இந்தி எதிர்ப்புப் போராளி சி. இலக்குவனார் - கதிர்நிலவன்
1965ஆம்
ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழராசிரியர்களின் பங்கு முதன்மையானது – மாணவர்களுக்குத் தமிழ்மொழி காக்கும் உணர்வையும்,
இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்க் குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழாசிரியர்கள் என்றால் அது
மிகையில்லை.
மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழக மெங்கும் மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கிவிட்டது. அந்தக் கல்லூரியில் பணியாற்றிய ஒரு
தமிழ்ப் பேராசிரியர் வைத்த முதல் ‘தீ’தான் காங்கிரசு ஆட்சிக்கு கொள்ளி வைப்பதில் போய் முடிந்தது.
அந்தத் தமிழ்ப் பேராசிரியர் வேறு யாருமல்லர், செந்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்படும் சி. இலக்குவனார் ஆவார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாய்மேடு என்னும் சிற்றூரில்
17.11.1909ஆம்
ஆண்டு சிங்காரவேலார் – இரத்தினத்தாச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார் இலக்குவனார்.
எட்டாம்
வகுப்பு படித்து வந்த நிலையில்,
இலட்சுமணன் என இவர் பெற்றோர் இட்டப் பெயரை இவரின் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார் அவர்கள் “இலக்குவன்”
என்று தூய
தமிழில் மாற்றம் செய்தார்.
சாமி சிதம்பரனாரின் சீர்திருத்தக் கொள்கைகளும்,
தமிழ்மொழி மீதான ஈடுபாடும் இலக்குவனாரை கவர்ந்திழுத்திடவே, அது முதலே, தன்னைத் தமிழ் மொழியோடும்,
தமிழ் இனத்தோடும்,
பிணைத்துக் கொண்டார்.
திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக வேலையில் புகுந்தார்.
அதன் பிறகுதான் பயின்ற திருவையாறு அரசர் கல்லூரி,
செ.தெ.நாயகம் அவர்களின் குலசேகரன் பட்டினம் தமிழ்க் கல்லூரி, திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி, விருதுநகர் வி.இ.செந்தில் குமார நாடார் கல்லூரி,
ஈரோடு மகாசனக் கல்லூரி,
நாகர்கோயில் தெ.தி. இந்துக் கல்லூரி,
மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராக, முதல்வராக,
தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்ததில் பல்வேறு இடர்பாடுகளை அவர் சந்திக்க நேரிட்டது.
அங்கெல்லாம் படித்து வந்த மாணவர்களிடம், “எழுத்தாகிய உடல் இல்லையேல்,
மொழியாகிய உயிர் அழியும்”
எனும் தமது
தாரக மந்திரத்தை ஒப்புவித்தார். தமிழ் மொழிக்கு வீதியில் வந்து தொண்டாற்றும் படி மாணவர்களைத் தூண்டிய காரணத்தால் கல்லூரி நிர்வாகத்தின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானார். அதுவே இலக்குவனாரை ஒரே கல்லூரியில் பணி செய்ய விடாது, பல்வேறு கல்லூரிகளுக்குத் துரத்தியது.
இருப்பினும்,
இலக்குவனார் மற்ற எல்லாக் கல்லூரிகளைக் காட்டிலும், மதுரை தியாகராசர்
கல்லூரியில் பணியாற்றும் போதுதான் தமிழகம் அறிந்த ஒரு
மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராளியாக உருவெடுத்தார்.
இன்று தமிழர்களால் அறியப்படும் கவிஞர் நா. காமராசன்,
அமைச்சர் கா. காளிமுத்து,
எழுத்தாளர் சூரிய தீபன், கவிஞர்கள் இன்குலாப், மு. மேத்தா ஆகியோர் மாணவக் கண்மணிகளாக இருந்த போது, இலக்குவனாரின் தமிழ்ப் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்களே! 1965 மொழிப்போரின் தளபதிகளாக இம்மாணவர்கள் திகழ்ந்தார்கள்.
அப்போது அன்னைத் தமிழைக் காத்திட இந்தி மொழியை ஆட்சி மொழி என்று வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை கொளுத்தப் போவதாக மாணவர் பட்டாளம் சூளுரைத்தது.
இதைக் கண்டு பக்தவத்சலம்
அரசின் காவல்துறை குலை நடுங்கிப் போய் இலக்குவனாரை சந்தித்து முறையிட்டது.
மாணவர்கள் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரை கைவிடும்படி அறிக்கை விடுமாறு இலக்குவனாரை கேட்டுக் கொண்டது.
அப்போது
அவர் கூறியது இதுதான்
“தமிழ் மொழிக்காக போராடி வரும் மாணவர்களிடம் போய் போராட்டத்தை நிறுத்து என்று சொல்பவன் நல்ல ஆசிரியனும் அல்லன்; அதுபோல்,
என்
பேச்சைக் கேட்டு போராட்டத்தை நிறுத்துபவன் நல்ல மாணவனும் அல்லன்.”
இலக்குவனாரின் மேற்கூறிய விடையைக் கேட்டு ஆத்திரமுற்ற காவல்துறை இலக்குவனாரை கைது செய்து சிறையிலிட்டது. சில
மாதங்களில் வெளிவந்த இலக்குவனார்
“தமிழ் உரிமை பெரு நடைபயணம்”
மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
இலக்குவனாரை நீண்டநாள் சிறை வைப்பதைத் தவிர இனி
வேறுவழியில்லை என்பதை உணர்ந்து கொண்ட பக்தவத்சலம் அரசு அவரைப் பணி
நீக்கம் செய்திட ஆணையிட்டதோடு, இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் (D.I.R.) சிறையிலும் அடைத்தது. தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தமிழறிஞர் இலக்குவனார்தான்.
பேராசிரியர் இலக்குவனார் தொல்காப்பியத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
அவர் தொல்காப்பியம் குறித்து பின்வருமாறு கூறினார்: “இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்கு துணை புரிவதாகும்.
இதனைத் தமிழ்ப்புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர்.
இது
இலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று;
அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல்,
உளவியல்,
வாழ்வியல் முதலிய அனைத்தையும் அந்தக் காலத்திலேயே தன்னகத்தே கொண்டு இயங்குகின்றது.”
தொல்காப்பியத்தின் காலம் ‘கி.பி. 2ஆம்
நூற்றாண்டு’
என்று பல
அறிஞர் பெருமக்கள் கூறிய நிலையில்
“கி.மு. 7ஆம்
நூற்றாண்டே தொல்காப்பியத்தின் காலம்” என்று ஆதாரங்களோடு மெய்ப்பித்தார். அதனை
“Thol Kappiam In English With Critical Studies” என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டார். பேரரறிஞர் அண்ணா முதல்வராகி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்த போது மேற்கண்ட ஆங்கில நூலை போப்பாண்டவருக்கும், அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கும் பரிசாக அளித்தார்.
காங்கிரசு ஆட்சியில் இலக்குவனார் பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் கவலையுறாது தமிழ்த் தொண்டு புரிந்து வந்ததைக் கண்டுணர்ந்த அண்ணா, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பக்தவத்சலம் அரசின் பணி
நீக்க ஆணையை நீக்கி மீண்டும் பணி
வழங்கிடவும் செய்தார்.
திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார் அறியப்பட்ட போதிலும் பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தைப் பழித்தவர் அல்லர். 1951ஆம்
ஆண்டு ஆம்பூரில் திராவிடர் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகராக இருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப் படுத்திப் பேசும் இலக்கியம் என்று பேசினார்.
அதை
விடுதலை ஏடே (15.03.1951) ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு’
என்று தலைப்புக் கொடுத்து வெளியிட்டது.
அண்ணாவும்
‘தீ
பரவட்டும்’
என்று கூறி கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற தமிழ் இலக்கிய நூல்களைக் கொளுத்த வேண்டும் என்று அந்தக் காலத்தில் பேசி வந்தார்.
அப்போது இலக்குவனார்
“கம்ப ராமாயணம்,
பெரிய புராணம் போன்ற இலக்கியங்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்புவது உண்மையெனினும் மூடக்கருத்துகளை விலக்கியும் சிறந்த நெறிகளையும் மொழிவளத்தையும்
இனங்கண்டு போற்றியும் பின்பற்றுவதை விடுத்து அவற்றைக் கொளுத்த முனைதல் தேவையற்றது” என்று மறுப்புரை எழுதினார்.
இலக்குவனார் திராவிட இயக்கங்களுக்கே உரிய ஆங்கிலப் பித்துக் கொண்டவரல்லர்; ஒரு
முறை நாவலர் நெடுஞ்செழியன் தமிழ்ப் பயிற்று மொழி குறித்த விவாதத்தில் ஆங்கிலத்திற்கு ஆதரவாகப் பேசிடவே,
அவர் சினங்கொண்டு “தமிழ்மொழி நாவலரா? ஆங்கிலமொழிக் காவலரா?” என்று அறிக்கை விடுத்தார்.
அவர் அனைத்துக் கல்லூரிகளிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து வந்ததோடு,
கல்லூரிகளில்
உடனடியாகத் தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று தான் நடத்திய
‘குறள் நெறி’ ஏட்டிலே தொடர்ந்து எழுதி வந்தார். 03.09.1973இல் செந்தமிழ்க் காவலர் சி. இளக்குவனார் மறைவுற்றார்.
இலக்குவனார் அன்று தி.மு.க. ஆட்சிக்குக் கூறியதையே மீண்டும் இன்றைய செயலலிதா அரசிற்கும் நாம் நினைவூட்டுகிறோம். “உதட்டளவில் தமிழ்ப்பற்றைக் காட்டிவிட்டு, உலகப் புகழ் பெற
நாடுகின்றீர்கள். ஆனால், உயர் தமிழைப் பின்னுக்குத் தள்ளி விட்டீர்கள்!
இப்பொழுதேனும் பிழையை உணர்ந்து,
தமிழ்ப் பயிற்று மொழித் திட்டத்தை
(அனைத்து நிலைகளிலும்)
செயல் படுத்துங்கள்.”
இலக்குவனார் புகழ் ஓங்குக! அவர்களது
செந்தமிழ்ப் பணியைத் தொடர்வோம்!
Leave a Comment