வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. - இளந்தமிழன்
வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. - இளந்தமிழன்
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழர்களுக்குப் புதிய படிப்பினைகளை வழங்கி வருகிறது. தமிழர்கள் அடிவாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது, திருப்பி அடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை உருவாகியுள்ளது.
1991 நவம்பர்-திசம்பர் மாதங்களில் கர்நாடகத்தில் காவிரிக் கலவரம் என்ற பெயரில் கன்னட வெறியர்கள் நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்றனர். பல்லாயிரம் வீடுகளை எரித்தனர். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் உயிர் பிழைத்து, ஏதிலிகளாகத் தமிழகம் ஓடிவந்தனர். அப்போது தமிழ்நாடு கர்நாடகத்தவர்க்கு தமிழ் நாட்டிலேயோ, அல்லது கர்நாடகக் கிராமங்களில் புகுந்தோ பதிலடி கொடுக்கவில்லை.
அதைக்கண்டு துணிச்சல் பெற்ற மலையாளிகள் தமிழர்களை அவ்வப்போது தாக்கி வந்தனர். இப்பொழுது தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். தமிழ்நாடு ஓரளவு பதிலடி கொடுத்தது. இதனால் தான் கேரளத்தில் உள்ள தமிழர்கள் இந்த அளவிலாவது பாதுகாக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் மலையாளிகளின் நிறுவனங்களை மூட வலியுறுத்திப் போராயவர்களைத் தமிழகத் தலைவர்கள் சிலர் கண்டிப்பது வேதனையாக உள்ளது. அதிலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் “மலையாளிகள் கடைகளைத் தாக்கியது கோழைத்தனம்”, “வீரமற்ற செயல்” என்ற சொற்களைப் பயன் படுத்திக் கண்டித்தது மிகவும் வேதனையாக உள்ளது. பாலிமர் தொலைக்காட்சியில் 18.12.2011 அன்று கொடுத்த செவ்வியில் இவ்வாறு கூறினார் வைகோ.
அப்பாவித் தமிழர்களை ஒருவாரத்துக்கு மேலாக மலையாளிகள் கேரளத்தில் தாக்கி வந்தனர். தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளிப் பெண்களை சிறைப்பிடித்து மானபங்கப் படுத்தினர். தமிழகத்திலிருந்து சென்ற அய்யப்ப பக்தர்களை அடித்து விரட்டினர். இந்திய அரசு தடுத்து நிறுத்த முன்வரவில்லை. தமிழகஅரசால் தடுக்கமுடிய வில்லை. பிரதமருக்குக் கடிதம் எழுதிக் காத்திருந்தார் முதலமைச்சர்.
இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்க போராட்டம் எதுவும் நடத்தவில்லை.
கொதித்தெழுந்து குமுளி வழியே போக முயன்ற கூடலூர் கம்பம் பகுதித் தமிழர்களைத் தமிழகக் காவல்துறை தடுத்து வந்தது.
இந்த அவல நிலையில் தான் வேறுவழியின்றி, 7.12.2011 அன்று மலையாள நிறுவனங்களை மூடச் சொல்லி பதிலடிப் போராட்டம் நடத்தினர்கள் இன உணர்வாளர்கள். த.தே.பொ.க. தோழர்கள் மீது சென்னை, கோவை, தஞ்சை, குடந்தை ஆகிய நகரங்களில் பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையிலடைத்தார்கள். சென்னைத் தோழர்கள் மீது ஒரு பொய் வழக்கையும் இணைத்து இருவழக்குகள் போட்டார்கள். ஓசூரில் மாலையில் விடுத்தார்கள்.
அதே நாளிலும் அதற்குப் பிறகும் தமிழக மெங்கும் இனஉணர்வாளர்கள் மலையாளிகளின் நிறுவனங்களை மூடக்கோரி பதிலடிப் போராட்டங்கள் நடத்தினார்கள். இப்போராட்டங்களால்தான், கேரளத்தில் அப்பாவித் தமிழர்கள் மலையாளிகளால் தாக்கப்படுவது படிப்படியாகக் குறைந்தது. இப்போராட்டத்திற்குப் பிறகு தான், தமிழ் நாட்டில் வணிகம் செய்யும் மலையாளிகள் தங்கள் சங்கங்கள் மூலமாக, கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அறிக்கைகள் கொடுத்தார்கள். முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை ஆதரித்து தமிழகத்தில் மலையாளிகள் கடை அடைப்பு நடத்தினார்கள்.
தமிழகத்தில் பரவலாக மலையாளிகளுக் கெதிராக நடந்த பதிலடிப் போராட்டத்தினால் தான் மேற்கண்ட சாதகமான நிகழ்வுகள் நடந்தன. இதனால் இன உணர்வாளர்கள் சிறையிலடைக் கப்பட்டனர். சென்னை மயிலாப்பூரில் பதிலடிப் போராட்டம் நடத்திய தமிழர் எழுச்சிய இயக்கத் தோழர்கள் நால்வரை புருஷோத்தமன் என்ற காட்டுமிராண்டி ஆய்வாளர் காவல்நிலையத்தில் அம்மணப் படுத்தி கடுமையாகத் தாக்கிப்படுகாயப் படுத்தினார்.
இவர்களைப் பகிரங்கமாகப் பாராட்டாவிட்டாலும், இவர்கள் செயல் கோழைத்தனம் என்றும் இவர்கள் போராட்டத்தைக் கண்டித்தும், இப்போராட்டம் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் திரு. வைகோ பேசியிருக்கக் கூடாது.
இக்கட்டுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 சனவரி 1-15 இதழில் வெளிவந்தது.கட்டுரையாளர் இளந்தமிழன் , தமிழ்த் தேசிய உணர்வாளர்.
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment