ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தி.மு.க.வும் சங்கரமடமும் - செஞ்சுடர் கட்டுரை!


தி.மு.க.வும் சங்கரமடமும் - செஞ்சுடர் கட்டுரை!

நடிகர் எஸ்.வி.சேகர் தமது 5600வது நாடகத்தைச் சென்னை நாரத கான சபாவில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் 7.05.2010 அன்று நடத்தினார். அந்நிகழ்வில் பேசிய கருணாநிதி, “இப்படிப்பட்ட எளிமையான மிகச் சுருங்கிய அளவில், விரைவில் ஒரு நாடகத்தைத் தொடங்கி, அதனை நிறைவு செய்து, அதிலே வருகின்ற நூற்றுக்கணக்கான காட்சிகள் அல்ல பத்துப் பதினைந்து காட்சிகளாயினும் அதிலே நூற்றுக்கணக்கான காட்சிகளிலே ரசிக்கின்ற கருத்துகளை மருந்து கேப்சூல் போல வைத்துக் கொடுக்கின்ற அந்தத் திறமையை நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு இன்றைக்கு எஸ்.வி.சேகரிடம் தான் காண்கிறேன்”, என்று விதந்து பாராட்டினார்.

“... தம்பி சேகருடைய நாடகத்தில் ஒரே மேஜை, ஒரே நாற்காலி, ஒரே சீன் என்ற அளவிற்கு ஒரே சங்கராச்சாரியார் படம். பெரியவர் படம் அந்தப்பக்கம். சின்னவர் படம் இந்தப்பக்கம். அதிலே மையங் கொண்டவர்கள் அதைப் பாருங்கள். இதிலே மையங்கொண்டவர்கள் இதைப் பாருங்கள் என்று அதே சங்கராச்சாரியார் தான் அடுத்தடுத்து வந்தது” என்றும் கருணாநிதி புகழ்ந்தார் - தினத்தந்தி, 8.05.2010.

எஸ்.வி.சேகர் ஆரியத்தில் ஊறியவர். அ.இ.அ.தி.மு.க.விலிருந்து விலகிய பின், பார்ப்பனர் முன்னேற்றக் கழகம் தொடங்கப் போவதாக அறிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்த போது, ‘காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திர சரசுவதியின் அறிவுரைப்படி அதில் சேர்ந்தேன்’ என்று சொன்னவர்.

இப்பொழுது, தி.மு.க.வில் சேர உள்ளார். இதற்கும் காஞ்சிப் பெரியவரின் அறிவுரை காரணமாக இருக்கலாம். ஏனெனில் செயேந்திர சரசுவதியுடன் கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமுண்டு. செயலலிதா ஆட்சியில் செயேந்திரர் கொலைக் குற்றச்சாட்டில் தளைப்பட்டு சிறையிலிருந்தபோது தாம் முதல்வராக இருந்திருந்தால் சங்கராச்சாரியார் சிறை செல்லும் நிலை வந்திருக்காது என்று கூறினார் கருணாநிதி. நாடகத்திற்கு முந்திய வேறொரு நிகழ்வில் பகிரங்கமாகவே மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் சேரும்படி சேகரை அழைத்தார். அதற்கு சேகரும் சேர்ந்து விடுகிறேன் என்று விடையிறுத்தார்.

தி.மு.க.வில் சேரும் முன்பே தி.மு.க. பொதுக்குழுவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். நாடகத்தில் வழக்கம் போல் சங்கராச்சாரியார் படம் மாட்டியுள்ளார். அதையும் ரசித்துக் கருணாநிதி பாராட்டியுள்ளார்.

பெரியார் கொள்கைகளின் பரப்புரைப் பீரங்கியாக விளங்கிய நடிகவேள் எம்.ஆர்.இராதாவுடன் எஸ்.வி.சேகரை ஒப்பிட்டுப் புகழ்கிறார் கருணாநிதி.

திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர் வர முடியாது, வரமாட்டார்கள் என்று இன்றைக்கும் பிதற்றித் திரியும் சிலர் தமிழ்நாட்டில் உள்ளனர்.

பார்ப்பனர்களை அண்டவிடாத திராவிடக் கட்சி எது? 

அ.இ.அ.தி.மு.க.வின் தலைமையே பார்ப்பனியக் கொள்கையில் உறுதியாக நிற்கும் பார்ப்பனப் பெண்மணி செயலலிதாவிடம் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல், செயலலிதாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார் ஆசிரியர் வீரமணி. அந்தக் கூத்தின் ஒரு பகுதியாக, அம்மையாருக்குச் “சமூக நீதி காத்த வீராங்கனை” என்ற பட்டத்தையும், பாரதிர வல்லத்தில் விழா நடத்தி வழங்கினார்.

பார்ப்பனரை அண்டவிடாத திராவிடம் எங்கே இருக்கிறது?

அ.இ.அ.தி.மு.க. பார்ப்பனத் தலைமையில் உள்ள கட்சி; தி.மு.க. சுயமரியாதைச் சுடரொளி கருணாநிதியின் தலைமையில் உள்ள அசல் திராவிட இயக்கம் என்று புனைந்துரைக்கும் போற்றிப்பாடிகள் பலர் இருக்கின்றனர்.

பார்ப்பனருக்கு இடஒதுக்கீடு கோருவதைத் தமது இலக்காகக் கொண்டு சங்கரமடத்தின் அறிவுரைப்படி செயல்படும் பார்ப்பன வெறியரைத் தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வதும், உறுப்பினர் ஆகும் முன்னே பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவரை அனுமதிப்பதும் தான் அசல் திராவிடமோ?

சமூகத்திற்கான கருத்துகளை மருந்து கேப்சூல் போல் கொடுப்பதில், எம்.ஆர்.இராதாவிற்கு நிகரானவர் எஸ்.வி.சேகர் என்று பாராட்டிய பின்னும், திராவிடம் பார்ப்பனியத்தின் பகை முகாம் என்று பேசினால், திராவிடத்தின் பச்சோந்தித்தனம் தான் வெளிப்படும்!

பார்ப்பன வகுப்பில் பிறந்தாலும் அத்தி பூத்தாற்போல், ஆயிரத்தில் ஒருவராய், பார்ப்பன ஆதிக்கத்தை, ஐயம் திரிபற எதிர்த்துப் பூணூலை அறுத்தெறிந்தவர்களை திராவிட இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால் நாம் அதைத் தவறு என்று சொல்லப் போவதில்லை.

பூணூலை அறுத்துவிட்டு வந்தவரா எஸ்.வி.சேகர்? பல ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.வின் பரப்புரை டமாரமாக வலம் வந்த தலைமைக் கழகப் பேச்சாளர், சிதம்பரம் செயவேல் என்ற பார்ப்பனர். அவர் பூணூலை அறுத்து விட்டு வந்த பகுத்தறிவாளரா? இல்லை.

தமிழர்களிடம் சங்ககாலம், திருவள்ளுவர் காலம், சித்தர்கள் காலம், வள்ளலார் காலம் எனத் தொடர்ந்து வரும் பார்ப்பன எதிர்ப்புணர்ச்சியை இன்றும் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவது தான் தி.மு.க.வின் இலட்சியம்.

அதன் ஓடும் பிள்ளையாகச் செயல்படுவது தான் ஆசிரியரின் திராவிடர்க் கழகம்.

திராவிடம் என்றால் அதில் பார்ப்பனர் சேர முடியாது என்று கற்பனைக் கதையளப்போர் இனியாவது உண்மை பேசினால் தமிழ் இனத்திற்கு நலம் சேர்க்கும். பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லை என்று தி.மு.க. ஒரு போதும் சொன்னதில்லை. பார்ப்பனரையும் பார்ப்பன எதிர்ப்பாளரையும் பயன்படுத்தி சொந்தப் பலன்களை அறுவடை செய்வது தான் தி.மு.க.வின் உத்தி.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2010 மாத இதழில் வெளியான கட்டுரை)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

1 comment:

  1. பார்பனரான ராஜாஜிஉடனும் p .ராமமூர்த்தி உடனும் சேர்ந்து பச்சை தமிழன் காமராஜை 1967 -இல் தோற்கடிக்கவில்லையா,வடவரும் பிராமணுருமான இந்திரவுடனும் சேர்ந்து மறுபடியும் பச்சை தமிழரை தோற்கடிக்கவில்லையா.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.