ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி நீர் கோருவதைக் கைவிட்டு கடல்நீரைப் பயன்படுத்துமாறு தமிழகத்துக்கு சுப்பிரமணியம் சாமி அறிவுரை கூறும் பச்சை தமிழினத் துரோகத்திற்குப் பாசக தலைமையின் பதில் என்ன? - பெ. மணியரசன் கேள்வி?

காவிரி நீர் கோருவதைக் கைவிட்டு கடல்நீரைப் பயன்படுத்துமாறு தமிழகத்துக்கு சுப்பிரமணியம் சாமி  அறிவுரை கூறும் பச்சை தமிழினத் துரோகத்திற்குப் பாசக தலைமையின் பதில் என்ன?

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் கேள்வி?
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுவதாவது: 

பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், கர்நாடகம் பிரித்தானியர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டு விட்டது ஆனால் தமிழ்நாடு ஒரு மாகாணமாக இருந்து வெள்ளையர் ஆட்சியில் வளம் பெற்றது என்றும், எனவே காவிரிக்கான போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.


அத்துடன் கடல் நீரை நன்னீராக மாற்றி அந்நீரை காவிரி ஆற்றின் எதிர்த்திசையில் இருந்து ஏற்றி தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசியல் ஆதாயத்துக்குரிய கருவியாக தமிழ்நாடு காவிரியைப் பயன்படுத்துகிறது என்றும் பேசியுள்ளார்.

சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளவை அனைத்தும் வரலாற்று அடிப்படையிலும் நடைமுறை உண்மை அடிப்படையிலும் பொய்யானவை. இஸ்ரேல் கடல் நீரைப் பயன்படுத்துவதைப் போல் தமிழ்நாடும் கடல்நீரை உப்பு நீக்கிப் பயன்படுத்தட்டும் என்கிறார். தன்னைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகக் கூறிக் கொள்ளும் சுப்பிரமணியம் சாமி தமிழகத்துக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும் இக்கூற்று.

இஸ்ரேல் மக்கள் தொகையே 80 இலட்சம்தான். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியே இருபத்தோரு இலட்சம். இஸ்ரேல் நிலப்பகுதியில் கணிசமானவை சாகுபடிக்குத் தகுதியில்லாத பாலை நிலம். தமிழ்நாட்டில் 24 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரால் பாசனம் பெறுகிறது. காரைக்கால் உள்ளிட்டு 20 மாவட்டங்கள் காவிரி நீரால் குடிநீர் பெறுகின்றன. இவற்றையெல்லாம் கடல்நீரை நன்னீராக மாற்றுவதன் மூலம் ஈடுகட்டவே முடியாது என்பது சுப்பிரமணியம் சாமிக்குத் தெரியும்.

கடல்நீரை உப்பு நீக்கி அந்நீரை காவிரி ஆற்றின் எதிர்த்திசையில் மேற்கு நோக்கி ஏற்றி தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளட்டும் என்கிறார். நிலஅமைப்பில் காவிரி ஆற்றின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ஒருவேளை ஊழிப்பெருவெள்ளம் வந்தால்தான் தண்ணீர் ஏறும். மற்றபடி கடல்நீரை உப்பு நீக்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான அடிகள் உயரத்திற்கு மேல்நோக்கி காவிரியில் தண்ணீரை ஏற்றவே முடியாது. இப்படிப்பட்ட நடைமுறை உண்மைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஏதோ ஒரு தன்னலத்திற்காக கர்நாடகத்தை மகிழ்ச்சிப்படுத்த தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்துள்ளார் சுப்பிரமணியம் சாமி. பாரதிய சனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராகவும் தலைமை உத்தி (strategic committee) வகுக்கும் குழுவின் தலைவராகவும் உள்ள சுப்பிரமணியம் சாமி நீதித்துறையின் உயர் அமைப்புகளான உச்சநீதி மன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு எதிராகப் பேசுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசுவதாகும். இதை பாரதிய சனதா கட்சி ஏற்றுக் கொள்கிறதா என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி சுப்பிரமணியம் சாமியின் தமிழக விரோத மற்றும் சட்ட விரோத கருத்துகளுக்குப் பதில் கூற வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாரதிய சனதா கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்ஷா, சுப்பிரமணிய சாமியின் தமிழக விரோத மற்றும் சட்ட விரோத பேச்சுக்கு என்ன மறுமொழி கூறுகிறார் என்பதை தமிழகம் எதிர்பார்க்கிறது. வழக்கம்போல் பாரதிய சனதா கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் சுப்பிரமணிய சாமியின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லையெனில் தமிழகத்துக்கெதிரான மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சுப்பிரமணியம் சாமியின் பேச்சை பாரதிய சனதா கட்சியின் தலைமை ஏற்றுக் கொள்கிறது என்று தமிழக மக்கள் கருதுவார்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் சுப்பிரமணியம் சாமியின் தமிழக விரோத வஞ்சகக் கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.