ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பும் செயலலிதா – கருணாநிதி சீரழிவு அரசியலும்” - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

“நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பும் செயலலிதா – கருணாநிதி சீரழிவு அரசியலும்” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுவதாவது: 

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையாக மோதிக் கொண்டவர்கள் நரேந்திர மோடியும், அரவிந்த கெஜ்ரிவாலும் ஆவர். பா.ச.க. படுதோல்வி அடைந்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சி, அக்கட்சித் தலைமையே எதிர்பார்க்காத அளவிற்கு 95 விழுக்காட்டு இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, கெஜ்ரிவாலுக்கு தொலைப்பேசியில் வாழ்த்துத் தெரிவித்ததும், ஒரு தேநீர் சந்திப்புக்கு வருக என அழைத்ததும், அதனை ஏற்று கெஜ்ரிவால் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து உரையாடியதும் ஏடுகளில் வந்துள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடியும், காங்கிரசுத் தலைவி சோனியா காந்தியும் கடுமையாக மோதிக் கொண்டனர். தேர்தல் முடிவில், காங்கிரசு படுதோல்வி அடைந்தது. அதேவேளை, தலைமை அமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில், சோனியா காந்தியும் பதவியிழந்த தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும் இராகுல் காந்தியும் கலந்து கொண்டனர்.

இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டின் அரசியல் சீரழிவை தமிழ் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

கருணாநிதியும் செயலலிதாவும் வெவ்வெறு பகை நாடுகளைச் சேர்ந்த அரசன் – அரசி போல எந்நேரமும், ஒருவரை எதிர்த்து ஒருவர் பேசுவதும், ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொள்வதும், செயலலிதா முதலமைச்சராக இருந்தால் கருணாநிதி சட்டப் பேரவைக்கு போகாமல் ஒதுங்குவதும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தால் சட்டப் பேரவைக்கு போவதை செயலலிதா தவிர்ப்பதும் என்ற பண்புக்கேடான தமிழக அரசியலை, தமிழ் மக்கள் அருவருத்தால்தான் இங்கு அரசியல் பண்பு வளரும்.

கருணாநிதியும் செயலலிதாவும் தங்களின் மூலத் தலைவராக ஒருவரையேக் கொண்டுள்ளார்கள். அத்துடன், கருணாநிதியும் செயலலிதாவும் கொள்கை என்று பேசிக் கொள்ளும் செய்திகளும் ஒன்றுபோல்தான் இருக்கின்றன. பிறகு இவர்கள், சட்டமன்றத்தில்கூட ஒன்றாக அமர்வதில்லை. காவிரி – முல்லைப் பெரியாறு போன்ற முக்கியமான சிக்கல்களில் கூட, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முடிவதில்லை என்றால், இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

கருணாநிதியும் செயலலிதாவும் நடத்தும் பகை அரசியல், தமிழ் மக்களை இரு கூறாக்கி, அந்த மக்களிடையே அரசியல் பகை உணர்ச்சியைத் தீவிரப்படுத்தி, அவரவரும் ஒரு நிரந்தர மக்கள் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டு அதனால பலனடைகிறார்கள். இதனால், கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் அவ்வப்போது, ஆட்சி கிடைக்கிறது, நல்ல ‘அறுவடை’ நடக்கிறது.

இரு கூறாகத் தமிழ் மக்களைப் பிரித்து, அந்த இருகூறு மக்களும் களப் போராட்டங்களுக்கு வராமல் கருணாநிதியும் செயலலிதாவும் தடுத்து விடுகிறார்கள். இதனால், காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் சிக்கல், அணுஉலை எதிர்ப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு, சமற்கிருதத் திணிப்பு – இந்தித் திணிப்பு எதிர்ப்பு போன்ற முக்கிய சிக்கல்களில் தமிழகம் பெரும்பாதிப்புக்கும் பேரிழப்புக்கும் உள்ளாகிறது.

கருணாநிதியையும் செயலலிதாவையும் இனி யாராலும் திருத்த முடியாது. திருந்தி அரசியல் நாகரிகம் அடைந்தால், அது தங்களுக்குத்தான் பேரிழப்பு எனப் புரிந்து கொண்டவர்கள் கருணாநிதியும் செயலலிதாவும் ஆவர். இந்நிலையில், மக்கள் மனத்தில்தான் மாற்றம் வர வேண்டும்.

தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் வளர்த்துள்ள தலைவர் வெறி தன்னல அரசியலைப் புறந்தள்ளி, தமிழின உரிமைக்கும், தமிழின மாண்புக்கும் உரிய தமிழ்த் தேசிய அரசியலை ஏற்கும் மாற்றத்தை மக்கள் பெற வேண்டும். நம்முடைய ஆசான் திருவள்ளுவப் பெருந்தகை, அரசியல் குறித்து கூறிய ஒரு நாகரிகத்தை நினைவு கூற வேண்டும்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (குறள், 579)

தம்மை துன்புறுத்தும் இயல்பு உடையவரிடமும், அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டு பரிவு காட்டும் பண்பு அரசர்க்கு உரிய தலையாயப் பண்பாகும். 

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.