது தவிர 2000 பேரோடு, USS Bataan எனப்படும், தரையிலும் கடலிலும் சென்று தாக்கக்கூடிய அமெரிக்கப் போர்க்கப்பல் ஹைய்தியை நோக்கிப் புறப்பட்டுவிட்டது. இவற்றோடு, 82வது விமானப்படைப் பிரிவின் 3500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஹைய்தியில் களமிறங்கியுள்ளனர். முன்பெல்லாம் ஹைத்தி மீது ஆக்கிரமிப்பு செய்திட போர் புரிந்து அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும். இப்பொழுது அக்காரியத்தை நிலநடுக்கம் செய்து விட்டதால், அமெரிக்காவிற்கு ‘நல்வாய்ப்பாகி’ விட்டது.
ஆக மொத்தம், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் சேர்ந்த சுமார் 12,000 அமெரிக்க இராணுவத்தினர் ஹைய்தி தீவை நோக்கி குவிக்கப்படுகின்றனர். இவற்றோடு உலகை நம்ப வைக்க வேண்டும் என்ற கட்டாயத்திலோ என்னவோ 300 மருத்துவர்களையும் கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா.
23.01.10 அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளண்டன் ஹைய்தி அதிபர் ரேனே ப்ரேவல் ‘அழைப்பின்’ பேரில், அந்நாட்டுத் தலைநகரான போர்ட்-ஆவ்-பிரின்ஸ் நகருக்கு வருகை தந்தார். ஹைய்தியில் இறக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கும் அதிகாரங்களை வழங்கும்படியான சட்ட திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என அப்பொழுது அவர் வலியுறுத்தினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு நடக்கவிருக்கும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கான பங்கு என்ன என்பதும் குறித்தும் பேச்சுகள் நடந்தன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்கள் என எங்கும் சோகமயமான சூழலில் ஹைய்தி தலைநகரம் தத்தளித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், உலக உணவுத் திட்டத்தினர் (World Food Program - WFP) வழங்கும் நிவாரண உதவிகளை அம்மக்கள் பெறுவதற்குப் போட்டியிடுகின்றனர். இதனால், ஆங்காங்கு விநியோகித்தல் தொடர்பான சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. இவற்றைக் காரணம் காட்டி, நாடு சிச்கலான பாதுகாப்பற்றச் சூழலில் இருப்பதாக வர்ணித்தார், ஹைய்திக்கான அமெரிக்க இராணுவத் தளபதி கென் கீன். அதற்காகவே, இந்த இராணுவப்படைகள் வந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஹைய்தி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்தை அமெரிக்க இராணுவம் அதன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அங்கு வந்திருந்த பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் நாட்டு விமானங்கள் கூட தரையிறங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவசரகால மருத்துவமனையை தாங்கி வந்த பிரான்ஸ் விமானத்தை அமெரிக்க இராணுவம் தடுத்ததை, ஹைய்திக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் டிட்டியர் லீ பிரெட் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னார்ட் குஷ்நெர் ஆகியோர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பின்னர், இவ்வறிக்கை ஏனோ சில மணி நேரங்களில் திரும்பப் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 12 டன் மருந்துப் பொருட்களை கொண்டு வந்திருந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் விமானம், 3 முறை திருப்பி அனுப்பப்பட்டதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. செஞ்சிலுவை சங்க விமானம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறுகின்றனர். ‘அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த தீவிரச் சிந்தனை உயிர்களைக் காப்பாற்றுவதையும் தடை செய்கிறது’ என ‘இன்டர்வன்சியா’ Intervencion, Ayuday Emergencia எனப்படும் ஸ்பெயின் நாட்டு உதவிக்குழுவும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தது. இலங்கை முதல் துருக்கி வரை உதவியுள்ள தாம் இவ்வாறான செயல்பாடுகளை வேறெங்கும் எதிர் கொண்டதில்லை என்றும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.
ஹைய்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட, சின்னஞ்சிறிய நாடான கியூபாவிலிருந்து மட்டும் 344 மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்க, உலகையே ஆள்வதாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலிந்து வெறும் 300 மருத்துவர்கள் மட்டுமே வந்தனர். ஹைய்தி நிவாரணப் பணிகளுக்காக, தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Doctors without Borders) அமைப்பு மட்டும் 800 மருத்துவர்களை அனுப்பியுள்ள நிலையில், அமெரிக்காவின் எண்ணிக்கை வியப்பையும் அதிர்ச்சியையுமே தருகின்றது.
இழவு வீட்டில் ஆதிக்கம் செலுத்த முனையும், அமெரிக்காவின் இது போன்ற இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஒன்றும் புதிதானதல்ல. 1993ல் பஞ்சத்தால் சீர்குலைந்து போன சோமாலியாவில் நுழைந்து, மேலாண்மை செய்த “பெருமை” இவர்களையே சேரும். அமெரிக்காவின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு உலகெங்கும் உள்ள மனிதநேயர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியது கடமை.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
Leave a Comment