மதுக்கடைகளை இழுத்து மூடுக! - ஆங்கிலவழியைத் திணிக்காதே! - தமிழ்வழியில் படித்தோருக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை : காலவரையற்ற பட்டினிப்போர்!
மதுக்கடைகளை இழுத்து மூடுக! - ஆங்கிலவழியைத் திணிக்காதே! - தமிழ்வழியில் படித்தோருக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை : காலவரையற்ற பட்டினிப்போர்!
டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடுக! அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்காதே! தமிழ்வழியில் படித்தோருக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குக! மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யா க.இரா.முத்துசாமி - ஈசுவர லிங்காலிங்கம் ஆகியோர் தேனியில் காலவரையற்ற பட்டினிப்போர்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் நேரில் சென்று ஆதரவு!
தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூடி மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும், தமிழக அரசுப் பணிகளில் ஆங்கில வழிப்பிரிவுகள் திணிக்கப்படுவதைக் கைவிட்டு, ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழிலேயே வழங்கப்பட வேண்டும், தமிழ்வழியில் படித்தோருக்கு தமிழக அரசுப் பணிகள் அனைத்தையும் வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனியில் 07.09.2014 அன்று முதல், திருப்பூர் தமிழின உணர்வாளர் அய்யா க.இரா.முத்துச்சாமி மற்றும், அய்யா ஈசுவர லிங்க வடிவு லிங்கா லிங்கம் ஆகியோர் காலவரையற்ற பட்டினிப்போரை நடத்தி வருகின்றனர்.
தேனி அய்யாவழி புத்தக அரங்கத்தில் நடைபெற்று வரும் இப்பட்டினிப்போர், இன்று (09.09.2014) மூன்றாம் நாளாக தொடர்கிறது. போராட்டத் தோழர்கள் தமிழின உணர்வாளர் அய்யா க.இரா.முத்துச்சாமி மற்றும், அய்யா ஈசுவர லிங்க வடிவு லிங்கா லிங்கம் ஆகியோர் சற்றே களைப்புடன் காணப்பட்டனர். இன்று காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், உண்ணாப் போராட்டம் நடத்திவரும் தமிழின உணர்வாளர்கள் இருவரையும் நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தார்.
போராட்டத்திடலில் அப்போது பேசிய தலைவர் தோழர் பெ.மணியரசன், "டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரியும், தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தியும், இந்தத் தள்ளாத அகவையிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாது போராடி வரும் தமிழின உணர்வாளர் அய்யா க.இரா.முத்துச்சாமி அவர்களுக்கும், அய்யா ஈசுவர வடிவு லிங்கா லிங்கம் அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இருவர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும், பொது மக்களும் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு, இவ்விரு கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தவும் முடியும்.
டாஸ்மாக் மதுக்கடைகளால் வருமான இழப்பு ஏற்படும் என தமிழக அரசுக் கருதினால், இந்திய அரசு தமிழகத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அள்ளிச் செல்லும் 80,000 கோடி வரி வருமானத்தில் பாதியையாவது தமிழக அரசுக் கேட்டுப் பெறலாம். இவ்வாறு செய்தால், இதனை மற்ற மாநிலங்கள் கூட ஆதரிக்க முன்வரலாம்.
டாஸ்மாக் மதுக்கடைகளின் மூலம் கிடைக்கும் வரி வருமானத்தால் தான் பல இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்கிறது தமிழக அரசு. உண்மையில், இத்திட்டங்களால் பயன் அடைபவர்களை விட, டாஸ்மாக் கடைகளால் சீரழிந்து அழிவோர் தான் அதிகமாக உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் திணித்ததன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தமிழ்வழிப் பிரிவுகளே காணாமல் போயுள்ளன. தமிழ்வழியில் கற்றோருக்கு, அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்குவது, அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றைச் செய்தால், தமிழ்வழியில் பிள்ளைகளை பெற்றோர் சேர்க்கும் நிலை உருவாகும். ஆனால், அதைவிடுத்து ஆங்கிலவழியைத் திணிப்பதென்பது, சரியல்ல.
எனவே, தமிழக அரசு மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என மாவட்ட ஆட்சியர் மூலம் வாக்குறுதி அளித்து, இப்பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து, மக்கள் கோரிக்கைகளுக்காக தனதுயிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் இறங்கியிருக்கும் இவ்விரு தமிழின உணர்வாளர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்" என்றார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஞாயமான கோரிக்கைகளுக்கான இப்பட்டினிப் போராட்டம் வெல்லட்டும்! தமிழக அரசு, கண்மூடி நிற்காதே! பட்டினிப் போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்று!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment