ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்:
மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுவதாவது: 

தில்லி சட்டப்பேரவை முடிவுகள் நரேந்திர மோடி ஆதிக்கக் குழுவினர் நடத்தி வரும் சர்க்கஸ் அரசியலுக்கு கொடுக்கப்பட்ட சாட்டையடியாகும்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. அணியின் நேரடித் தலைவராகக் களமிறங்கி சந்து பொந்துகளில் எல்லாம் பரப்புரை செய்தார் மோடி. நாட்டின் தலைமை அமைச்சர் என்பதையும் மறந்து அல்லது அந்த ஆர்ப்பரிப்பில் கெஜ்ரிவால்தான் தனது முதல் எதிரிபோல் கருதி, பரப்புரையை வடிவமைத்துக் கொண்டார் மோடி. எனவே, இத்தோல்வி பா.ச.க.வின் தோல்வியும், குறிப்பாக நரேந்திர மோடியின் தனிப்பட்டத் தோல்வியுமாகும்.

நாட்டின் சனநாயகத்தை மதிக்காதது மட்டுமின்றி, தன் கட்சியின் சனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு, ஓரு சிலரை தன் குழுவில் வைத்துக் கொண்டு, எதேச்சாதிகார அரசியல் நடத்தி வருகிறார் நரேந்திர மோடி. இந்த எதேச்சாதிகார கும்பலின் சர்க்கஸ் அரசியலைப் பயன்படுத்தி, இந்துத்துவா ஆதிக்கக் கட்டமைப்பை நாடெங்கும் நிறுவிட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முயன்று வருகிறது.

பா.ச.க.வின் படுதோல்விக்கான முகாமையானக் காரணங்களில் ஒன்று, ஒற்றைக்குழுவின் எதேச்சாதிகாரம். இரண்டு, இந்துத்துவா தீவிரவாதம். மூன்று, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் துரோகம். நான்கு, பா.ச.க.வில் நடைபெறும் உள்கட்சி சண்டை காரணமாக ஆம் ஆத்மிக்கு விழுந்த பா.ச.க. வாக்குகள்.

இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் பன்மைத்தன்மையை மறுத்து, இந்தியத் தேசிய வெறியையும் இந்தித் திணிப்பு வெறியையும் கொள்கையாகக் கொண்டதுதான் ஆம் ஆத்மிக் கட்சி என்ற போதிலும், இந்தி ஆதிக்க முகாம்களுக்குள் ஒன்றுக்கொன்று முரணான வலிவுள்ள பல்வேறு அமைப்புகள் உருவாவது நல்லதே.

மோடிக்கு எதிரி மோடியே என்றும், அற்பத்தன்மைகள் கொண்ட ஆரவாரப் பிரமுகரே மோடி என்றும் மோடியின் செயல்பாடுகளே மோடியை வீழ்த்தும் என்றும் ஓராண்டில் பா.ச.க.வின் உள்கட்சி போராட்டம் அம்பலத்திற்கு வெளிவரும் என்றும், ஏற்கெனவே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தமிழர் கண்ணோட்டம் இதழில் நாம் எழுதியிருந்தோம்.


பா.ச.க.வின் அடிப்படை உறுப்பினராக கிரண் பேடியை சேர்த்த அன்றே, தில்லி முதலமைச்சர் வேட்பாளராகவும் ஆக்கினார் நரேந்திர மோடி. தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியில், பா.ச.க.வின் உள்கட்சித் தகராறு கணிசமான பங்கு வகித்திருக்கும். இன்னும் போகப் போக மோடி ஆதிக்கக் குழுவினரின் அரசியல் சர்க்கசுக்கு எதிரான அடிகள் விழும் என்று எதிர்பார்க்கலாம். 

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.