ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வேதாரண்யம் உப்புத் தொழிற்சாலையில் எழுச்சியுடன் நடைபெற்ற மே நாள் விழா!




வேதாரண்யம் வட்டம், கடிநல்வயலில் உள்ள ஜி.எச்.சி.எல் உப்புத் தொழிற்சாலையில் உப்புத்தொழிலாளர்கள் சார்பில் மே நாள் விழா எழுச்சியாக நடைபெற்றது.

பல நூறு ஏக்கரில் அமைந்துள்ள இந்த உப்புத் தொழிற்சாலை முதலில் விம் கோ நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. அதன் பிறகு தாரங்க தாரா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு கை மாறியது. அதற்கும் பிறகு டால்மியாவின் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் (ஜி.எச்.சி.எல்) நிறுவனத்தால் வாங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

நிர்வாகம் கைமாறினாலும் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து ஒரே தலைமையின் கீழ் “ விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் ” என்ற பெயரிலேயே இயங்குகின்றது. கடந்த 34 ஆண்டுகளாக தோழர் கி.வெங்கட்ராமன் அச்சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றிவருகிறார். நமது தமிழக தொழிற்சங்க முன்னணியில் இணைக்கப்பட்ட சங்கமாக அது செயல்பட்டுவருகிறது. 

விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே நாள் பேரணி 01.05.2014 மாலை 5.30 மணியளவில் பன்னாள் , அரசுப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டது. 

பேரணிக்கு தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

சங்கச் செயலாளர் தோழர் இரா.தியாகராசன் வரவேற்புரையாற்றினார். பன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு வி.கே.விஸ்வநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு,ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற ஜி.எச்.சி.எல் அதிகாரி திரு,வி.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தனர்.

பேரணிக்கு சங்கத் துணைத் தலைவர் தோழர் காமராஜ், துணைச் செயலாலர் தோழர் வாசு, சங்கப் பொருளாளர் தோழர் இளங்கோவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஜி.எச்.சி.எல் தொழிலாலர் சங்கத்தின் செயலாளர் தோழர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியின் முன்னால் தஞ்சை செல்வராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுச் செல்ல, உப்புத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஏறத்தாழ முன்னூறு பேர் மே நாள் முழக்கங்கள் எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர். 

பேரணி செல்லும் பாதையெங்கும் ஆங்காங்கே தொழிலாளர் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் மற்றும் சங்கத்திற்கு ஆதரவளிக்கும் பல்வேறு அமைப்பினரும் , ஆசிரியர்களும் குளிர்பானம் அளித்தும் தோழர் கி.வெ அவர்களுக்கு சால்வை , மாலை அணிவித்தும் சிறப்பித்தனர். 

மாலை புறப்பட்ட பேரணி 5 கிலோமீட்டர் கடந்து இரவு 10.30 மணி அளவில் கடிநல்வயலில், ஆலை வாயிலை அடைந்தது. 
அங்கு அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க மே நாள் முழக்கங்கங்களுக்கிடையே தோழர் கி.வெங்கட்ராமன் தமிழக தொழிற்சங்க முன்னணியின் கொடியை ஏற்றிவைத்து மே நாள் உரையாற்றினார். 

சி.பி.எம் கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியத்தலைவர் தோழர், வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். சங்கச் செயலாளர் தோழர்.இரா. தியாகராசன் நன்றி உரையாற்ற இரவு 11.30 மணி அளவில் மே நாள் விழா நிறைவுற்றது.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.