ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏழு தமிழர் விடுதலை வழக்குத் தீர்ப்பு : தாமதப்படுத்தும் கருணாநிதி கருத்துக்கு - பெ.மணியரசன் கண்டனம்

ஏழு தமிழர்  விடுதலை வழக்குத் தீர்ப்பு : தாமதப்படுத்தும் கருணாநிதி  கருத்துக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் கண்டனம்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட  ஏழு தமிழர்  விடுதலை  குறித்த வழக்கில் தேர்தலுக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கக்கூடாது என்றும், அவ்வாறு  தீர்ப்பு வழங்கினால் அது தமிழகத்தில் அரசியல் ரீதியிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார். திரு. கருணாநிதி கூறியுள்ள இக்கருத்து 23 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு பேர்க்கும் அவர்கள் குடும்பங்களுக்கும், ஏழு பேரின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இலட்சோபலட்சம் தமிழ்மக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பேரிடி தாக்கியது போல் பெருந்துன்பத்தை உண்டாக்கியுள்ளது.

வாழ்நாள் சிறை உள்ளிட்ட தண்டனை பெற்றோரை எந்த நேரத்திலும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று குற்றவியல் நடைமுறைச்சட்ட விதி 432 கூறுகிறது.

இராசீவ் கொலை வழக்கில் தடாச்சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளபோதிலும் தடாச்சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரியால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் முதன்மை சாட்சியமாக வைத்து இந்த ஏழுபேரும் தண்டிக்கப்பட்டார்கள். ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி திரு. தியாகராசன், பேரறிவாளன் கூறியதைப் பதிவு செய்யாமல் நான் என் சொந்தக்கருத்தை எழுதினேன். அதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளார்.

மேல்முறையீட்டில் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், இவ்வழக்கின் குற்ற அறிக்கையில் கூறப்பட்டிருந்த சில முரண்களைக் கணக்கில் எடுக்கத்தவறி விட்டோம் என்று பணி ஒய்வு பெற்ற பின் இப்பொழுது கூறியுள்ளார்.

இவ்வழக்கில் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இருபத்து மூன்றாண்டுகள் சிறையிலிருந்துவிட்டார்கள் என்ற நிலையில் தமிழக அரசு இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய முன்வந்தது. இந்திய அரசு அதை எதிர்த்துத்தடை கோரி வழக்குப் போட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துவிட்டு வழக்கை முழுமையாக விசாரித்து விட்டு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

25.04.2014 அன்று பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதி சதாசிவம் தம் தலைமையில் விசாரணை முடிந்த முகாமையான வழக்குகளில் ஓய்வுக்கு முன் தீர்ப்பு வழங்க வேண்டிய சட்டதேவையும் சட்ட நிலையும் உள்ளது.

இந்நிலையில் தான் அண்மையில் கோவையில் சிறப்பு சமரச அதாலத் நீதிபதிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் மேற்படி வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ஓய்வு பெறுவதற்கு முன் தீர்ப்பு சொல்வோம் என்று கூறினார்.

இத்தீர்ப்பு இப்பொழுது வெளிவரக்கூடாது என்று திரு. கருணாநிதி  கூறுகிறார்.  ஏப்ரல் 24-ல் தமிழ்நாட்டில்  வாக்குப்பதிவு  நடைபெறுவதற்கு முன் வந்தால் அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இப்பொழுது தீர்ப்பு வழங்க கூடாது என்று கூறுகிறார்.

தீர்ப்பு வந்தால் என்ன விளைவுகளை உருவாக்கும்? ஒரு வேளை அந்த ஏழு பேரையும் சட்ட நெறிகளுக்குட்பட்டு விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வந்தால் அது முதலமைச்சர் செயலலிதாவுக்கு சாதகமான உணர்வை வாக்காளர்களிடம் உருவாக்கும் என்று கருணாநிதி அச்சப்படுகிறார் என்று தெரிகிறது. இதனை கருணாநிதியா, செயலலிதாவா என்று இரு தலைவர்களின் ஆதாய அரசியலாக மாற்றக்கூடாது. இது மனித உரிமை தொடர்பானது - மாநில உரிமை தொடர்பானது. “இந்த இரண்டு உரிமைகள் பற்றியும் எனக்கு அக்கறையில்லை எனது தேர்தல் ஆதாயம்தான் முக்கியம்” என்று  கருணாநிதி கருதுகிறார். இந்தத் தன்னலவாத அரசியல் அவர் நெஞ்சத்தை கல் நெஞ்சம் ஆக்கிவிட்டது.

திரு. கருணாநிதி அவர்கள் கூறுவது போல் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் இவ்வழக்கில தீர்ப்புச் சொல்லாமல் பணி ஓய்வு பெற்று விட்டால், இந்த வழக்கின் கதி என்னவாகும்? புதிதாக ஓர் அமர்வு உருவாக்கப்பட்டு, அது தொடக்கத்திலிருந்து விசாரணையைத் தொடங்கி அது ஒரு முடிவுக்கு வர எவ்வளவு காலதாமதமாகும்? அந்த ஏழு பேரின் கதி என்னவாகும்?

இருபத்து மூன்றாண்டுகளாக சிறையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் ஏழுபேர் வாழ்வு பற்றி கருணாநிதிக்குச் சிறிதும் கவலையில்லை. ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டபோது தன்னல அரசியல் நடத்திக்கொண்டு அந்த இனப்படுகொலைக்கு மறைமுகமாகத் துணைபோனார். இப்போது ஏழு தமிழர்களைப் பலியிடப் பகிரங்கமாகக் குரல் கொடுக்கிறார். திரு. கருணாநிதி அவர்களின் இந்தத் தன்னல வெறி அரசியலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி தமது சட்டக் கடமையைப் பணி ஓய்வுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.