ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அடிமை இன்பமும் அலங்கோல நிர்வாகமும்

அடிமை இன்பமும் அலங்கோல நிர்வாகமும்
செயலலிதா – சசிகலா குழுவினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சுருட்டினார்கள் என்று நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி  - பத்து கோடி என்று தண்டத் தொகையும் விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் 27.09.2014 அன்று அடைக்கப்பட்டபின் நடந்த நிகழ்வுகள் – தமிழர் பண்பாடு – தமிழின எதிர்காலம் ஆகியவற்றில் அக்கறையுள்ளோரைப் பெருங் கவலைக்கு உள்ளாக்கிவிட்டன.

செயலலிதாவை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாப் போராட்டம் நடத்திய தமிழ்த் திரைத்துறையினர் போராட்டப் பந்தலில் “தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா?” என்று பெரிய பதாகை வைத்திருந்தனர்.

கருணாநிதி முதல்வராக இருந்து அவர் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தாலும் இதேபோல் வேறு வசனங்கள் கொண்ட விகாரப் பதாகையை இதே திரைத் துறையினர் வைத்திருப்பார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் போலியாகத் துதிபாடி – அவர்களின் ஆதரவைப் பெற்று தாங்கள் செழிக்க வேண்டும் என்ற ஒட்டுண்ணி உளவியல் வடிக்கும் சொற்களே அவை. உண்மையாக உரைக்கப்படுபவை அன்று.

ஊழலுக்கு துணை போகிறோமே என்ற உறுத்தல் கொஞ்சம்கூட இல்லாமல் அற்பத்தனம் கருத்தரித்த போலிச் சொற்கள்தான் “தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா?” என்ற சொற்கள்!

மதுரையில் அ.இ.அ.தி.மு.க.வினர், “அம்மாவை அனுப்பி வைத்தால் தமிழ்நாட்டு முதலமைச்சர்; அடைத்து வைத்தால் கர்நாடக முதலமைச்சர்” என்று சுவரொட்டி ஒட்டியுள்ளார்கள். செயலலிதாவின் சிறைவாசத்தைக் கொண்டாடிக் கும்மாளம் போடுகிறது அற்பர் கூட்டம்! “வறுமொழியாளர், வம்பப்பரத்தர் குறுநகை  கோட்டி நெடுநகை புரிவர்” என்று அற்பர்களின் கும்மாளத்தை இளங்கோவடிகள் வர்ணித்தார்.

இன்னொரு சுவரொட்டியில் கர்நாடக அரசைப் பார்த்து “காவிரியை நீயே வச்சுக்கோ அம்மாவைக் கொடுத்திடு” என்று ஒரு குழந்தை கேட்பதுபோல் சித்தரித்திருக்கிறார்கள். கோடான கோடித் தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டு உரிமையான காவிரியை எவ்வளவு எளிதாகப் பணயம் வைத்து அம்மாவை மீட்க அந்தக் கூட்டம் அணியமாக உள்ளது.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
என்றார் வள்ளுவப் பெருந்தகை!

அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அம்மாவிடம் ஏற்கெனவே குனிந்து குனிந்து பிறவிக் கூனர்களாகவே மாறிவிட்டார்கள்.

கட்சித் தலைவர் என்பவர் கட்சியின் சர்வாதிகாரி என்ற புதிய அகராதியை செயலலிதா உருவாக்கினார். அந்த சர்வாதிகாரியிடம் கூனிக் குறுகி கும்பிட்டுப் பதவிபெறும் கொத்தடிமைக் கூட்டம்தான் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மற்றவர்கள் என்ற புதிய அரசியல் நடைமுறையை உருவாக்கினார் செயலலிதா. இந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குக் கீழுள்ள பொறுப்பாளர்கள் மற்றும் மக்களிடம் அதே அடிமை இன்பத்தை உருவாக்கி விட்டார்கள்.

செயலலிதா – சசிகலா இரட்டையர் சட்டவிரோதமாகச் சொத்துக் குவித்ததால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பைவிட – அதனால் ஏற்பட்ட ஒழுக்கக் கேட்டைவிட ஆயிரம் மடங்கு தீங்கு பயப்பது அவர்கள் வெகுமக்களிடம் உருவாக்கி விட்டுள்ள அண்டிப் பிழைக்கும் அடிமை இன்ப உளவியல்! சொந்த ஆதாயத்திற்காக மானத்தை விற்கத் தயங்காத மனநிலை! தங்கள் முன்னோர்கள் கட்டிக்காத்த மாண்புகளை அழிக்கத் துணியும் அற்பத்தனம்!

அம்மாவுக்கு ஆபத்து வந்ததை அதிர்ஷ்டமாகக் கருதி அவருக்கு ஆதரவாகப் பெருங்கூச்சல் போட்டு அடுத்த தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகள் பெற மாரடிப்பு வேலையில் இறங்கியுள்ளன குட்டிக் கட்சிகள்!

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அக்கட்சி ஆறு தடவை தமிழகத்தில் ஆட்சியை பிடித்த கட்சி. எம்.ஜி.ஆர். காலத்தில் மூன்று தடவை. செயலலிதா காலத்தில் மூன்று தடவை. ஆனால் அதற்கான அனுபவ முதிர்ச்சியோ, பக்குவமோ, பண்பாடோ இன்றைய அ.தி.மு.க.விடம் இல்லை. அது தமிழர்களின் தன்மானப் பண்பாட்டை – ஒழுக்கத்தை – நேர்மையை வெகுவாகச் சீரழித்து விட்டது. அ.தி.மு.க.வின் அதே சீரழிவுப் பண்பாட்டைப் பின்பற்றி – சில தொகுதிகள் பெற போட்டி போடுகின்றன குட்டிக் கட்சிகள். தமிழ்நாடு எங்கே போகிறது?

செயலலிதாவின் சீரழிவுப் பண்பாட்டின் மூலவர் கருணாநிதிதான்! முதலமைச்சர் ஆனதும் தம்மை சோழப் பேரரசனாகக் கற்பித்துக் கொண்டு மேடைகளில் கிரீடம் சூட்டிக் கொண்டு – அண்டிப்பிழைக்கும் தமிழ்ப் படிப்பாளிகளைத் தம்மைப் புகழ்ந்து பாடவிட்டு – பட்டிமன்றம் நடத்தவிட்டு பூரித்துப் பொங்கி வழிந்தார் கருணாநிதி. தமக்குப் போட்டியாகக் கழகத்தில் யாரும் வளர்ந்து விடாமல் நறுக்கிவிடும் சர்வாதிகாரமும் கருணாநிதியிடமிருந்து செயலலிதா கற்றுக் கொண்டதுதான்.

ஊழலுக்கானப் பாலபாடமும் கோபாலபுரம் பள்ளியிலிருந்துதான் போயஸ் தோட்டம் கற்றிருக்கும். ஆனால் ஊழலுக்கான பல்கலைக் கழகமாக போயஸ் தோட்டம் பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்துவிட்டது.

இரண்டாவதாக உள்ள பெருங்கேடு – தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிக் கிடப்பது. முதலமைச்சர் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள ஓ. பன்னீர்ச்செல்வத்தை சிறையில் உள்ள கழகத்தின் சர்வாதிகாரியான செயலலிதா சந்திக்க மறுப்பது ஏன்? ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமையை பன்னீருக்கு வழங்கிட செயலலிதா விரும்பவில்லை என்ற பொருளா? அதுதான் அவர் கருத்தென்றால் – இன்னொரு பொம்மையை அதில் அமர்த்தி அதற்கு சாவி கொடுத்து ஆடச் செய்ய வேண்டியதுதானே சரியாக இருக்கும்.

அதைவிடுத்து, ஏழரைக் கோடித் தமிழ் மக்களின் வாழ்வியலில், சமுதாய இயங்குதலில் செயலலிதாவும் சசிகலாவும் விளையாடக் கூடாது.

முதலமைச்சர் என்ற முறையில் பன்னீரைத் தனித்து இயங்கவிடாமல் அவருடன் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதனும் எடப்பாடி பழனிச்சாமியும் கூடவே இருப்பதாகச் சொல்கிறார்கள். சரி, அந்த மூன்று பேருமாவது நிர்வாகத்தை நடத்த வேண்டும் அல்லவா?

சர்வாதிகாரிகள் பெரும்பாலும் அடிமனத்தில் மிகவும் அச்சப்பட்டவர்கள் என்பார்கள். அவர்கள் எதைக் கண்டாலும் அச்சப்பட்டு, தற்காத்துக் கொள்வதற்காக எதேச்சதிகாரமாக – எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடந்து கொள்வார்கள் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். செயலலிதா மூச்சுக்கு மூச்சு “எனது அரசு, எனது அரசு” என்று கூறிவந்ததை – நாம் அவரது அச்ச உணர்வின் வெளிப்பாடு என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். அதற்காகப் பன்னீரைக் கண்டு கூட செயலலிதா அச்சப்பட வேண்டுமா? அவருடைய தலைமையைப் பன்னீரால் பறித்துக் கொள்ள முடியுமா?

சட்டப் பேரவையில் பெரும்பான்மை வலு அ.இ.அ.தி.மு.க.விடம் உள்ளது. அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தன்னம்பிக்கையும் அரசை நடத்த வேண்டிய பொறுப்புணர்வும் பெறுவார்களா என்பது ஐயமாக உள்ளது. செயலலிதாதான் அவர்களை உயிர்ப்பித்து நிர்வாகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்.


செயலலிதா, தமிழர்களில் கணிசமானோரின் தன்மான உணர்வு – தன்னம்பிக்கை ஆகியவற்றை அழித்த குற்றம் தான் ஊழல் குற்றத்தைவிட பெரிய குற்றம். தமிழர்கள் படிக்க வேண்டிய பாடம் இதுதான்.

இக்கட்டுரை,தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 அக்டோபர் 16-31இதழில்  வெளிவந்தது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.