ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

போராட்டம் தவிர மாற்று வழி இல்லை

Tamil-Daily-News-Paper_69635736943
இவ்வாண்டு தமிழர் திருநாள் இனிதே கழியவில்லை; இன்னல்களுக்கிடையே கடந்து சென்றது. ஒரு சமூகத்தைத் தாங்கி நிற்கும் அடித்தளங்களாக உள்ள வேளாண்மையும் தொழிலும் நலிவடைந்ததே இந்த இன்னல்களுக்கு காரணம்.

கர்நாடகம் காவிரி நீரை மறுத்ததால் பல மாவட்டங்களில் வேளாண்மை பொய்த்துப்போனது. பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் இதர மாவட்டங் களில் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதனால் ஐந்து கோடிமக்களுக்கு மேல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். வரலாறு காணாத மின் வெட்டால் பல்லாயிரக்கணக்கான சிறிய நடுத்தர தொழிலகங்கள் மூடிக்கிடக்கின்றன. சந்தையில் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் பல பெரிய, நடுத்தர தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைக்கும் விடுமுறை (லேஆப்) விட்டுள்ளன. இதனால் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்து, உரிய வருமானம் இழந்து துன்பத்தில் உழல்கின்றனர்.

தமிழ்நாட்டில் உழவர்களும் தொழிலாலர்களும் வருமானம் இழந்த நிலையில் தமிழர்திருநாள், தமிழ்ப்புத்தாண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் விழாவைக் கொண்டாடும் வசதியும் மனநிலையும் மக்களிடம் இல்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் காவிரி நீர் தடுக்கப்பட்டதால் கருகிப் போன பயிர்களைப் பார்த்து 12 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

இந்நெருக்கடிகள் விரைவான எதிர்காலத்தில் தீர்ந்துவிடும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. வரப்போகும் காலம் இருள் சூழ்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் அதிகமாகிக்கொண்டுள்ளது,
காவிரிப் பாசனப் பகுதியில் ஏற்பட்ட வறட்சி அதனால் உருவான இழப்புகள் அனைத்தும் செயற்கையாகத் திணிக்கப்பட்டவை. கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பியிருந்த நிலையிலும் தமிழகத்திற்குரிய நீரைத் திறந்து விட அம்மாநிலம் மறுத்தது. தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் கன்னட இனவெறி கர்நாடகத்தின் கண்ணை மறைத்தது.

ஈழத்திலிருந்தாலும், தமிழகத்திலிருந்தாலும் தமிழ் இனம் நசுக்கப்பட வேண்டிய இனம் என்ற இந்திய அரசின் ஆரிய சித்தாந்தம் அரசமைப்புச் சட்டப்படி செயல்படவிடாமல் நடுவணரசைத் தடுத்தது. சட்ட அதிகாரத்தை இந்திய அரசு பயன்படுத்தியிருந்தால் கர்நாடகம் தமிழகத்திற்குரிய காவிரி நீரைத் திறந்து விட்டிருக்கும். தமிழக அரசும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் இந்திய அரசு சட்டப்படி செயல்படவேண்டி வந்திருக்கும்.

காவிரி ஆணையத்தின் தலைவராக உள்ள பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு வற்புறுத்தல்களுக்குப் பின் ஒரே ஒருமுறை ஆணையத்தைக் கூட்டி ஒப்புக்கு ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அத்தீர்ப்பைக் கர்நாடகம் செயல்படுத்த மறுத்ததைக் கூட அவர் கண்டிக்கவில்லை. காவிரிக் கண் காணிப்புக் குழுவோ தொடர்ந்து ஒளிவுமறைவின்றித் தமிழகத்திற்கு எதிராகவும், சட்டத்தை மீறும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்திக்காரரான துருவிஜய்சிங் என்பவர் அதன் தலைவராக உள்ளார். அவர் நடுவண் நீர்வளத்துறையின் செயலாளரும் ஆவார்.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்ற செய்தியும் தமிழகத்தில் சாகுபடிப் பருவம் எப்போது முடிவடையும் என்ற செய்தியும் தமக்குத் தெரியாதென்று பொய் உரைத்தார். அது மட்டுமின்றி காவிரித் தீர்ப்பாயம் கர்நாடகம் குடிநீருக்குப் பயன்படுத்தும் தண்ணீரை வரையறுத் திருக்கிறது. அக்டோபரிலிருந்து மே 31 வரை குடிநீருக்காகக் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட காவிரி நீர் 4 டி.எம்.சி மட்டுமே. ஆனால் கர்நாடகம் 23 டி.எம்.சி. தேவை என்று வல்லடி வழக்குப்பேசுகிறது. துரு விஜய் சிங்க் அதை அப்படியே ஏற்றுகொண்டு 23 ஆ.மீ.க. கர்நாடகத்திற்கு இருக்க வேண்டும் என்கிறார்.

கடந்த 10.1.2013 அன்று நடந்த கண்காணிப்புக்குழுவில், கர்நாடகம் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு ஆணையிட முடியாது, வற்புறுத்தவும் முடியாது என்று திட்ட வட்டமாக தெரிவித்தார் துரு விஜய் சிங். அதே நேரம் கர்நாடகத்திற்கு நற்சான்று அளிக்கும் வகையில் இன்னொன்றைக் குறிப்பிட்டார். சனவரி மாதம் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரைத் திறந்துவிடவில்லை என்றாலும் கசிந்து வந்த நீரே குறிப்பிட்ட அளவை விடக் கூடுதலாக வந்துவிட்டது என்றார். அதாவது 1.51 ஆ.மி.க. தான் வரவேண்டும். வந்ததோ 1.6 ஆ.மி.க. என்றார். சூன் மாதத்தி லிருந்து சனவரி 9 வரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 120 ஆ.மி.க.வுக்கு மேல் பாக்கியிருக்கிறது என்பதை. ஓரிடத்தில் கூட கண்காணிப்புக் குழுத் தலைவர் சுட்டிக்காட்டவில்லை.

துரு விஜய் சிங் தன்முனைப்பாக இப்படி நடந்து கொள்கிறார் என்று கருத முடியாது. நடுவண் அரசின் தமிழினப் பகைப் போக்கைப் புரிந்து கொண்டோ அல்லது நடுவண் அரசின் கருத்துகளைப் பெற்றுக்கொண்டோ அவர் தமிழ் நாட்டிற்கு அநீதி இழைக்கிறார்.
இந்திய அரசின் தமிழின எதிர்ப்பையும், கண்காணிப்புக்குழுவின் ஒருதலைச் சார்பையும், தமிழக அரசு மற்றும் தமிழகக் கட்சிகளின் செயலற்ற தன்மையையும் கண்டறிந்த உச்சநீதி மன்றம், தனக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டு விட்டது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை டிசம்பர் 31க்குள் அரசிதழில் வெளியிடுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்த இந்திய அரசைக் கண்டித்து உடனடியாக வெளியிடுமாறு கட்டளை யிடாமல் மேம்போக்காகப் பேசிக் கடமை தவறியது.

தமிழகத்திலோ, தங்களுக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்ற உரிமை உணர்ச்சி மேலோங்காமல் இழப்பீடுகள் பெறுவதில் முழுக் கவனம் செலுத்துகின்றன பல விவசாய சங்கங்கள். காவிரி உரிமை மீட்புக் குழு இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் உரிமைப் போராட்டத்திற்கு முதன்மை கொடுத்துகொண்டு இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

வரும் சூன், சூலை மாதங்களில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பில்லை. நவம்பர் டிசம்பர் மாதங்களில் மேட்டூரில் சேமித்து வைக்கப் படும் தண்ணீர்தான் குறுவை சாகுபடிக்குத் திறந்து விடப்பட்டு வந்தது. இப்போது மேட்டூர் அணை ஒரு குட்டை போல் குறுகிக் கிடக்கிறது. எனவே வரும் குறுவை சாகுபடியையும் இழக்க வேண்டிய ஆபத்து உள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமானதுதான். 360 ஆ.மி.க வரை கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற்று வந்த தமிழகத்திற்கு வெறும் 192 ஆ.மி.கவைத் தீர்ப்பாக வழங்கியுள்ளது தீர்ப்பாயம். இன்று நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இந்த 192 ஆ.மி.க தண்ணீர் வருவதையாவது உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளோம்.
192 ஆ.மி.க. தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதை நிறைவேற்றும்படி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்டங்களைத் தொடங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை செயல்படுத்தாமல் இந்தியஅரசு நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதையோ, காவிரிப் படுகையில் பெட்ரோலியம் எடுப்பதையோ அனுமதிக்கக் கூடாது.

காவிரி உரிமை மீட்புக்குழு 16.2.2013 அன்று திருவாரூர் மாவட்டம் அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோலியம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் முற்றுகைப்போராட்டம் நடத்தவுள்ளது. உழவர் பெருமக்களும் தமிழ்க் குடிமக்களும் ஒருங்கிணைந்து அப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதன் பிறகும் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். இறுதி வெற்றி கிடைக்கும் வரை இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

நடப்பு சாகுபடி இழப்புகளை ஈடு செய்யும் வகையில் சாகுபடி செய்த நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயும், சாகுபடி செய்ய முடியாமல் தரிசு போடபட்ட நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும் உழவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும். உழவர்கள் கூட்டுறவுச் சங்கத்திலும், வங்கிகளிலும் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடத்த வேண்டும்.

பருவ மழை பொய்த்ததால் வேளாண்மை பாதிக்கப்பட்ட எல்லா மாவட்டங் களிலும் இதே போல் இழப்பீடுகள் வழங்க வேண்டும்.

தமிழக வேளாண்மையையும் தமிழகத் தொழிலையும் பாதுகாக்க மாற்றுத் திட்டங்களை முன்வைத்தும் உரிமைகளை மீட்க உறுதி ஏற்றும் தொடர் போராட்டங்களை நடத்துவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒரு தேசிய இனமாக, ஒரு சமுதாய மாகத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இச்சிந்தனைகளே இன்றையத் தேவை.

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2013 சனவரி 16-31 இதழில் தலையங்கமாக வெளிவந்தது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.