ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“இலங்கை இனஅழிப்புக்கு உதவியது இந்தியா” –ஐ.நா.வுக்கு சாட்சியம் அனுப்பிய நோர்வே தமிழ்நாட்டுத் தமிழர்!


“இலங்கை இனஅழிப்புக்கு உதவியது இந்தியா” –ஐ.நா.வுக்கு சாட்சியம் அனுப்பிய நோர்வே தமிழ்நாட்டுத் தமிழர்!

தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு இந்திய அரசு உதவியுள்ளது என நோர்வேயில் வாழ்ந்து வரும் தர்மபுரியைச் சேர்ந்த தமிழர் திரு. விஜய் சங்கர், ஐ.நா. மனித உரிமைக் குழு விசாரணை ஆணையத்திற்கு சாட்சியம் அனுப்பியுள்ளார்.

நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழக இயற்பியல் ஆராய்ச்சியாளர் விஜய்சங்கர் அசோகன், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தமிழீழ இனவழிப்பில் பங்கு பெற்றிருந்த போதிலும் தொடர்ச்சியாகவும் மிக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிய நாடு இந்தியாதான் என்று அவரது சாட்சியத்தில் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் நியமித்திருக்கும் இலங்கை மீதான விசாரணைக் குழுவிற்கு அவர் கொடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய செய்திகள்:

நான் நோர்வேயில் 2008 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். இலங்கைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைத் தரகராக நோர்வே செயல்பட்டதை நன்கு அறிந்திருந்த என்னை, 2008-2009 ஆம் ஆண்டு நடந்த நோர்வே நாட்டு இளையோர்களின் போராட்டம் பெரிதும் ஈர்த்தது. அதிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் இந்தியாவின் நேரடி மறைமுக பங்களிப்பு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கினேன்.

·         போரின் இறுதி காலமான 2008-2009 இல், இந்தியா உட்பட்ட அனைத்துலக நாடுகள் தமிழின அழிப்பை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த வேளையில், Dr. Francis Boyle (Professor, International law, llinois University,USA), ஐக்கிய நாடுகளின் பாதுக்காப்பு அவையில் நடைமுறையில் இருந்த சட்ட வடிவத்தை மேற்கோள் காட்டி, இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த உடனடியாக பாதுகாப்பு அவைக் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பில்,  இந்தியாவும், அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரசாட்சி நாடுகளின் கள்ள மெளனத்தை கடுமையாக அவர் சாடியிருந்தார். மேலும் அவர், ஐ.நா. அவை விதி 35-ன் கீழ் இந்தியாவிற்கு இருக்கும் கடமையை மேற்கோள் காட்டி, இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கான கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தினார். அவ்வாறு செய்யவில்லையெனில், 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குறித்த உடன்படிக்கை விதி III(e) (Article III (e) of the 1948 Genocide Convention)-ன்படி, வன்னியில் இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலைக்கு இந்தியாவும் துணை நின்றதாக பொருள் கொள்ளப்படும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

·         பல சட்ட வல்லுநர்களும் அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சிக்கலைத் தீர்க்க இந்தியா உதவும் எனவும், இனப்படுகொலையைத் தடுக்க இந்தியா உதவும் எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்தியா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மாறாக, அனைத்துலக அழுத்தங்களை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியா ஏன் அவ்வாறு நடந்து கொண்டது என்பதற்கான விடை, போரின் நிறைவுக்குப் பின், இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சே, இந்திய ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு, மே 29 – 2009 அன்று அளித்த பேட்டியில், நான் இந்தியவின் போரை நடத்தினேன்என்று தெரிவித்தார். இது, இந்தியா இந்த இனப்படுகொலைப் போரில் பங்கேற்றதை அம்பலப்படுத்துகிறது.

·         இவ்வறிக்கையில், நான் (விஜய் அசோகன்), தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு. கோவை ராமகிருஷ்ணன், தனது சாட்சியமாக எனக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதனை தங்களிடம் சமர்பிக்கிறேன்.

o    2007இல் 10இற்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினருக்கு, இந்தியாவின் தமிழகத்திலுள்ள கோயம்பத்தூரில் இருக்கும் குருடம்பாளையம் என்ற இடத்தில் இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டதை நான் நேரில் பார்த்தேன். அந்த நேரத்தில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளை இணைத்து, அங்கு நாங்கள் போராடினோம். இதனை அடுத்து அந்த பயிற்சி முகாம் கர்நாடகத்தின் பெங்களுருக்கு மாற்றப்பட்டது.

o    அதன்பிறகு, இலங்கையின் வான்படை அதிகாரிகள் கோயம்பத்தூரில் உள்ள சூளூர் விமான பயிற்சி நிலையத்தில் வைத்து இந்திய அரசிடம் பயிற்சி பெற்றனர். தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கும் பிறகு வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர்.

o    அதன்பின் சில மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வெல்லிங்டனில் உள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில்(DSSC) வைத்து, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின் மறுபடியும் பயிற்சியை வேறு மாநிலத்திற்கு  மாற்றினார்கள். இது போல 3 முறை நடந்தது.

o    சென்னையிலுள்ள இந்தியக் கடற்படைப் பயிற்சிப் பள்ளியில், இலங்கை இராணுவம் பயிற்சி பெற்றதைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கு போராட்டம் நடத்தின.

o    உளவுத் தகவல் பரிமாற்றம், ராடார்கள் பகிர்வு என இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதையும் நாங்கள் கேள்விக்பட்டிருக்கிறோம்.

o    மே 2 ஆம் நாள், 82 கனரக வாகனங்களில், இராணுவத் தளவாடங்களை ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில் இருந்து கோயம்பத்தூர் வழியே கொச்சின் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அங்கிருந்து கொழும்பிற்கு கப்பல் வழியே ஏற்றப்பட இருப்பதையும் அறிந்த நாங்கள், அதனை வழியில் தடுத்து நிறுத்த முற்பட்டோம். மே 2 ஆம் நாள் மதியம் 3 மணி அளவில் நீலாம்பூரில் 300ற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இராணுவ வண்டிகளை தடுத்து நிறுத்தினோம். அதில் இருந்த ஆயுதங்களை தோழர்கள் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் காட்டினார்கள். கோபம் கொண்ட இந்திய அரசு, எங்களை தேசியப் பாதுகாப்புப் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.

·         இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்(2004-2014), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான திரு. வைகோ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்இலங்கையின் இறையாண்மையையும், ஒருமைப்பாடையும் காக்கவே ஆயுதங்கள் தரப்படுகிறதுஎன்று தெரிவித்திருந்தார்.

·         1980களில் பிராந்திய தலைமைத்துவத்திற்கு வரத்துடித்த இந்திய அரசு, இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த அங்கு நிலவி வந்த இன மோதலை பயன்படுத்திக் கொண்டது. முதலில், இலங்கையின் நிலைத்தன்மையை சீர்குலைத்து தனது மேலாண்மையை நிலைநிறுத்தவே முதலில் திட்டமிடப்பட்டது. முதலில் தமிழர் ஆயுதக்குழுக்கள் அனைத்திற்கும் ஆயுத பயிற்சியும் ஆயுத உதவியும் வழங்கியது. இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்பான சூழலில் ராஜீவ் காந்தியின் அனுபவமற்றத் தன்மை, இந்தியாவை பிழையான முடிவெடுக்க வைத்தது. இன மோதல்கள் தொடர்பான எவ்வித அனுபவமும் இல்லாத இந்தியா செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பிழையாகவே முடிய, தமிழரின் அரசியல் போராட்டத்தை அப்பிராந்தியந்தியத்தில் தவறான கண்ணோட்டத்திற்கு அழைத்து சென்றது இந்தியா.

·         1991 ஆம் ஆண்டு ராஜீவ் படுகொலைக்கு பிறகு இலங்கை தொடர்பில் ஆர்வமில்லாதது போல காட்டிக்கொண்டாலும், இலங்கையுடனான வர்த்தக, ராஜதந்திர உறவுகளை பேணிக்காத்தது இந்தியா.

·         2000ஆம் ஆண்டில் INS Sarayu என்ற நவீன போர்க்கப்பலை இலங்கைக்கு வழங்கிய இந்தியா, விமான தளபதி டிப்னிஸையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து, அங்கு அன்றைய நாளில் இருந்த அசாதாரண சூழலை கண்காணித்து வரச்செயதது.

·         2002 ஆம் ஆண்டு முதல் சமாதானம் காலம் நெடுகிலும் இந்தியா தனது பிடியை வைத்திருந்தது என சமாதான இடைத்தரகாராக செயல்பட்ட எரிக் சொல்கைம் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தம்முடன் நெருங்கி வேலை பார்த்தனர் என்று அவர் சொன்னார். “புலிகளை இராணுவரீதியில் முறியடிக்க முடியாது எனச் சொல்லி வந்த இந்தியா, அமெரிக்கா, இலங்கை அரசுகளின் நிலை, 2010ஆம் ஆண்டுக்கு பின்பு மாறியது. இந்த மாற்றத்தை, இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் திரு. எம்.கே.நாராயணன் அவர்களிடம் நான் கண்டேன்” என்றார் எரிக் சொல்கைம். எரிக் சொல்கைம் கூற்றிலிருந்து, இலங்கையின் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின்றி எதவும் நகர்ந்திருக்காது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

·         இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளரான சூரிய நாராயணன், 2004 ஆம் ஆண்டு புலிகளின் வளர்ச்சி தொடர்பாகவும் குறிப்பாக கடற்புலிகளின் மேலாண்மை தொடர்பாகவும் கட்டுரை எழுதி அவ்வமைப்பின் வளர்ச்சி இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரிய ஆபத்து என குறிப்பிட்டார்.

·         அதன்பிறகு, CGS Varaha மற்றும் CGS Vigraha கப்பல்கள் இலங்கைக்கு இந்தியா வழங்குகிறது. சென்னையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அக்கப்பல்கள் விசாகப்பட்டினம் எடுத்துச்செல்லப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. தமிழக ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வைக்கு அப்பாற்பட்டு நடக்கவே இதனை இந்தியா திட்டமிட்டு செய்தது.

·         2006 ஆம் ஆண்டு முதல் 2007 வரை புலிகளின் கடல் போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படுவதோடு புலிகளின் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் இந்தியாவின் உளவுத்தகவல் உதவியோடு அழிக்கப்படுகின்றன. இதற்கான உதவியை இந்தியாதான் புரிந்தது என ரணில் விக்ரமசிங்கே மே 9 2009 அன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கூறி உறுதிப்படுத்தியிருந்தார்.

·         இலங்கையின் கப்பல் படை தளபதி வசந்த கரணகோடா இந்தியா எவ்வாறெல்லாம் தங்களது கப்பல் படையை மேம்படுத்தவும் கடற்படை செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவி புரிந்தது என பல்வேறு இடங்களில் கூறியிருந்தார். 2009 நவம்பரில், இந்தியா இலங்கைக்குக் கொடுத்த போர்க் கப்பல்களை திரும்ப அனுப்ப வேண்டுமென இந்தியக் கப்பற்படை அதிகாரிகள் கோரியது (தி இந்துஸ்தான் டைம்ஸ், நவம்பர் 2009), இதற்கு இன்னொரு சாட்சியாகும்.

·         இந்தியாவின் NDTV தொலைக்காட்சியின் இராணுவ ஆய்வாளர் நிதின் கோகலேவின் என்பவர் எழுதிய “Sri Lanka – From War to Peace” புத்தகத்தில் இனப்படுகொலைப் போரில் இந்தியா உதவி செய்ததற்கானப் பல சாட்சியங்கள் உள்ளன. 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா சார்பில், ஐந்து எம்.ஐ-17 (Mi-17) இரக ஹெலிக்காப்டர்கள் வழங்கப்பட்டன. போரின் போது இது பெரும் உதவியாக இருந்ததை சிங்கள இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டதை அந்நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

·         அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து நோர்வே அளித்திருந்த Pawns of Peace அறிக்கை (Report 5/2011 – Evaluation) யில், இந்தியாவின் உளவுத்தகவல் பரிமாற்றம், இராணுவப் பயிற்சி உள்ளிட்ட உதவிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

·         2009 இல் போர் முடிந்த பிறகு, 2010ஆம் ஆண்டு, இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு. கோத்தபாய ராஜபக்சே Indian Defence Review பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில், இந்தியாவின் உதவிகளை உறுதிப்படுத்தியிருந்தார்.

·         மார்ச் 12 – 2009 அன்று ஐநா. தலைமைச் செயலகக் கூட்டத்தில், போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுமாறு இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் கூறியிருந்ததை, சார்லஸ் பெட்ரி அறிக்கை குறிப்பிடுகிறது. இது, இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

·         விஜய் நம்பியாரின் தம்பி சதீஷ் நம்பியார், புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்ததை, நோர்வே அமைதிப் பேச்சுவார்த்தை  குறித்த அளித்திருந்த Pawns of Peace அறிக்கை (Report 5/2011 – Evaluation) குறிப்பிடுகிறது.

·         இலங்கை அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கே, 2010ஆம் ஆண்டு வழங்கிய பேட்டியிலும், இந்தியா உதவியதை குறிப்பிட்டுள்ளார்.

·          மற்றும் லலித் வீரதுங்கே டெய்லி மிர்ரருக்கு வழங்கிய செவ்வியையும் சாட்சிக்கு உட்படுத்திய விஜய் அசோகன் இந்தியாவின் பங்களிப்பை விரிவாக ஐநா மனித உரிமை அமைப்பிற்கு அனுப்பிய அறிக்கையில் எழுதியிருந்தார்.

மேலுள்ள தகவல்களின்படி, 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கையின் விதி 1, 3(b), 3(e) ஆகியப் பிரிவுகளை, இந்தியா மீறியுள்ளது. தமிழீழத் தமிழர்களின் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியும், அப்போருக்கு உதவிகள் செய்தும், அப்படுகொலைகளுக்கு இந்தியா உதவியுள்ளது.

இந்தியாவின் உதவிகளை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1.  இந்தியா இனவழிப்பு நடக்க ஏதுவான சர்வதேச சூழலை உருவாக்கியதோடு இராணுவ மற்றும் ராஜதந்திர உதவிகளை இலங்கைக்கு முழுமையாக வழங்கியது. சமாதானப்  பேச்சுவார்த்தையின் பொழுது சமபலத்தில் இருந்த புலிகளின் தரப்பை பலமிழக்க செய்ய இந்தியா பெரிதும் வேலை செய்தது.

2.  சர்வதேச சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் படி இனவழிப்பை தடுக்கும் வல்லமையும் சூழலும் இந்தியாவிற்கு இருந்தது. எனினும், அதனை தடுக்காமல் விட்டதைக் கணக்கில் கொண்டு இந்தியாவின் இனவழிப்பு நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

3. போரின் போது எழுந்த சர்வதேச அழுத்தங்களை குறைத்து, இலங்கைக்கு எவ்வித அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டு இலங்கையை அரவணைத்து சென்றது இந்தியா.

(பதிவு இணையத்தில் வெளியான தமிழ்நெட்(Tamilnet) இணையத்தின் கட்டுரை செழுமைப்படுத்தப்பட்டு இங்கு தரப்படுகின்றது)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.