ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“வெளியார் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் கூடுவோம்!”







“வெளியார் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் கூடுவோம்!” மதுரை பொதுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

“வெளியார் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் நடைபெறும் மாநாட்டில், தமிழர் அனைவரும் ஒன்று திரள்வோம்” என, அழைப்பு விடுத்து, மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வெளி மாநிலத்தவருக்கு எதிராக, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னை – தியாகராயர் நகரில் செப்டம்பர் 28 அன்று ‘வெளியார் அதிகரிப்பும் – தமிழர் வாழ்வுரிமையும்’ சிறப்பு மாநாடு நடைபெறுகின்றது. இம்மாநாட்டை விளக்கி, தமிழகமெங்கும் பரப்புரை இயக்கங்களும், கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மதுரையில் செல்லூர் ஐம்பதடி சாலையில், நேற்று(09.09.2014) மாலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் கதிர்நிலவன் முன்னிலை வகித்தார். மகளிர் ஆயம் இளமதி, தோழர்கள் மு.கருப்பையா, தோழர் கரிகாலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இக்கூட்டத்தின்போது, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் மதுரைக் கிளைத் தோழர்கள் மு.கருப்பையா, கரிகாலன், கதிர்நிலவன், தங்கப்பழனி, இராசபாண்டி, தமிழ்மணி, பாஸ்கர், புருசோத்தமன் ஆகியோர் தம்மை, தமிழ்த் தேசியப் பேரியக்கத்துடன் இணைத்துக் கொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், அத்தோழர்களுக்கு துண்டணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்:

“மதுரை மாநகரம் தமிழ் இனத்தின் தொன்மையைப் பறைசாற்றும் தொன்மைமிக்க நகரம். தமிழர்களின் தொழில் – வணிகம் சிறந்து விளங்கி, சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த முக்கியத் தலைநகரமாக மதுரை விளங்கியது. இன்று, அதே மதுரையில் மார்வாடிகள் – மலையாளிகள் என அயல் இனத்தார் தொழில் – வணிகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நாமோ பிழைப்புக்கு வழிதேடி வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இந்த சிக்கலை விவாதிக்கத்தான் வரும் செப்டம்பர் 28 அன்று, சென்னையில் ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ மாநாட்டை நாங்கள் நடத்தவிருக்கிறோம்.

‘மனிதர் அனைவரும் சமம் – தமிழர் அனைவரும் சமம்’ என்பது தான் தமிழ்த் தேசியம் வலியுறுத்தும் தமிழர் அறக்கோட்பாடாகும். இப்படிப் பேசுபவர்கள், மார்வாடி – மலையாளி என அயல் இனத்தாரை எதிர்ப்பது ஞாயமா என்று சிலர் கேட்கிறார்கள்.

நாங்கள், மார்வாடிகளையும், மலையாளிகளையும், இந்திக்காரர்களையும், அவர்கள் மார்வாடிகள் என்பதற்காகவோ, மலையாளிகள் என்பதற்காகவோ இந்திக்காரர்கள் என்பதற்காகவோ எதிர்க்கவில்லை. அவர்கள், தமிழர்களுடையத் தாயகத்தில் இருந்து கொண்டு, தமிழர்களின் தொழில் – வணிக – வேலை வாய்ப்புகளில் ஆதிக்கம் செய்கிறார்கள். எங்கள் மண்ணில், எங்களை ஆதிக்கம் செலுத்த நீங்கள் யார் என்ற கேள்வியோடு தான், இவர்களை நாங்கள் எதிர்க்கிறோம். வெளியேறச் சொல்கிறோம்.

‘அவனவன் நாட்டில் அவனவன் வாழ்!’ என்று சொன்னார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவர் பொதுவுடைமை பேசியவர்தான். ஆனாலும் அவர் அப்படிச் சென்னார். இந்திக்காரர்களும், மார்வாடிகளும் அவர்களுடைய தேசத்தில் தொழில் – வணிகத்தைச் செய்யுங்கள். உங்களது தேசத்தில் போராடுங்கள். நாங்களும் அதனை ஆதரிக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, எங்களை ஆதிக்கம் செய்யாதீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இங்கு தமிழர்களுடைய உழைப்பில் – பணத்தில் எழுப்பப்பட்டுள்ளது தொலைப்பேசி இணைப்பகம். அதனைப் பயன்படுத்தி, தமிழர்கள் தான் பேசுகிறார்கள். தமிழர்கள் தான் அதற்கு கட்டணம் என்ற பெயரில் வருமானம் அளிக்கிறார்கள். அதன் மதுரை அலுவலகத்திற்கு, எதற்காக, ‘பாரத் சஞ்சார் நிகாம்’ என்று இந்திப் பெயர் வைக்க வேண்டும்? இந்திக்காரர்களே, இது உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? இதை தட்டிக் கேட்கக் கூடாதா? நாங்கள் தட்டிக் கேட்போம்.

பண்டையத் தமிழ் மன்னர்கள், இந்தோனேசியா, வங்கதேசம் என பல நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்றனர். போர்களில் வென்றனர். ஆனால், எங்கேயும் அவர்களாகவே ஆட்சியை நடத்தவில்லை. ஆட்சியை அந்தந்த இனத்தவரிடமே கொடுத்துவிட்டு, வரியை மட்டுமே பெற்றார்கள். அவ்வாறான தமிழ் மன்னர்களை ஈன்றெடுத்த இந்தத் தமிழ்நாட்டு மண், இன்றைக்கு அயலாரிடம் ஆட்சியை இழந்து, உரிமைகளை இழந்துத் தவிக்கிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான், தமிழ்த் தேசியப் பேரியக்கம் செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர், நாங்கள் ‘தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தோம், கடந்த ஆகத்து மாதம் 15 – 14 நாட்களில் திருச்சியில் நடைபெற்ற அமைப்பின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து, அமைப்பின் பெயரை ‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என்ற மாற்றினோம்.

தமிழ் இனத்தின் விடுதலைதான் இப்போது முதன்மைத் தேவைாயாக உள்ளது, எனவே அது அமைப்பின் பெயரிலேயே வரட்டும் என்ற வகையில் இப்பெயரை மாற்றினோம். ‘பொதுவுடைமை’ என்ற சொல்லாடலை கைவிட்டுவிட்டதால், நாங்கள் மார்க்சியத்தை புறக்கணிக்கிறோம் என்று பொருளல்ல.

17-18ஆம் நூற்றாண்டுகளில் ஒரு இனத்திற்கு ஒரு நாடு என்ற வகையில் ‘தேச உருவாக்கம்’ குறித்த கருத்தியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. அவ்வாறு ஏற்படுத்தப்படுகின்ற ஒரு தேசத்திலுள்ள மக்கள், அந்த நாடு மன்னராட்சியை விரும்புகிறதா, சனநாயக ஆட்சியை விரும்புகிறதா, முதலாளித்துவ பாதையை விரும்புகிறதா, பொதுவுடைமைப் பாதையை விரும்புகிறதா என முடிவு செய்ய வேண்டும். ஆனால், இங்கு தமிழ்நாடு விடுதலை பெறாமல் இந்தியத்திடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. எனவே, இதனை இந்த இலட்சியத்தை வென்றெடுத்த நாம் பாடுபடுவோம் என்ற வகையில் அமைப்பின் பெயரை, ‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என மாற்றினோம். அதை வென்றெடுப்பதற்கன கருத்தியலே, ‘தமிழ்த்தேசியம்’ ஆகும்.

பிரான்சு நாட்டு மக்கள் எப்படி பிரஞ்சு தேசியர்களோ, செர்மனி நாட்டு மக்கள் எப்படி செர்மானிய தேசியர்களோ, அது போல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இயல்பாகவே தமிழ்த்தேசியர்கள்தான்! அவர்கள் அனைவருக்குமான கருத்தியலே ‘தமிழ்த்தேசியம்’ ஆகும்.

மார்க்சியத்தில் பல நல்ல கூறுகள் இருக்கின்றன. அதனை எடுத்துக் கொள்வோம். தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்துக் கொள்வோம். இங்கே, உள்ள முற்போக்குக் கருத்தியல்களான பெரியாரியத்திடமிருந்தும், அம்பேத்கரியத்திடமும் எங்களுக்கு பல திறனாய்வுகள் இருக்கின்றன. எனினும், சாதி ஆதிக்க– பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புகளை முன்வைக்கும் இவ்விரு கருத்தியல்களில், நமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்வோம். தேவையில்லாதவற்றை தவிர்த்துக் கொள்வோம். இவற்றுக்கும் மேலாக, காலங்காலமாக தமிழர்களுக்கென்று உள்ள அறவியல் கோட்பாடுகள் உள்ளன.

இவை அனைத்தையும் உட்செறித்துக் கொண்டுதான், மண்ணுக்கேற்ற தத்துவமாக தமிழ்த் தேசியம் இருக்கிறது என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அதன் ஒரு கூறாகத்தான், தமிழர் தாயகத்தை இல்லாமல் செய்யும் வெளியார் ஆதிக்கத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.

நாங்கள் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் தேர்தல்களில் போட்டியிட்டு, இன்று சிக்கிச்சீரழிந்து கிடக்கின்றன. அந்த வரலாற்றுப் படிப்பிணையுடன் நாங்கள் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற உறுதியுடன், மக்களுக்கான இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

எங்களை மேலும் வலுவூட்டும் வகையில், தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் அனைவரையும் அரவணைக்கும் கருத்தியல் என்பதற்கு உரமூட்டும் வகையில்தான், தோழர் கருப்பையா – கதிர்நிலவன் தலைமையிலான தோழர்கள், எமது அமைப்பில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அயல் இனத்தாரில் பலர் தொழிலாளிகளாக இருக்கிறார்களே, அவர்களை வெளியேற்றுவோம் என்று சொல்வது ஞாயமான என சிலர் கேட்கிறார்கள். இப்படிக் கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி! அயல் இனத்து முதலாளிகளை எதிர்க்க, நீங்கள் என்ன திட்டம் தீட்டினீர்கள்? என்ன போராட்டம் நடத்தினீர்கள்?
பார்சி இனத்தவரான டாடாவின் டனிஷ்க், மலையாளிகளின் ஆலூக்காஸ் போன்ற பெரு நிறுவனங்கள், தமிழ்நாட்டின் நகைத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக, தமிழக நகைத் தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்களே, அந்த பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு எதிராக நீங்கள் வீதிக்கு வந்திருக்கிறீர்களா?

2011ஆம் ஆண்டு தமிழ்த் தேசியப் பேரியக்கம், தஞ்சை, குடந்தை, சென்னை, கோவை, ஓசூர் என பல பகுதிகளில், மலையாள ஆலூக்காஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராடியது தமிழ்த் தேசியப் பேரியக்கம். போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுபோல, அயல் இனத்து முதலாளிகளுக்கு எதிராக நீங்கள் என்றாவது போராடியதுண்டா?

அயல் இனத் தொழிலாளர்கள், ஒரு நாளைக்கு ஆயிரமாயிரம் பேர் தமிழகத்திற்குள் நுழைகிறார்கள். சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில், இது தினமும் நடக்கிறது. அவர்கள், இங்கேயே தங்கி வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அவர்கள் வெறும் கையோடு மட்டும் வருவதில்லை. “இந்தி எனது தேசிய மொழி“ – “நாங்கள் ஆளுகின்ற இனம்” என்ற தலைக்கனத்தோடு, திமிரோடு வருகிறார்கள்.

நாம் பேசும்போது, நமக்கு இந்தித் தெரியவில்லை என்றால், ‘ராஷ்ட்ர பாசா – தேசிய மொழி இந்தி தெரியவில்லையா’ என நம்மை ஏளனம் செய்கிறார்கள். சென்னை – மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலைகளில், அதிகளவில் உள்ள இந்திக்காரர்களுக்காக இந்தியில் பெயர் பலகை போட்டுக் கொண்டு வணிகம் செய்கிறார்கள் பெட்டிக்கடை வைத்துள்ள தமிழர்கள். ஏனென்றால், அவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள ஒருபோதும் முயல்வதில்லை. ஆனால், தமிழ்நாட்டு வணிகர்கள் ஓரிரு இந்தி வார்த்தைகளை முயன்றுக் கற்றுக் கொண்டு அவர்களிடம் வணிகம் செய்கின்ற அவல நிலை உள்ளது.

இவ்வாறு இங்கு வரும் வடநாட்டவர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்துத் தரும் பணிகளில் சி.பி.எம். போன்ற கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இப்போது, இவர்களைக் காட்டி தொழிற்சங்க உரிமைகள் பலவும் பறிக்கப்பட்டுவிட்டன. நாளை, இவர்களே தொழிற்சங்கம் அமைக்கும் நிலையில், இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை வரும். அந்தளவிற்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மிகை எண்ணிக்கையில் அயல் இனத்தார் நுழைந்து கொண்டுள்ளனர்.

இதோ, ஓணம் பண்டிகை வந்தது. கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் அதற்கு விடுமுறை விடுகிறார்கள். திருவனந்தபுரத்தில், பொங்கல் விழாவுக்கு விடுமுறை அளிக்க கேரளா மறுத்துவிட்டது. பொங்கலுக்கு விடுமுறை வேண்டும் என்று உண்ணாப் போராட்டம் நடத்தியத் தமிழர்களை, காவல்துறையை வைத்து தடியடி நடத்திக் கலைத்தவர், ‘பொதுவுடைமை’ பேசும் சி.பி.எம். கட்சி முதல்வர் அச்சுதானந்தன். அதன்பிறகு, தமிழர்கள் அவ்வுரிமையைப் போராடிப் பெற்றனர்.

தேர்தல் கட்சிகள் இங்கே மிகை எண்ணிக்கையில் அயல் இனத்தார் குவிவதை வரவேற்கின்றன. ஒட்டுமொத்தமாக அவர்களுடைய வாக்குகளை அள்ளிவிட, சில உரிமைகளை அவர்களுக்கு அளிக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இதில் யாரையும் யார் சளைத்தவரில்லை.

புதுச்சேரியில் ஏன் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வெற்றி பெற முடியவில்லை? அங்கே கணிசமான அளவில் அயல் இனத்தார் குடியேறிவிட்டனர். எவ்வளவு தான் துரோகம் இழைத்தாலும், அயல் இனத்தார் ஒரு மாநிலக் கட்சியான தி.மு.கவையும் அ.தி.மு.க.வையும் ஆதரிப்பதில்லை. வடநாட்டுத் தலைமையில் செயல்படும் காங்கிரசையும் பா.ச.க.வையும்தான் அவர்கள் ஆதரிக்கிறார்கள். அயல் இனத்தார், தமிழகத்தில் அதிகளவில் குடியேறிவிட்டால், தமிழ்நாட்டிலும் இது தான் நிலைமை!

அண்மையில், பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், மலையாளிகளை குளிர்விப்பதற்காக திருவனந்தபுரத்திற்குச் சென்று, ‘இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் போயிருக்காதே’ என்று பேசியிருக்கிறார். உண்மையில், ‘இந்துக்கள்“ ஒற்றுமையாக இருந்திருந்தால், கேரளம் தனி மாநிலமாகப் பிரிந்திருக்காதே என பேசியிருக்கலாமே? ஏன் அப்படி பேசவில்லை? இது தான் கங்காணித்தனம்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆதிக்கம் செலுத்திய மலையாள நம்பூதிரிகளும், நாயர்களும், பிற்படுத்தப்பட்ட நாடார் சமூகப் பெண்கள் இரவிக்கை அணிந்து செல்லத் தடை விதித்தனர். தமிழர் பகுதிகளில் தோல் சீலைப் போராட்டம் தமிழர் தலைவர்களால் வீறு கொண்டு நடத்தப்பட்டது.

இந்த கொடுமைகளையெல்லாம் எதிர்த்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கக் கோரி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர், மார்சல் நேசமணி, டி.எஸ்.மணி, தாணு லிங்க நாடார் உள்ளிட்ட பல ஈகிகள். அப்போராட்டத்தின் போது, மலையாள இனவெறிக் காவல்துறை அதிகாரி ஒருவரால், 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வளவு ஈகங்கள் செய்துதான், கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த ஈகியரை இழிவுபடுத்துகிறார் பொன்.இராதாகிருஷ்ணன். தமிழ் இனத்தின் உரிமைகளை மறுப்பதில், இந்தி – சமற்கிருதத்தை திணிப்பதில் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை. இவர்களுக்கு, தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுத்து கங்காணி வேலை பார்க்கத்தான், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இன்னபிற தமிழகக் கட்சிகளும் துடிக்கின்றன. கூட்டணிகள் வைத்து நடிக்கின்றன.

எனவேதான், அயலாருக்கு ஒரு வரம்பு கட்ட வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் கூறுகிறது. அதன் வெளிப்பாடாகவே, சென்னை ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ – சிறப்பு மாநாடு நடைபெறுகின்றது. இம்மாநாட்டிற்கு, அனைவரும் வருகை தர வேண்டும்! அயல் இனத்தாரின் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்ட, அனைவரும் சென்னையை நோக்கி அணிதிரள வேண்டும்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிறைவில், தோழர் பாஸ்கர் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான உணர்வாளர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.