மேக்கேதாட்டு முற்றுகைப் பேரணியில் சென்றவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது! - பெ. மணியரசன் அறிக்கை!
மேக்கேதாட்டு முற்றுகைப் பேரணியில் சென்றவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கர்நாடக அரசு தமிழகத்திற்கு எதிராக, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் இரண்டு சட்ட விரோத அணைகள் கட்டுவதைத் தடுத்திடும் நோக்கத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து 7.03.2015 அன்று முற்பகல் நடைபயணமாகச் சென்று மேக்கேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம்.
முறையாக அனுமதி கேட்டு தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளரிடம் விண்ணப்பம் கொடுத்தோம். அனுமதி மறுத்து அவர் கடிதம் கொடுத்தார்.
இவ்வாறான மக்கள் திரள் சனநாயகப் போராட்டங்கள் நடைபெறும்போது காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டக்காரர்களைக் குறிப்பிட்ட இடத்தில் கூடவிட்டு சிறிது தொலைவு ஊர்வலமாக நகர்ந்த பின், அவர்களை முன்தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்து மண்டபங்களில் வைத்து மாலையில் விடுவிப்பது வழக்கமாக உள்ளது. இந்த அணுகுமுறை போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமான மோதலைத் தவிர்த்து வருகிறது.
இதேபோல் தான் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 7.3.2015 அன்று தேன்கனிக் கோட்டை மணிக்கூண்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டவர்களைச் சிறிது தொலைவிலேயே ஜவளகிரி சாலையில் முன்தடுப்பு கைது செய்து மூன்று மண்டபங்களில் அடைத்தனர்.
காவல்துறை கைது செய்த போது எந்த அத்துமீறலும் வன்முறையும் இடம் பெறவில்லை. ஆண்கள், பெண்கள் அனைவரும் கைதுக்கு உடன்பட்டு தாமாகவே காவல்துறையினரின் ஊர்திகளில் ஏறிக் கொண்டனர். அன்று மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர்.
ஆனால் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் அந்தப் பேரணியில் கலந்து கொண்ட 95 பெண்கள் உட்பட 1286 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 147,188 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதல்தகவல் அறிக்கை தயார் செய்திருப்பதாக இன்று நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. இது பற்றி கிருட்டிணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவரும் உறுதி செய்திருக்கிறார்.
தமிழகத்தின் உயிர் பிரச்சினையான காவிரி நீர் உரிமை பிரச்சினையில் சனநாயக வழியில் பேரணி சென்ற உழவர்கள், உணர்வாளர்கள் ஆகியோர் மீது தமிழகத்திலுள்ள நடைமுறைக்கு மாறாகக் குற்றவழக்கு பதிவு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. காவிரித் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்த தீர்ப்புகளைக் குப்பைக் கூடையில் தூக்கிவீசிவிட்டு தமிழகத்தின் காவிரி உரிமையை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கும் வகையிலும், நடுவண் அரசிடம் கோரிக்கை வைக்கும் வகையிலும் பேரணியில் சென்றவர்களை தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தொடர்ந்து சட்டவிரோதமாக நடந்து கொண்டு தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறித்துவரும் கர்நாடகத்திடம் நற்சான்று வாங்குவதற்காகத் தமிழக அரசு தனது சொந்த மக்களையே பழிவாங்குகிறதா என்ற ஐயத்துக்குத் தமிழக அரசுதான் விடையளிக்க வேண்டும்.
7.3.2015 தேன்கனிக் கோட்டை பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து புறப்படத் தயாராக இருந்த உழவர்களையும், உணர்வாளர்களையும் கணக்கெடுப்பதற்காக 5.3.2015 லிருந்தே தமிழகமெங்கும் காவல்துறை கண்காணித்து விசாரித்து ஓர் உளவியல் நெருக்கடியைக் கொடுத்தது.
முறைப்படி தனியார் வாடகை ஊர்திகளில் அவர்கள் புறப்படத் தயாரானபோது அந்த ஊர்தி எண் உட்பட பல விவரங்களைக் கேட்டு அங்கங்கே காவல்துறையினர் நெருக்கடி கொடுத்தனர். இப்போது அறவழியில் பேரணி சென்ற உழவர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மீதும், தனித்தனியே கலந்து கொண்ட உணர்வாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு இவ்வழக்குகளைக் கைவிடுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
Leave a Comment