நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் மீதும் 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு, அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!
நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் மீதும் 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு, அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும், மற்றும் அக்கட்சித் தோழர்கள் 40 பேர் மீதும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 124A, 143, 153A, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
கடந்த மே 24 அன்று, திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டில் அவர்கள் பேசியதற்காக, இவ்வழக்கு போடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த சனநாயக விரோத நடவடிக்கைக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக்காலமாக அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழின உணர்வாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் முடிவெடுத்து, வரிசையாக இவ்வாறு வழக்குகளை போட்டு வருகிறது. ஆர்ப்பாட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுத்து வருகிறது.
செண்பகவல்லி அணைக் கோரிக்கைக்காக, 31.05.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம் – வாசுதேவநல்லூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கடைசி நேரத்தில், 30.05.2015 அன்று மாலை 4 மணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன், திருச்சி - திருவெறும்பூரில், 06.05.2015 அன்று நடைபெறவிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தில் 20 தமிழர்களைக் கடத்தி சுட்டுக் கொன்றதற்கு கண்டனச் சுவரொட்டி போட்டதற்காக, இ.த.ச. 153A, TNOPPD (3) பிரிவுகளின்படி, என் மீதும், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் மீதும் வழக்குப் பதிவு செய்து, தோழர் கவித்துவனை சிறையில் அடைத்தார்கள்.
இப்பொழுது, நாம் தமிழர் கட்சி மாநாட்டில் பேசியதற்காக அக்கட்சி நிறுவனர் மீதும், மற்ற பொறுப்பாளர்கள் மீதும் கடுமையான பிணை மறுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
தோழர் சீமான் பல ஆண்டுகளாக தமிழீழம் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் இன உரிமைகள் குறித்து பேசி வரும் பேச்சைத்தான் திருச்சி மாநாட்டிலும் பேசியுள்ளார். அப்பொழுதெல்லாம், அ.இ.அ.தி.மு.க. அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.இ.அ.தி.மு.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவைப் பெற்று, அதன் தேர்தல் பரப்பரைக்கு தோழர் சீமானின் சொற்பொழிவை பயன்படுத்திக் கொண்டது.
திருச்சி மாநாட்டில், அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வோடும் அ.இ.அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இப்பொழுது இவ்வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அரசுக்கு எதிராக பகையுணர்ச்சியைத் தூண்டக் கூடிய பேச்சு என்று குற்றம்சாட்டி 124A பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை (AIADMK Government) விமர்சிப்பதை அரசைக் (State) கவிழ்க்கக் கூடிய நோக்கம் கொண்டதாகக் கருத முடியாது. ஆட்சி குறித்த விமர்சனங்களையெல்லாம் 124A-வாகக் கருதினால் கருத்துரிமை என்பது கடுகளவும் இருக்காது.
வெள்ளைக்காரன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலனிய ஆதிக்கத்திற்கு உகந்த எதேச்சாதிகாரப் பிரிவான 124A பிரிவை, விடுதலை பெற்ற இந்தியாவில், தண்டனைச் சட்டத்தில் வைத்திருப்பதே இந்திய அரசமைப்புச் சட்ட விதி 19க்கு நேர் எதிரானதாகும். அது நீக்கப்பட வேண்டிய பிரிவு! அந்தப் பிரிவைப் பயன்படுத்தி, அ.இ.அ.தி.மு.க. அரசு தோழர் சீமான் மீதும் மற்ற தோழர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பது சனநாயக விரோதச் செயலாகும்; பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகும்.
124A பிரிவைப் போலவே, 153A பிரிவும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. வர்ண சாதி ஆதிக்கத்தை பற்றியும், பறிபோகும் தமிழர்கள் உரிமைகள் குறித்தும் பேசினால் கூட, பழிவாங்குவதற்காக இந்த 153A-வை பயன்படுத்த முடியும். ஏனெனில், பல்வேறு மொழி, இன, மத, சமூக மக்களிடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி இந்த 153A பிரிவின் கீழ் வழக்குப் போட முடியும்.
ஒருவர் மத – இன மோதல்களை உண்டாக்கும் வகையில் உண்மையிலேயே ஒருவர் நடந்து கொண்டிருந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 505(2) இருக்கிறது. எனவே, இந்த 153A என்பது அரசியலில் தங்களுக்கு ஆகாதவர்களைப் பழிவாங்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
காவல்துறை அனுமதியோடு அமைதியாக நடந்து முடிந்த மாநாடு குறித்து, சட்ட விரோதமாகக் கூடியக் கூட்டம் என்றும் அரசு அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படாத நடவடிக்கை என்றும் (143, 188) போட்டிருப்பதும் போலிக் குற்றச்சாட்டுகளே!
அ.இ.அ.தி.மு.க. அரசு அண்மைக்காலமாக தமிழின உணர்வாளர்களை தமிழ்த் தேசிய அமைப்புகளை பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் போடுவது, நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஆகிய சனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும் மற்றுமுள்ள 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கைக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Leave a Comment