ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விச் சட்ட சேர்க்கை நிறுத்தம் தமிழக மாணவர் முன்னணி கண்டனம் !



தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விச் சட்ட சேர்க்கை நிறுத்தம்
தமிழக மாணவர் முன்னணி கண்டனம் !

இது குறித்து தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையின் மொத்த விழுக்காட்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, அப்பள்ளி அமைந்துள்ள சுற்றுப்புறங்களைச் சேர்ந்த, ஏழை எளியக் குழந்தைகளுக்கு வழங்கவும், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தவும் வகை செய்யும் சட்டமான இலவச கட்டாய கல்விச் சட்டம் (ஆர்.ட்டி.இ) கடந்த ஆண்டு செயலுக்கு வந்தது. இச்சட்டத்தின் படி கடந்த கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றனர்.

இதற்கு அரசு தரவேண்டிய  25 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மாட்டோம் என  தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் சங்கம் அறிவித்துள்ளது. இது கடும் கண்டனத்துகுரியது.

உரிய காலத்தில் அரசிடமிருந்து கல்வி கட்டணத்தைக் கேட்டுப் பெறாமலும், அதையே காரணம் காட்டி இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் விதமாக 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகளின் இந்நடவடிக்கை சமூக அநீதியாகும்.

கல்வியை தனியாரிடம் ஒப்படைத்துள்ள அரசு, அதில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு நிற்பதே முதலில் குறைவானதாகும். தரமான முழுமையான இலவசக் கல்வியை அரசே வழங்கி இருக்க வேண்டும்.

ஆயினும் அதற்கு ஒரு முதல் படிநிலையாக கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வற்புறுத்தல் காரணமாக, பல போராட்டங்களுக்குப் பின் கொண்டு வரப்பட்ட  இலவசக் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படியான ஏழை எளிய மாணவர்க்குரியக் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தாததும், அதை காரணம் காட்டி இடஒதுக்கீட்டு சட்டத்தையே முற்றிலுமாக தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக நீக்குவதும் சட்ட விரோதம் ஆகும். உடனடியாக இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உரியக் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஓராண்டாக மௌனம் காத்துவிட்டு தற்காலிகமாக நிலுவை தொகை தனியார் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் எனவும், அதற்குரிய தொகை பின்னர் மத்திய அரசிடம் கேட்டு பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவே மிக கால தாமதமான அறிவிப்பாகும். இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது. வரும் ஜூன் மாதத்திற்குள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்க்கையை செயல்படுத்தவும் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு ஏழை எளிய மாணவர் சேர்க்கையை கண்காணிக்கவும் விரைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி கோருகிறது.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.