ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம் - ம. செந்தமிழன்தமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம் - ம. செந்தமிழன்

தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேச விடுதலை எண்ணமும் மேலோங்கி வரும் இவ்வேளையில், தமிழரின் போராட்ட வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலப் போராட்ட அனுபவங்களில் இருந்துதான் எந்த இனமும் தமது எதிர்காலத்தைத் திட்டமிட இயலும். அவ்வகையில், தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே போராடி வந்தாலும், அப் போராட்டங்கள் அனைத்தும் தவறான வழி நடத்தல்களால் / பிழையான கோட்பாடுகளால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘தமிழ் - தமிழர் - தமிழ்நாடு’ என்ற சிந்தனை மேலோங்கியது. இந்தச் சிந்தனை எழுச்சியை வெகு தந்திரமாக மடை மாற்றியது திராவிட இயக்கம். ‘திராவிடம் - திராவிடர் - திராவிட நாடு’ எனும் புத்தம் புதிய முழக்கங்களை அது முன் வைத்தது. இம் முழக்கம், ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டு கால தமிழ் இன வரலாற்றில் ஒரு போதும் நிலவாதது ஆகும். மேலும், திராவிடர் எனும் சொல்லால் தமிழர்கள் தம்மை, அதற்குமுன் ஒருபோதும் அழைத்துக் கொண்டதும் இல்லை.

இன்றும், தமிழர் என்ற அடையாளத்தை மறைக்க திராவிட முகமூடியைச் சுமந்து வருவோர் இருப்பதைக் கவனித்தால், தமிழ் - தமிழர் - தமிழ்நாடு ஆகிய முழக்கங்களின் இன்றியமையாமை விளங்கும்.

தனித் தமிழ் நாடு வேண்டும் என்ற விருப்பம் தமிழர்களின் ஆழ் மனத்தில் எப்போதும் உண்டு. ஏனெனில், வரலாற்றில் பெரும்பான்மையான காலப் பகுதிகளில் தமிழர்கள் தமக்கான அரசுகளை அமைத்து ஆண்டவர்கள். அந்த நினைவு தமிழ்ச் சமூகத்தின் மா உளவியலில் (mass psychology) அழுந்தப் பதிந்துள்ளது. ஆரிய பார்ப்பனர்களின் ஆழ்மனம் எப்போதும் ஒரு நிலத்தில் கால் ஊன்றால், சுரண்டுவதற்கான இடம் தேடி அலையும் என்பது அவ்வினத்தின் மா உளவியலே.

தமிழர்களின் தனிநாட்டு வேட்கை, காலந் தோறும் வெடித்துக் கொண்டுதான் இருந்துள்ளது. தமிழர் போராட்ட வரலாற்றைச் சுருக்கமாக இக் கட்டுரையில் காண்போம்.

சிந்து வெளித் தமிழர்

இந்திய நிலப்பரப்பின் வட மேற்கில் தொடங்கிய சிந்துவெளி அரசு, தெற்காசியாவின் வட மேற்குத் திசை வழியே ஏறத்தாழ 10 லட்சம் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கிமு.2600 - கிமு 1900), மிக உயர்ந்த நாகரிகத்தை எட்டியிருந்தது சிந்து வெளித் தமிழர் அரசு. சிந்து நதியின் பெரு வெள்ளத்தையே தடுத்து, பாசனம் செய்ய அணைகள் கட்டி இருந்தனர் சிந்துவெளித் தமிழர்கள். அடுக்கு மாடி வீடுகள், நகரின் மையத்தில் நீச்சல் குளம், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வீதிகள், தொழிலாளர்களுக்கென தனி வீடுகள், பாதாளச் சாக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிந்துவெளியில் இருந்தன. உலகின் மிகப் பெரிய பண்டைய நாகரிகம் இது ஆகும்.

கப்பற் கலையில் சிந்து வெளித் தமிழர் விற்பன்னர் களாக இருந்தனர். சிந்து ஆற்றின் வழியே கலங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலுக்கு வந்து, அங்கிருந்து கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் சென்றனர். இறக்குமதிக்கும் இவ்வழியே பயன்படுத்தப்பட்டது.

சிந்துவெளி அரசு தமிழர்களுடையதுதான் என்பது ஐயந் திரிபற நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வாளர்கள் அனைவரும் சிந்துவெளி மக்களை, ’மூல திராவிடர்’ என்கின்றனர். தமிழர் என்று அறுதியிட்டுக் கூறவியலா வண்ணம் ’திராவிட அரசியல்’ தமிழகத்தில் தாக்கம் செலுத்தி யுள்ளது. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகளும் கிடைத்து விட்டன. அக்காலத்தில் இருந்த தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆதலின், சிந்துவெளி மொழியை மூலத் தமிழ் மொழி என அழைத்தலே பொருத்த மானது. ஆனால், திராவிடம் குறித்த பெரு எடுப்பிலான பரப்புரையின் விளைவு, ஆய்வுலகையும் தாக்கி யுள்ளதால், சிந்துவெளி மொழியை ‘மூல திராவிட மொழி’ என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் உள்ள எழுத்துகளை, ஒலி வடிவத்துடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் அறிஞர் பலர். முனைவர்.இரா. மதிவாணன் தமது ஆய்வில் வெளியிட்டுள்ள சிந்து வெளி எழுத்துகள் சிலவற்றைக் காண்போம்:

அவ்வன்
அண்ணன் அப்பு
அட்டன்
அதியன்
சானன் அவ்வன்
நன்னன்
அந்தனன்
(Indus script Dravidian - Dr.r.Madhivanan / Tamil chanror peravai/ 1995)

ஆகவே, சிந்துவெளி அரசு தமிழர் அரசு என்பதில் யாதொரு ஐயமும் தேவை இல்லை.

சிந்துவெளித் தமிழர் அரசு நிலைகுலையத் தொடங்கியது ஆரியப் படையெடுப்பினால்தான்.

தமிழர்கள் மாபெரும் நாகரி கத்தைக் கட்டியாண்ட காலத்தில், கொள்ளையர்களாகவும் கால்நடை மேய்ப்பவர் களாகவும் வட மேற்கு இந்தியா விற்குள் புகுந்தவர்கள் ஆரியர்கள். தமக்கென ஒரு நிலையான நாடு இல்லாமல், நிலைத்த அரசு இல்லாமல் வழிப்பறி செய்தும் சூறையாடியும் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆரியர்கள். கால் நடை மேய்த்தல் ஒன்றுதான் அவர்கள் அறிந்த உற்பத்தி சார்ந்த தொழில். பல்வேறு நாகரிகப் பழங்குடிகளின் குடியிருப்புகளைச் சூறையாடி அவர்களது பண்பாட்டு மதிப்பீடுகளையும் உற்பத்தி நுட்பங்களையும் தமதாக்கிக் கொண்டுதான் ஆரிய இனம் சிந்துவெளிக்குள் நுழைந்தது.

தமிழரது சிந்துவெளி அரசின் கட்டமைப்பும் வளமையும் ஆரியருக்கு திகைப்பை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். சிந்துவெளியின் மீது ஆரியர் போர் தொடுத்தனர். ஆரியரது போர் முறையின் அடிப்படை ஒன்றுதான் - அழித்தொழி! எஞ்சியதைக் கைப்பற்று!

இந்த அடிப்படையில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்கள் இவ்விதமான போரை அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்களுக்கு, தற்காப்பு நிலை தேவைப்பட்டது. ஏனெனில், ஒரு மாபெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அவர்கள். நகரங்கள், கப்பல்கள், எண்ணற்ற உற்பத்தி ஆலைகள், வேளாண் நிலங்கள், அணைகள் என அவர்கள் கட்டமைத்திருந்த செல் வங்கள் ஏராளம். பொதுமக்கள் அனைவரும் போர் வீரர்களும் அல்லர். அவர்கள் அமைதியான வாழ்வியலைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஆரியர்களுக்கோ அழித் தொழிப்பதும், எஞ்சிய வற்றைப் பிடுங்குவதுமே வாழ்வியல். வெறி பிடித்த கொள்ளைக் கூட்டத்திற்கும் நாகரிகமயப்பட்ட மாந்தருக்கும் இடையே நடந்த போர் அது. இப்போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது. ஆரியரது முதல் வேதமான, ரிக் இப்போர் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. ரிக் வேதம் வாய் வழியாகப் பாடப்பட்டு வந்தது. ஆரிய முனிவர்கள் தமது வரலாற் றைப் பாடல்களாக்கி வழி வழியாகப் பாடியே, அடுத்தடுத்த தலைமுறை யினருக்கு ஆரிய வெறி ஊட்டினர். ஆரியருக்கு அப்போது எந்த எழுத்து மொழியும் இல்லை.

ரிக் வேதம், சிந்துவெளித் தமிழரை ‘தஸ்யூக்கள்’ என்கிறது. தாசர்கள் என்பது இதன் தமிழ் ஒலிப்பு முறை. தாசர்கள் என்றால், ’வள்ளல் என்பதே மூலப் பொருள். ஆனால், அது இப்போது அடிமை என்று மாறி விட்டது. ஆரியன் என்றால் நாடோடியாகத் திரிகிறவன் என்று பொருள். அது இபோது உயர்ந்தவன் என மாறிவிட்டது’ என்பார் அறிஞர் கோசாம்பி.(நூல்: பகவான் புத்தர்)

பெரும் செல்வச் செழிப்புடனும் வளமையுடனும் வாழ்ந்த சிந்துத் தமிழர், ஆரியருக்கும் பிறருக்கும் வாரி வழங்கிய வள்ளன்மையுடன் வாழ்ந்ததன் அடையாளம் ‘தாசர்’ என்ற பெயர்.

சிந்துவெளித் தமிழரது தலைவர், விருத்திரன் என்று அறியப்படுகிறார். இந்திரன், ஆரியரின் தலைவன். இந்திரன், குடி வெறியன், பெண்பித்தன். தமிழர்களது நீர்த் தேக்கங்களைப் பாதுகாக்கும் தலைவராக, அகி என்பவர் அறியப் படுகிறார். இந்திரனது படைகள், சிந்துவெளியின் நீர்த் தேக்கங்களையே கூடுதலாகக் குறி வைத்துத் தாக்கின. இதற்கு ஆரியர்கள் கூறிய காரணம் கவனிக்கத்தக்கது.

’மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பதுபோல், இந்தத் தாசர்கள் தண்ணீரைப் பிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே! இதைக் கட்டுத் தறியிலிருந்து மாட்டை அவிழ்த்து விடுவதுபோல், சிறைப்பிடித்து வைத்திருக்கின்ற இந்தத் தண்ணீரை அவிழ்த்துவிடு இந்திரா’

-இவ்வாறு ஆரிய முனிவர்கள்/ தலைவர்கள் கூறக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு பேரழிவை ஏற்படுத்தும் முன், அதை நியாயப்படுத்தும் விதமான பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் பின்னணியாக இருக்கலாம். ஆரியரது உடன் பிறந்த இயல்பும் இதுவாகும்.

சிந்துவெளித் தமிழரை அழிப்பதற்கு ஆரியர் கூறிய பல்வேறு காரணங்களில் சில,

• தாசர்கள் வேள்வி செய்யாதவர்கள். அதுமட்டுமன்று, ஆரியரது வேள்வி களைத் தடுக்கிறார்கள். இரவிலே வந்து வேள்விகளை அழித்துச் செல்கின்றனர். ஆகவே, இவர்களை அழிக்க வேண்டும்.

• தாசர்கள் கடவுள்களை நம்பாதவர்கள்.

• தாசர்கள் அசுரர்கள்.

• தாசர்கள் மதச் சடங்கு அற்ற வர்கள். அறிவு இல்லாதவர்கள். மனிதத்தன்மையே இல்லாதவர்கள்

-இவ்வாறெல்லாம் சிந்துத் தமிழர்கள் மீது ஆரியர்கள் வெறுப்பு ஏற்படுத்தினர்.

ஒரு சமூகத்தை அழிக்கும் முன், அச்சமூகம் குறித்த பொய்யான அபாயகரமான மதிப்பீடுகளை உருவாக்குவது ஆரியம் இன்றும் செய்யும் திட்டமிட்ட பணியாகும்.

ஈழத்தில் பேரழிவு ஏற்படுத்தும் முன், ’தீவிரவாதம், சகோதர யுத்தம், ரத்த வெறி’ என்றெல்லாம் பல ஆண்டுகளாக ஆரியம் பரப்புரை செய்தது. பின்னர், அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஒரு ஞாயமான போராட்டத்தை அழிப்பதற்குத் தேவையான உள உறுதியையும் துணிவையும் அகத்திலும் புறத்திலும் வழங்கும் அடிப்படைக் காரணி இந்த பொய்ப் பரப்புரை ஆகும்.

நீர்த்தேக்கங்களின் தலைவர் அகி, இந்திரன் படைகளால் கொல்லப்பட்டார். பல நீர்த் தேக்கங்களை ஆரிய வெறிப் படை உடைத்தது. வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரம் சிந்துத் தமிழர் அழிந்தனர். விருத்திரன் காட்டில் தன் தாயுடன் ஒளிந்திருந்து சிறிய சண்டைகள் நடத்தினார். பின்னர் விருத்திரனும் தாயும் கொல்லப் பட்டனர்.

சிந்துவெளித் தமிழர்தான் ஆரியரை முதன் முதலில் எதிர்த்துப் பெரும்போர் புரிந்தோர் ஆவர். ஆரியரை எதிர்க்கும் மனத் துணிவும் மரபு வழி அறிவும் இந்திய நிலப் பரப்பில் எவரைக் காட்டிலும் தமிழருக்கே மிகுதியாக உண்டு. சிந்துவெளிப் போர் பல நூற்றாண்டுகளாக நீடித்தது. ஆரியர் வெற்றிகொள்ளத் தொடங்கினர். தமிழர் பகுதிகள் ஆரியக் குடி யேற்றங்களாகின. பின்னர் இயற்கைச் சீற்றங்களால், சிந்து வெளித் தமிழர் நிலம் அழிந்தது.

சங்ககாலத்தில் ஆரியர் - தமிழர் போர்கள்

சங்க காலத்தில் ஆரிய - தமிழர் போர் மீண்டும் தொடங்கியது. தமிழரது ஆட்சியெல்லை, தெற்கே குமரி முதல் வடக்கே விந்திய மலை வரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே, ஆரியர் ஆட்சியும், தெற்கே தமிழர் ஆட்சியும் நிலவியது.

இக்காலத்தில், தமிழர்கள் அரசுகள் அமைத்து, போர்க் கலைகள் கற்று வலுவுடன் இருந்தனர். முற்கால மூவேந்தர்கள் ஆட்சி செலுத்தினர். இக்காலத்தில், ஆரியர் தமிழரைத் தேடி வந்து படை யெடுத்ததாக எந்தச் சான்றும் இல்லை. மாறாக, தமிழ் வேந்தர்கள் இமயம் வரை சென்று ஆரியரை அழித்ததற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரிய அரசுகள் தமிழர் அரசுகளுக்கு அடங்கி வாழ்ந்தன என்பதையே வரலாறு உணர்த்து கிறது.

ஆரிய பார்ப்பனர்கள், தமிழகத்தை நோக்கிப் பிழைப்புத் தேடி வந்தனர். அவர்களது ஆட்சி யமைப்புக் கலை, தமிழக வேந்தர் களுக்குப் பயன்பட்டது. அரச உருவாக்கம் என்பது, சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை, பாகு பாடுகளை ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இப்பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் ஞாயப்படுத்தும் கோட்பாடு எதுவும் தமிழரிடத்தில் இல்லை. அவ்விதமான கோட்பாடு, இன்றுவரை தமிழரிடம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆரியரோ, ரிக் வேத காலத்திலிருந்தே பாகுபாடுகளை/சுரண்டலைக் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள். அவர்களது அர்த்தசாத்திரம், ஆட்சியமைப்புக் கலையின் உச்ச கட்ட சீரழிவுகளை போதிக்கும் நூல் ஆகும்.

வேந்தர்கள் பேரரசு உருவாக்கத்தில் ஈடுபட்ட காலத்தில், தமிழக அந்தணர்கள் (பார்ப்பனர்கள் அல்ல - அறிவாளர்கள்!) தமிழ்ச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறக்கோட்பாடுகளை வலியுறுத்தினர். வீரம், தமிழ் அந்தணர்களால் போற்றப்பட்டது. அதேவேளை, அறம் சார்ந்த வாழ்வியலே அடிப்படையானதாகக் கற்பிக்கப்பட்டது. புறநானூறு,தமிழ் அரசர்களின் வீரத்தைப் போற்றும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. உண்மையில், தமிழ் அரசர்களுக்கு அறம் போதிக்கும் பாடல்கள் புறநானூற்றில் ஏராளமாக இருக்கின்றன. இவ்வகையான அறம் போதிக்கும் மரபு, தமிழருக்கே உரிய சிறப்பு.

தமிழத்தின் எல்லை, ‘ வட வேங்கடம் - தென் குமரி’ என வரையறுக்கபட்டது. ஆனால், தமிழ் வேந்தர்கள் பல்வேறு படை யெடுப்புகளை இமயம் வரை நடத்தி வெற்றி கண்டனர். பேரரசு உருவாக்கத்தில், ஓர் அரசர் எந்த எல்லை வரை படையெடுத்துச் சென்று வெல்கிறாரோ அந்த எல்லையே அவரது பேரரசின் எல்லை ஆகும். ஆனால், தமிழர்கள், இவ்விதமாகத் தமது எல்லையை விரிவுபடுத்தவே இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய சேதியாகும்.

படையெடுத்து வெற்றி கொள்வது வேறு, இனத்தின் ஆட்சி எல்லை வேறு என்ற ஆழமான புரிதல் அக்காலத் தமிழ் வேந் தருக்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழ் அந்தணர்களுக்கும் இருந்தமையை இது உணர்த்துகிறது. தமிழரின் வெளிநாட்டு வணிகத் திற்கான போக்குவரவுகளை ஆரியர் சீர்குலைத்தமையும், மரபுவழிப் பட்ட தமிழரின் பண்பாட்டு நடவடிக்கைகளை, வட இந்தியாவில் ஆரியர் தடுத்தமையும் ஆரியருக்கும் தமிழருக்குமான போர்களுக்கான காரணங்களாக, இருந்திருக்கலாம்.

வாள் வலிமையால் போர் வெற்றி கண்ட தமிழர்கள், தம் இனத்தின் எல்லையை விரிவாக் காததன் விளைவாக, ஆரியம் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி, தமிழகத்தைக் குறுக்கியது. ஆரியக் கலப்பால், வட தமிழகம் ஆந்திர மானது தென் தமிழகம் கேரளமானது மேற்கே கன்னடம் உருவானது.

பல்லவர் - களப்பிரர் ஆட்சியில் ஆரியம் வளர்ந்தது

சங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்ற களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர் களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.

கி.பி. 2 முதல் கி.பி. 9 வரையிலான 700 ஆண்டு காலம், தமிழினம் ஆரியப் புதல்வர்கள் ஆட்சியின் கீழ் வாடியது. தமிழர் தவிர்த்த, தென்னிந்திய இனங்கள் ஆரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவையே ஆகும். பல்லவரது ஆட்சியில் வடமொழியே ஆட்சி மொழி. களப்பிரர் ஆட்சிப் பகுதி களிலும் வட மொழியின் ஆதிக்கமே மிகுந்தது. இவ்விரு அரசுகளும் தமிழ் இனத்தின் மீது பகைமை கொண்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள், பேரரசுகள் கட்டி ஆண்ட காலத்தில், தமிழ் இனத்தின் வாழ்வெல்லையைக் கடந்து தமது அரசை விரிவாக்க வில்லை. பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை. ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர்.

தமிழகத்தில் பார்ப்பனர் குடியேற்றம்

பார்ப்பனர் குடியேற்றங்கள் முதன் முதலாகப் பெருமளவில் நடந்தது பல்லவர் காலத்தில்தான். முதலில், தமிழகச் சிற்றூர்களில் பிற தமிழ்க் குலத்தவருடன் பார்ப்பனரும் கலந்து வாழும்படியான குடியேற்றங்களே செய்யப்பட்டன. அதாவது, பார்ப்பனர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகள் - சிறப்புத் தன்மைகளுடன், தொடக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென ஆய்ந்தால், தமிழரின் மரபுப் பெருமை விளங்கும். சங்ககாலம் வரை, ஆரிய பார்ப்பனர்களுக்குத் தமிழரிடையே நன்மதிப்பு இல்லை. அவர்கள் இரண்டாம் தரமாகவே நடத்தப் பட்டனர். கலித்தொகையில் வரும் தலைவி, ’நம் ஊரைவிட்டுத் துரத்தினாலும் போகாமல் சுற்றி வரும் பார்ப்பான்’ என்று ஒரு முதிய பார்ப்பனனைக் கேலி செய்யும் பாடலை இதற்கான மிகச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். (குறிஞ்சிக்கலி - 29)

வைகை ஆற்றின் கரையில் பார்ப்பனர்கள் வேள்வித் தீ வளர்க்கும்போது, ஆற்றில் குளித்து விளையாடிய இளம் பெண்கள் வேள்வித் தீயில் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக, பரிபாடல் காட்சிப்படுத்தியுள்ளது. (பரிபாடல் -11 / ‘விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’ எனும் பாடல்)

மேற்கண்ட இரு சான்றுகளிலுமே, பெண்களே பார்ப்பனர்களைக் கேலி செய்கின்றனர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.

அரசதிகார மட்டத்தில் மட்டுமே, பார்ப்பனர்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதுவும், பொதுமைப்படுத்திக் கூற இயலாத அளவுக்கு மட்டுப்பட்டுதான் இருந்தது. சமூகத்தில், பார்ப்பனர்களுக்கு வரவேற்பு இல்லை. அவர்களைப் பெரும்பகுதித் தமிழர்கள், தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவே கருதினர்.

இந்த நிலையை முதன் முதலில் மாற்றியவர்கள் திராவிடர் களான பல்லவர்களே ஆவர். முதலில், பார்ப்பனர்களைத் தமிழர் வாழும் ஊர்களில் சமமாகக் குடியேற்றினர். பிறகு, பிரமதேய ஊர்கள் உருவாக்கப்பட்டன. பல்லவர்கள்தான் முதன் முதலில் பார்ப்பனர்களுக்கு எனத் தனி ஊர்களை உருவாக்கித் தந்தவர்கள் ஆவர்.

இந்த பிரமதேய நிலங்கள், பார்ப்பனர்களுக்கென இலவசமாக, உரிமையாக வழங்கப்பட்டவை. இவற்றிற்கு அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இதேபோல, சமண மதத் தலைவர்களுக்கென, ’பள்ளிச் சந்தம்’ எனப்பட்ட இறையிலி நிலங்களையும் பல்லவர்களே உருவாக்கினர்.

ஆக, ஆரிய மதக் கருத்தியல்களை ஆதரித்து வளர்த்து, அவற்றுக்காக தமிழரது நிலங்களை தானமாகக் கொடுத்தவர்கள் பல்லவர்கள். சோழர்காலத்தில், பார்ப்பனர்களுக்கு, பிரமதேய நிலங்கள் ’உரிமையாக்கப் படவில்லை’ என்பது இந்த இடத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சோழர்காலத்தில், பிரமதேய நிலங்கள், அரசனின், வேளாளரின் கட்டுப்பாட்டில்/மேற்பார்வையில் இருந்தன. அந்த நிலங்கள் தற்காலிக அனுபவிக்கும் உரிமையின் அடிப் படையில்தான் வழங்கப் பட்டனவே தவிர, உரிமை ஆக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சோழர் கால பிரமதேய முறை, பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்குவது என்ப தல்லாமல், நிலத்தின் வருவாயில் பங்கு தருவது என்பதே ஆகும்.

பிற்காலச் சோழர் அரசமைப் பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவர் செய்த சீரழிவே பிரமதேய முறை ஆகும். இம்முறையின் தீவினைகளைக் குறைத்தவர்கள்தான் சோழர்கள் என்பதை மேற்கண்ட ஒப்பீடு காட்டும்.

சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர், பல்லவர் - 700 ஆண்டுகளும், விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.

தமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பின்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப் படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத் தவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? என்பது வெளிப் படையாகப் புரியும்.

இது ஒரு எளிய உண்மை யே. ஆனால், இந்த எளிய உண்மை யைக்கூட தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில்தான், திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரி களின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றன.

திராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப் பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆரியத்தின் பிள்ளையே திராவிடம்!

ஆரியம், சிந்துவெளியில் தமிழரை வென்றது. அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.

பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலை நிறுத்திய போதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.

சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆய்தம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பான வையாக உள்ளன. இந்தி மொழி யைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென் னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம் தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வட மொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத் தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.

பல்லவர்கள் தம்மை ‘பரத்வாஜ கோத்திரத்தார்’ என்றுதான் அழைத்துக்கொண்டனர். பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரிய பார்ப்பன குலம் ஆகும். உண்மையில் இவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும், தம்மை பார்ப்பனர் எனப் பொய்யாகவேனும் கூறிக்கொள்ளு மளவு ஆரியத்தில் கரைந்து போன வர்கள் என்பதைக் குறிக்கவே இச்சான்றை முன் வைக்கிறேன்.

பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விஜயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக் காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர். பெண் களை வணிகம் செய்த அரசு விஜய நகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறை யான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.

20 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற் கெதிரான போராட்டங்களால் தமிழரது தேசிய இன விடுதலை உணர்வு மட்டுப்பட்டது. இதைக் காட்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடர் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேசிய இன விடுதலை உணர்வு பொங்கி விடாது பார்த்துக்கொள்ளப்பட்டது. இப்போதும், தமிழர்களுக்கென தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கை யை, எந்தத் திராவிட இயக்கமும் தமது கொள்கையாக முன் வைப்பதில்லை. இதற்கான காரணம், திராவிடம் என்ற சொல்லே, தமிழருக்கு எதிரான வரலாற்றைக் கொண்டிருப்பதுதான்.

தமிழரிடையே தமிழ்த் தேசிய இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போதெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்கள் ‘தமிழனுக்கு நாடு வேண்டும்’ என்பார்கள். அந்தப் போர்க் குணம் மட்டுப்படும் வரை காத்திருந்துவிட்டு, ’திராவிடம்தான் சரி’ என்பார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்படும் வித்தை ஆகும்.

தமிழரது இனப் போராட்ட வரலாற்றை

1. ஆரியர் - தமிழர் போர்
2. தமிழர் - திராவிடர் போர்

என்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர். சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை :

• ஆரியர் கூட்டத்திற்கு அழித் தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.

• சிந்துவெளித் தமிழருக் கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆகவே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.

• சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர், சுய நலனையே வேதங்களாக்கினர்.

இந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.

விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆகிய திராவிடக் காலகட்டத்தில் தமிழரால் எதிர்த்துப் போரிடக் கூட இயலவில்லை. எங்கெங்கு காணினும் இனக் கலப்பு மிகுந்துவிட்டது. இந்தத் துரோக வரலாறு தமிழர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, ’திராவிடம்’ என்றாலேயே புரட்சிகர மான சொல் என்பது போல் மடை மாற்றம் செய்யப்பட்டது.

குருதித் தூய்மைவாதம்

இப்போது, தமிழினம் குறிப்பிட்ட எல்லைக்குள் குறுகி நிற்கிறது. ஆயினும், இதுவே தமிழினத்தின் போர்க்களம். இந்தக் களத்தில், பல்வேறு இனத்தவரும் தமிழராய்க் கலந்துதான் நிற்கின்றனர். தூய தமிழ்க் குருதி வாதம் தமிழ் இனத்தின் மரபுக்கு எதிரானது. ஏனெனில், தமிழ் இனம் என்பது, ஒரு பேரினம் ஆகும். இந்திய நிலப்பரப்பு எங்கும் ஆண்ட இனம் இது. இவ்வினத்தில் பல்வேறு சிறு இனங்கள் கால வெள்ளத்தில் கலந்துவிட்டன. அவற்றை ஏற்று அவ்வினத் தவரையும் தமிழர் ஆக்கியதுதான் தமிழின் சிறப்பு.

பல்லவர் குல அரசர்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன், தமிழை ஏற்று சிவனியத்தைத் தமிழில் பரப்பினார். கூற்றுவ நாயனார் எனும் சிவனியத் தொண்டர் களப்பிரர் வழி வந்தவர்தான்.

இவர்கள்போல் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். இந்திக்கு எதிராக நடந்த போரில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகிகளில் பிற இனத்திலிருந்து உருவான மறவர்களும் உண்டு.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், தோல் தொழில்களுக்காகவும் பிற ஏவல் பணிகளுக்காகவும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் சக்கிலி யர் எனப்படும் அருந்ததியர். கடும் உழைப்பாளர்களான இம் மக்களைத் திராவிட அரசர்கள், அடியாட்களாகவும் பயன்படுத்தினர். மதுரை வீரன் அவர்களில் ஒருவர்தான். திருமலை நாயக்கனின் சாதி வெறியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மதுரை வீரன்.

அவரைத் தமிழர்கள் இன்று தங்கள் தெய்வமாக்கிக் கொண் டுள்ளனர். தமிழரின் சிவன் கோயில்களிலும், சிற்றூர் குல தெய்வக் கோயில்களிலும் கூட மதுரைவீரன் சிலை வணங்கப் படுகிறது. இதுவே, தமிழரின் அறச் சிந்தனை மரபின் சான்று.

அருந்ததியர் மக்கள் இன்று சந்திக்கும் சாதிக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட அரச குலத்தவர்தான். ஆனால், திராவிட அரசர்கள், தமிழரிடையே சாதிய மோதல்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்து, ஒற்றுமையின்மை யை உருவாக்கி விட்டனர். அருந்ததியர்கள் இன்று கடை நிலை இழிவைச் சந்திக்கும் பிரிவினராக வாடுகின்றனர். இம்மக்கள் தமிழர்கள் தான். இவர்களின் இழிவைப் போக்க வேண்டிய முதற்கடமைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குத்தான் உண்டு.

இதுபோலவே, திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே! இதில் குருதித் தூய்மைவாதம் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலில் கரம் கோக்க வேண்டிய கடமை இவர்களுக்கும் உண்டு. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராவும் கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இச்சதியை முறித்துக் கொண்டு வந்து தமிழராகத் தலைநிமிர்த்தும் பொறுப்பு இம் மக்களுக்கு உள்ளது. தமிழ்த் தேசியக் கருத்தியல் இவர்களை அரவணைக்க வேண்டும்.

தமிழ், களப்பிரர்களை, பல்லவர்களை, நாயக்கர்களை, பிரிட்டானியர்களையெல்லாம் கண்டுவிட்டு செம்மாந்து நிற்கும் மொழி. இம்மொழியைப் பிற மொழிகளால் எவ்வாறு அழிக்க முடியவில்லையோ, அதேபோல பிற இனங்களால், தமிழ் இனத்தை அழித்துவிட முடியாது. ஆனால், இனத்தின் பாதுகாவலர்களாக தமிழர்கள் தம்மை உணர வேண்டும். போராடாத இனம் வெல்லாது. ஈழத்தில் நடப்பது ஆரியத்தின் நவீன வடிவங்களான சிங்கள - இந்திய கூட்டணிக்கு எதிரான தமிழரின் போர்தான்.

தமிழினத்தின் போராட்ட வரலாற்றின், சுருக்கம் நமக்கு உணர்த்தும் உண்மைகள், ஆரியமே தமிழரின் முதல் பகை, திராவிடம் ஆரியத்தின் கிளை! - என்பவையாகும்.

இந்தப் பாடங்களிலிருந்து, எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். திராவிட இனங்களான/ஆரிய பார்ப்பனியத்தில் தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா.

இந்திய தேசிய ஒடுக்கு முறை என்பது, இந்தி பேசும் மக்கள் நேரடியாக தமிழர் மீது படையெடுத்து வருவது அல்ல; ஆரியத்தின் தென்னிந்திய சட்டாம்பிள்ளைகளாக உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள இனங்கள், இந்தியாவின் தமிழர் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்.

இவ்வினங்கள் தமக்குள் உள்ள எல்லைச் சிக்கல்களை சுமுகமாகவும் விட்டுக்கொடுத்தும் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், தமிழகத்துடன் உள்ள சிக்கல்களில் மட்டும் ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம், இவ்வினங்களுக்குத் தமிழர் மீது உள்ள இனப்பகையே ஆகும். இந்த இனப்பகையை, இந்தியம் வளர்த்தெடுக்கிறது.

ஆகவே, திராவிடம் - இந்தியம் இரண்டும் தமிழினத்தை எதிர்க்கின்றன, அழிக்கத் துடிக் கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடம் குறித்த நமது ஆய்வு முடிவுகள் அனைத்துமே, தமிழ் இன விடுதலைக்கான தேடலின் விளைவுகள்தாம். திராவிடர் என்றால் பார்ப்பனர் வரமாட்டார் என்ற வாதம் முழுக்க முழுக்கப் பொய்யானதும், தமிழின விடுதலை உணர்வை மட்டுப் படுத்தியதும் ஆகும்.

இந்தியத்தைப் போலவே ‘திராவிடமும்’ தமிழரின் முகவரியை மறைத்தது. இவை இரண்டுமே தமிழர் தன்னுணர்வு பெறுவதைத் தடுத்தவை; தடுத்து வருபவை.

தகவல்களுக்கு உதவிய நூல்கள்:


  • சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு

  • பல்லவர் வரலாறு - முனைவர் மா. இராசமாணிக்கனார்

  • சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் - முனைவர் மே.து.இராசுகுமார்
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2010 மாத இதழில் வெளியான கட்டுரை)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.