இராசபட்சேவுக்கு பாரத ரத்னா - இந்தியாவை தமிழர்கள் அடையாளம் காண ஒரு வாய்ப்பு - தோழர் பெ. மணியரசன்
இந்தியா இராசபட்சேவுக்கு பாரத ரத்னா வழங்கினால் இந்தியாவை தமிழர்கள் அடையாளம் காண மேலும் ஒரு வாய்ப்பாகவே அமையும்.
தமிழினப் படுகொலை குற்றவாளி
இராசபட்சேவுக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று கோரிக்கை
வைத்து தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியசாமி
கடிதம் எழுதியுள்ளதாக அவரே கூறியுள்ளார்.
தமிழினத்தின் ஒரு பகுதியை அழித்து எஞ்சியுள்ள தமிழர்களை அச்சுறுத்தி
இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் கட்டுப்பட்ட இரண்டாம்தர குடிமக்களாக வைத்துக்
கொள்ள வேண்டும் என்பது மன்மோகன்சிங், சோனியா காந்தி, நரேந்திர மோடி, இராசபட்சே ஆகியோருக்கு
ஒரு பொதுத் திட்டமாகும். அவர்களின் வெளியிடப்படாத உள்ளக்கிடக்கையைத்தான் சுப்பிரமணியசாமி
ஒளிவு மறைவின்றி பகிரங்கப்படுத்தியுள்ளார். எனவே சுப்பிரமணியசாமி என்ற ஒரு பொறுக்கித்
தரகனை கண்டனம் செய்வதில் பொருளில்லை.
இந்திய அரசுக்கானப் போரைத்தான் விடுதலைப் புலிகளை எதிர்த்து
இலங்கையில் நடத்தினேன் என்று இராசபட்சே இலங்கை நாடாளுமன்றத்தில் 2009இல் அறிவித்தார்.
அதற்கு அப்போதைய காங்கிரசு அரசு மறுப்புத் தெரிவிக்கவில்லை. பா.ச.க உள்ளிட்ட வலதுசாரி,
இடதுசாரி அனைத்திந்திய கட்சிகள் இராசபட்சேயின் அக்கூற்றுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
இதிலிருந்தே இந்திய அரசு மற்றும் அனைத்திந்திய கட்சிகளின் மனத்திற்குள்
இருக்கும் தமிழினப் பகை அரசியல் நன்கு தெரியவருகிறது.
அன்மையில் இலங்கை அரசு தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பாக நடத்திய
பன்னாட்டு கருத்தரங்கிற்கு பா.ச.க. சார்பில் சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார். அங்கு
சென்ற சுப்பிரமணியசாமி இராசபட்சேயிடம் நான்தான் படகுகளை விடவேண்டாம் மீனவர்களை விடுதலை
செய்யுங்கள் என்று கூறினேன் என்றார். இந்திய ஆளும் வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதியாகவே
சுப்பிரமணியசாமி பேசி வருகிறார்.
இந்தியாவில், சிங்கள இனவெறி அரசின் ஊது குழலாக செயல்பட்டு வரும்
இந்து ஆங்கில நாளிதழின் அதிபர் என்.ராம்-க்கு சிங்களஅரசு சில ஆண்டுகளுக்கு முன் ‘லங்கா
ரத்னா விருது’ வழங்கியதை இங்கு பொறுத்திப்
பார்க்க வேண்டும். இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்துதான் ஈழத்தில் தமிழினத்தை அழித்தன.
எனவே அந்த இரண்டு அரசுகளும் தமிழின அழிப்பை கொண்டாடும் வகையில் மாற்றி மாற்றி ரத்னா
விருதுகள் வழங்கிக் கொள்கின்றன.
இராசபட்சேவுக்கு வழங்கபட்டால் பாரத ரத்னா அழுக்குப்பட்டுவிடாது.
ஏனெனில் பாரதம் என்றைக்கும் தமிழனத்தை தனது பகைச்சக்தியாகவே கருதுகிறது. தமிழர்கள்
பாரதத்தை நேசசக்தியாக கருதுவதோ. பாரத ரத்னா விருதை உயர்வாக கருதுவதோ ஏமாளித்தனமாகவே
முடியும். ஒரு வேளை சுப்பிரமணிசாமி பரிந்துரையை ஏற்று இந்திய அரசு இராசபட்சேவுக்கு
பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த நிகழ்வு தமிழர்களின் கண்களை திறந்து வைத்து இந்தியாவை
சரியாக அடையாளம் காணவே துணைபுரியும்.
Leave a Comment